- வைப்பீடு வசதி (SDFR) 13%; கடன் வசதி (SLFR) 14%
- நியதி ஒதுக்கு விகிதம் (SRR) மாற்றமில்லை: 4%
- பணவீக்க அழுத்தம் குறைவடைந்தமையே காரணம்
- இச்சலுகை பொருளாதார மீட்சிக்கு உத்வேகம் அளிக்கும் என எதிர்பார்ப்பு
இலங்கை மத்திய வங்கியின் நாணயச்சபையானது நிலையான வைப்பு வசதி விகிதம் மற்றும் நிலையான கடன் வசதி வீதம் ஆகிய நாணயக் கொள்கை வீதங்களை அவற்றின் தற்போதைய மட்டங்களில் இருந்து 2.5% ஆல் குறைக்க தீர்மானித்துள்ளது.
நிலையான வைப்பு வசதி வீதம் (SDFR) மற்றும் நிலையான கடன் வசதி வீதம் (SLFR) ஆகிய அதன் நாணயக் கொள்கை வீதங்களை முறையே 15.50% இலிருந்து 13% ஆகவும் 16.50% இலிருந்து 14% ஆகவும் குறைக்க தீர்மானித்துள்ளது.
இதேவேளை நியதி ஒதுக்கு விகிதத்தை (SRR) 4% ஆக மாற்றமின்றி பேண இதன் போது தீர்மானிக்கப்பட்டுள்ளதாக மத்திய வங்கி வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
நேற்று (31) இடம்பெற்ற இலங்கை மத்திய வங்கியின் நாணயச் சபைக் கூட்டத்தில் இத்தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது.
பணவீக்கம் எதிர்பார்த்ததை விட வேகமாக குறைவடைந்தமை, பணவீக்க அழுத்தங்கள் படிப்படியாக குறைவடைந்தமை ஆகிய நிலைமைகளை கருத்தில் கொண்டு நாணயக் கொள்கை நிலைமைகளை தளர்த்தும் நோக்கில் சபை இந்த முடிவுக்கு வந்துள்ளது.
நிதிச் சந்தைகளில் அழுத்தங்களைத் தளர்த்தும் அதே வேளையில், 2022 இல் காணப்பட்ட வரலாறு காணாத நெருக்கடியிலிருந்து பொருளாதாரம் மீண்டு வருவதற்கு இத்தகைய நாணயக் கொள்கை நிலைப்பாடு தளர்த்தப்படுவதானது சிறந்த உத்வேகத்தை அளிக்கும் என எதிர்பார்ப்பதாக, மத்திய வங்கி குறிப்பிட்டுள்ளது.
Monetary Policy Review No. 04 of June 2023 - English.pdf (246.08 KB)
Monetary Policy Review (T ) - 01.06.2023.pdf (260.38 KB)
Add new comment