நிலவின் கர்ப்பங்கள் நூல் வெளியீட்டு விழா

இலக்கிய வாதிகள் ஒரு வகையில் சமூக போராளிகளே. சமூக அவலங்களை சுட்டிக்காட்டும் காலக் கண்ணாடிகள் என, அம்பாறை மாவட்ட மேலதிக அரசாங்க அதிபர் வேதநாயகம் ஜெகதீசன் காரைதீவில் நடைபெற்ற "நிலவின் கர்ப்பங்கள்" நூல் வெளியீட்டு விழாவில் உரையாற்றுகையில் தெரிவித்தார்.

காரைதீவின் இளங்கவிஞர் விபுலசசி எழுதிய "நிலவின் கர்ப்பங்கள்" கன்னி கவிதை நூல் வெளியீட்டு விழா (27) சனிக்கிழமை காரைதீவில் நடைபெற்றது.

கிழக்கு மாகாண கூட்டுறவுத்துறை ஆணையாளரும் கிழக்கு மேலதிக மாகாண கல்வி பணிப்பாளருமான எந்திரி நடராஜா சிவலிங்கம் தலைமையில் நடைபெற்ற இவ் விழாவில், பிரதம அதிதியாக அம்பாறை மாவட்ட மேலதிக அரசாங்க அதிபர் கலந்து சிறப்பித்தார்.

அவர் மேலும் பேசுகையில், பொருளாதார நெருக்கடி மிகுந்த இந்த காலகட்டத்தில் கவிஞர் விபுலசசி, தனது தந்தை தமிழாசான் அமரர் நல்லதம்பி மனோகரன் அவர்களின் 24 ஆவது வருட ஞாபகார்த்தமாக இந்த கவிதை நூல் தொகுதியை வெளியிடுவது சாதாரணமானதல்ல.

கவிஞர் விபுலசசி மனித அவலங்களை மனிதத்துவத்தை சிறப்பாக சொல்லுகின்றார். இந்தக் கவிதை நூல் சாகித்திய பரிசு பெறும் என்பதில் ஐயமில்லை என்றார்.

நூல் வெளியீட்டு உரையை சம்மாந்துறை ஆதார வைத்தியசாலையின் பொது சத்திரசிகிச்சை நிபுணர் வைத்திய கலாநிதி டாக்டர் நடேசன் அகிலன் நிகழ்த்தினார். வாழ்த்துரைகளை கிழக்குப் பல்கலைக்கழக தொழில்நுட்பபீட பீடாதிபதி கலாநிதி தவநாயகம் மதிவேந்தன் மற்றும் கவிஞர் வில்லு பாரதி முரளிதரன் ஆகியோர் நிகழ்த்தினர்.

 


Add new comment

Or log in with...