வவுனியா குடிவரவு, குடியகல்வு அலுவலகம் முன் 10 பேர் கைது

வவுனியாவிலுள்ள குடிவரவு, குடியகல்வு பிராந்திய அலுவலகம் முன்பாக 10 பேரைக் கைது செய்ததாக வவுனியா பொலிஸார் தெரிவித்தனர். முறைகேடாக வரிசையில் புகுந்து இடம்பிடித்த இவர்கள், பணத்தை பெற்றுக் கொண்டு, வேறு சிலருக்கு முன்னுரிமை வழங்கியதன் பேரிலேயே இவர்கள் கைது செய்யப்பட்டதாக  பொலிஸார் தெரிவித்தனர்.

இச்சம்பவம் நேற்றுமுன்தினம் (30) இரவு 11.00 மணியளவில் இடம்பெற்றுள்ளது.

சம்பவம் குறித்து மேலும் தெரியவருவதாவது,

வவுனியா குடிவரவு மற்றும் குடியகல்வு பிராந்திய அலுவலகம் முன்பாக வரிசையில் பணிக்கு ஆட்களை நிறுத்தி, பின்னர் வருபவர்களுக்கு அந்த வரிசையில் இடத்தை பெற்றுக் கொடுப்பதற்கு 5,000 ரூபாவும், வரிசையின்றி உரிய நடைமுறைகளுக்கு அப்பால் கடவுச்சீட்டைப் பெற்றுக்கொடுக்க 25,000 ரூபாவும் இடைத் தரகர்களினால் பெறப்படுவதாக முறைப்பாடுகள் தெரிவிக்கப்பட்டிருந்தன. இதனையடுத்து, 30 ஆம் திகதி இரவு இரவு 11.00 மணியளவில், வவுனியா குடிவரவு மற்றும் குடியகல்வு பிராந்திய அலுவலகம் முன்பாக பொலிஸார் சோதனையில் ஈடுபடுத்தப்பட்டனர்.

இதன்போது, தேவை எதுவுமின்றி, பணத்துக்காக வரிசையில் நின்றோர், சந்தேகத்துக்கிடமான முறையில் அலுவலகம் முன்பாக இரவில் ஒன்று கூடியோர் என, பத்து பேரை பொலிஸார் கைது செய்தனர்.

மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு, இவர்களுக்கு எதிராக நடவடிக்ககை எடுக்கப்படவுள்ளது.

(வவுனியா விசேட நிருபர்)


Add new comment

Or log in with...