மத நல்லிணக்கத்தை சீர்குலைத்ததாக ராஜாங்கனை சத்தா ரத்தன தேரர் கைது

மத நல்லிணக்கத்தை சீர்குலைக்கும் வகையில் கருத்து வெளியிட்டமை தொடர்பில், ராஜாங்கனை சத்தா ரத்தன தேரர் கைது செய்யப்பட்டுள்ளார்.

நேற்று (28) இரவு அநுராதபுரம், ஸ்ராவஸ்தி பிரதேசத்தில் வைத்து அவர் குற்றப் புலனாய்வுப் பிரிவினரால் கைது செய்யப்பட்டுள்ளார்.

அவர், மத நல்லிணக்கத்திற்கு குந்தகம் விளைவிக்கும் வகையில் கருத்து வெளியிடுவதாக, பாஹியங்கல ஆனந்த சாகர தேரர் செய்த முறைப்பாட்டின் பேரில் மேற்கொள்ளப்பட்ட விசாரணைகளின் அடிப்படையில் ராஜாங்கனை சத்தா ரத்தன தேரர் கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

தேரரை இன்று (29) கோட்டை நீதவான் நீதிமன்றில் முன்னிலைப்படுத்த நடவடிக்கை எடுக்கப்படவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

ஞானசார தேரர் மத நல்லிணக்கத்தை சீர்குலைப்பதாக தெரிவித்து அதற்கு எதிர்ப்புத் தெரிவிக்கும் வகையில் பல்வேறு வீடியோக்களை, ராஜாங்கனை சத்தா ரத்தன தேரர் வெளியிட்டுள்ளதோடு, பிரபல சிங்கள பாடகர் இராஜ் உள்ளிட்டோருக்கு எதிராகவும் இவர் பல்வேறு கருத்துகளை வெளியிட்டு வந்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.


Add new comment

Or log in with...