ஆப்கானிஸ்தானுக்கு எதிரான ஒருநாள் தொடருக்கான இலங்கை குழாமை தீர்மானிப்பதற்கு இலங்கை அணித் தலைவர் தசுன் ஷானக்க நாடு திரும்பும் வரை இலங்கை கிரிக்கெட் தேர்வுக் குழுவினர் காத்துக் கொண்டிருக்கின்றனர்.
31 வயது சகலதுறை வீரரான தசுன் ஷானக்க இந்திய பிரீமியர் லீக்கில் குஜராத் டைடன்ஸ் அணியில் இடம்பெற்றுள்ளார்.
“தேர்வாளர்கள் இன்னும் அணியை இறுதி செய்யவில்லை. அணித் தலைவர் ஷானக்க கூட்டத்தில் பங்கேற்பதற்காக காத்துள்ளனர்” என்று இது தொடர்பில் நெருக்கமான வட்டாரம் ஒன்று குறிப்பிட்டுள்ளது.
“அவருடன் டெலி கொன்பிரன்ஸ் மூலம் ஆலோசனை பெற முடியும் என்றபோதும் நாம் உலகக் கிண்ண தகுதிகாண் போட்டியில் ஆட வேண்டி இருக்கும் சூழலில், அவரது நேரடி பங்கேற்பு முக்கியமானது என்று தேர்வாளர்கள் நம்புகின்றனர்” என்று குறிப்பிடப்பட்டுள்ளது.
குஜராத் டைடன்ஸ் அணி வியாழக்கிழமை (26) ஐ.பி.எல் தொடரின் இரண்டாம் தகுதிச் சுற்றில் மும்பை இந்தியன்ஸ் அணிக்கு எதிராக ஆடியது. இந்நிலையில் தசுன் ஷானக்க ஓரிரு நாட்களில் நாடு திரும்புவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
“இலங்கை அணி வரும் நாளை (29) அம்பாந்தோட்டைக்கு புறப்பட்டுச் செல்லவுள்ளது. ஷானக்க வந்த உடன் நாம் அணியை இறுதி செய்வோம்” என்று அந்த வட்டாரம் கூறியது.
குசல் ஜனித் பெரேரா உபாதையில் இருந்து முழுமையாக குணமடையாத நிலையில் அவர் முன்னர் அறிவிக்கப்பட்ட 30 பேர் கொண்ட உத்தேச அணியில் இருந்து நீக்கப்பட்டுள்ளார்.
25 வயதான ஆரம்ப துடுப்பாட்ட வீரர் பத்தும் நிசங்கவும் அண்மையில் உபாதைக்கு உள்ளான நிலையில் அவரும் தனது காயத்தில் இருந்து மீண்டு வருவதாக தெரியவருகிறது.
மூன்று தேர்வுக் குழு உறுப்பினர்களும் தமது பணிகளில் ஈடுபட்டு வருவதோடு அதன்படி ரொமேஷ் களுவிதாரண மூன்று ஒருநாள் தொடருக்காகவும் ஹம்பாந்தோட்டை செல்வதற்கும் தேர்வுக் குழு தலைவர் பிரமோத்ய விக்ரமசிங்க சிம்பாப்வே சுற்றுப்பயணம் மேற்கொள்ளவும் வாய்ப்பு இருப்பதாக தெரியவருகிறது.
உலகக் கிண்ண தகுதிகாண் போட்டி அடுத்த மாதம் சிம்பாப்வேயில் நடைபெறவுள்ளமை குறிப்பிடத்தக்கது.
இதேவேளை தென்னாபிரிக்க அணிக்கு எதிரான இலங்கை ஏ அணியின் தொடருக்காக ஹேமன்த விக்ரமரத்ன கண்டி செல்லவுள்ளார்.
இதில் இலங்கை ஏ அணிக்கு புதிய அணித் தலைவர் ஒருவர் நியமிக்கப்பட வாய்ப்பு உள்ளது. கமிந்து மெண்டிஸ் டெங்குவால் பாதிக்கப்பட்டிருப்பதாலேயே இந்த நிலை ஏற்பட்டுள்ளது.
Add new comment