தேசிய பொசொன் நிகழ்வுக்கு அரசாங்கம் அனுசரணை வழங்கவில்லை எனும் குற்றச்சாட்டு முற்றிலும் பொய்யானது!

- 2 அமைச்சுக்கள், 1 திணைக்களத்தினால் ரூ. 2 கோடி 88 இலட்சம் ஒதுக்கீடு

2023ஆம் ஆண்டு நடைபெறவுள்ள அரச பொசொன் நிகழ்வுக்கும், மிஹிந்தலை புனித பூமியை அடிப்படையாகக் கொண்டு நடைபெறும் பொசொன் நிகழ்வுகளுக்கும் அரசாங்கத்தின் அனுசரணை கிடைக்கவில்லை என பல்வேறு தரப்பினரும் குற்றஞ்சாட்டி வருகின்றனர்.

இது தொடர்பில் புத்த சாசன, மத, கலாச்சார அலுவல்கள் அமைச்சு, பொது நிர்வாக அமைச்சு, உள்நாட்டலுவல்கள் மாகாண சபை உள்ளூராட்சி அமைச்சு, பாதுகாப்பு அமைச்சு, இலங்கை பொலிஸ், அநுராதபுரம் மாவட்ட செயலகம், நீர் வழங்கல் மற்றும் தோட்ட உட்கட்டமைப்பு அபிவிருத்தி அமைச்சு, லேக் ஹவுஸ் நிறுவனம் என்பவற்றிடமிருந்து பெறப்பட்ட தகவல்களின் மூலம் பின்வரும் தகவல்கள் உறுதிப்படுத்தப்பட்டன.

ரஞ்சித் விஜேவர்தனவின் வழிகாட்டலின் கீழ் 1963ஆம் ஆண்டு அப்போதைய லேக் ஹவுஸ் நிறுவனம் தனது சமய மற்றும் சமூகப் பணிகளுக்காக லேக் ஹவுஸ் மிஹிந்தலை ஆலோக பூஜையை ஆரம்பித்தது. அதன் பின்னர் 59 வருடங்களாக ஆலோக பூஜை, பிரித்ஓதல், பெரஹரா, சைத்தியவிற்கு நிறம்பூசுதல் உள்ளிட்டவற்றுக்கு நிதியுதவி வழங்கப்பட்டு வருகின்றது.

2020 / 2021 கொவிட் சமயத்திலும், 2022 ஆம் ஆண்டிலும் முறையே 4.6 மில்லியன் ரூபா, 2.3 மில்லியன் ரூபா மற்றும் 2.9 மில்லியன் ரூபா என உதவிகள் வழங்கப்பட்டுள்ளன. 2018 ஆம் ஆண்டு முதல் லேக் ஹவுஸ் தொடர்ச்சியான நட்டத்தை ஈட்டும் நிறுவனமாக மாறியுள்ளதோடு 2022 ஆம் ஆண்டில் 192 மில்லியன் ரூபா நிதி இழப்பு ஏற்பட்டுள்ளது.

லேக் ஹவுஸ் நிறுவனத்திற்கு ஏற்பட்டுள்ள நஷ்டம் காரணமாக இவ்வருடம் இவ்வாறான வேலைத் திட்டங்களுக்கு அனுசரணை வழங்க முடியாது என லேக் ஹவுஸ் நிர்வாகம் மிஹிந்தலை பொசொன் குழுவிற்கு அறிவித்துள்ளது.

மிஹிந்தலை பொசொன் பெரஹரவிற்காக மட்டும் மிஹிந்தலை ரஜமஹா விகாராதிபதி வணக்கத்திற்குரிய வலஹங்குனவெவ தம்மரதன தேரரிரினால் அநுராதபுரம் மாவட்ட செயலாளருக்கு 170 இலட்சம் ரூபா மதிப்பீட்டுத் தொகையொன்றை புத்தசாசன, சமய மற்றும் கலாசார அலுவல்கள் அமைச்சின் செயலாளருக்கு அனுப்பி வைத்திருந்தார்.

ஆனால் பாராளுமன்றத்தினால் விதித்துள்ள அரச விதிமுறைகளின் பிரகாரம் இவ்வளவு பெரிய தொகையை ஒதுக்க முடியாது என அமைச்சின் செயலாளர் சோமரத்ன விதானபத்திரன அறிவித்துள்ளார். 2023 தேசிய பொசொன் நிகழ்வுக்கு 30 லட்சம் ரூபா ஒதுக்க வரவு செலவுத்திட்டத்தில் அங்கீகாரம் வழங்கப்பட்டுள்ளது. மேலதிகமாக ஒரு இலட்சம் ரூபா வழங்க முடியும் எனவும் செயலாளர் தெரிவித்துள்ளார்.

அனைத்து அமைச்சுக்களின் அங்கீகரிக்கப்பட்ட வரவு செலவுத் திட்ட ஒதுக்கீடுகளில் 6% வீதத்தை குறைக்க அமைச்சரவை தீர்மானித்துள்ள போதும் இந்த நிகழ்ச்சித்திட்டத்திற்கு குறித்த தொகை ஒதுக்கப்பட்டுள்ளதாக செயலாளர் சுட்டிக்காட்டியுள்ளார்.

தேசிய பொசொன் நிகழ்வை முன்னிட்டு நீர்விநியோகம் வழங்குவதற்காக 15.7 மில்லியன் ரூபா செலவிட நடவடிக்கை எடுத்துள்ளதாக நீர் வழங்கல் வடிகாலமைப்பு சபைத்தலைவர் நிசாந்த ரணதுங்க தெரிவித்தார்.

பொசொன் வலயம் அமைப்பதற்காக முப்படை மற்றும் சிவில் பாதுகாப்புப் பிரிவினர் பயன்படுத்தப்பட்டுள்ளதாக பாதுகாப்பு அமைச்சு தெரிவித்தது.

பொசொன் நிகழ்வுக்கு வரும் சுமார் 60 ஆயிரம் பக்தர்களுக்கு பகலுணவு வழங்க அநுராதபுரம் மாவட்டத்திலுள்ள அனைத்து பிரதேச செயலகங்களும் பங்களிப்பு செய்ய இருப்பதாக அநுராதபுரம் மாவட்ட செயலாளர் ஜே.எம்.ஜே.கே ஜெயசுந்தர தெரிவித்தார்.மலசலகூட வசதி அளிக்க அநுராதபுரம் நகர சபை நடவடிக்கை எடுத்துள்ளது.

பாதுகாப்பிற்காக மேலதிக பொலிஸார் ஈடுபடுத்தப்பட்டுள்ளதோடு ரயில் திணைக்களம் விசேட போக்குவரத்து ஒழுங்குகளை முன்னெடுத்துள்ளது.இபோச வும் பயணிகள் போக்குவரத்து அதிகார சபையும் இணைந்து விசேட பஸ் சேவைகளை முன்னெடுக்க இருப்பதாகவும் மாவட்ட செயலாளர் தெரிவித்தார்.

தேசிய பொசொன் நிகழ்விற்காக 10 மில்லியன் ரூபா அனுப்பியுள்ளதாக பொதுநிர்வாக அமைச்சின் செயலாளர் கே.டீ.என். ரஞ்சித் தெரிவித்தார்.

இதற்கமைய இரு அமைச்சுக்கள் மற்றும் ஒரு திணைக்களத்தின் ஊடாக மாத்திரம் 28.8 மில்லியன் ஒதுக்கப்பட்டுள்ளது தெளிவாகிறது. இது தவிர மேலும் மாவட்ட செயலகம்,பிரதேச செயலங்கள்,நகர சபை,பிரதேச சபைகளின் ஊடாக மேலும் நிதி வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

இத்தகைய பின்னணியில் 2023 தேசிய பொசொன் நிகழ்விற்கு அரசாங்க அனுசரணை கிடைக்கவில்லை என்ற குற்றச்சாட்டு முற்றிலும் பொய்யானது என்பது உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.


Add new comment

Or log in with...