தினேஷ் ஷாப்டரின் மரணத்தின் மர்மம் நவீன 'ஸ்கேன்' ஆய்வுகளில் துலங்குமா?

இலங்கை வர்த்தக சமூகத்தை உலுக்கிய பிரபல தொழிலதிபர் தினேஷ் ஷாப்டரின் மரணம் இன்னும் அவிழ்க்கப்படாத மர்ம மூடிச்சுகள் நிறைந்ததாகவே காணப்படுகின்றது.

தினேஷ் ஷாப்டரின் மரணம் கொலையா? அல்லது தற்கொலையா? என்பது இதுவரை கண்டறியப்படவில்லை.

2022 டிசம்பர் மாதம் 15ஆம் திகதி தனது மனைவியுடன் பிரிட்டன் செல்வதற்கு சில மணி நேரங்களுக்கு முன்னர் கொழும்பு, பொரளை மயானத்துக்கருகில் காருக்குள் குற்றுயிரும் குலையுயிருமாக தினேஷ் ஷாப்டர் மீட்கப்பட்டு கொழும்பு தேசிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டார். எனினும் அன்றிரவே அவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இன்று அவர் இறந்து 05 மாதங்களுக்கு மேலாகிறது. இக்காலம் முழுவதும் தினேஷ் ஷாப்டரின் மரணம் மர்மமாகவே மாறியுள்ளது. சிலர் இந்த மரணத்தை தற்கொலையாகவும் சிலர் கொலையாகவும் காட்ட முயன்றனர்.

தினேஷ் ஷாப்டரின் மரணம் தொடர்பான ஆரம்பகட்ட விசாரணைகள் இது ஒரு கொலையெனக் கூற, திடீரென தற்கொலையாக மாறி சமூகத்தில் பல்வேறு சர்ச்சைகளை ஏற்படுத்தியது. எனினும் தினேஷ் ஷாப்டரின் மரணம் தற்கொலைதான் என்பதை அவருடைய குடும்பத்தினர் ஏற்க தயாராகவில்லை. இம்மரணம் திட்டமிடப்பட்ட மனிதப் படுகொலையாகவே அவர்களால் பார்க்கப்படுகின்றது. இதனால் தான் இவ்வழக்கில் ஜனாதிபதி சட்டத்தரணி அனுஜ பிரேமரத்ன ஆஜராகினார். அவர் நீதிமன்றத்தில் ஷாப்டரின் மரணத்திலுள்ள சந்தேகத்துக்கிடமான விடயங்களை சுட்டிக்காட்டியமையால் தற்கொலையில் முடியவிருந்த தினேஷ் ஷாப்டரின் மரணம் இன்று சந்தேகத்துக்குரிய மரணமாக மாறியுள்ளது.

தினேஷ் ஷாப்டரின் மரணத்தின் பின்னர் 24 மணி நேரத்துக்குள் கொழும்பு விசேட சட்டவைத்திய அதிகாரி ரூஹுல் ஹக்கினால் வெளியிடப்பட்ட பிரேத பரிசோதனை அறிக்கையில் ஷாப்டர் கழுத்து நெரிக்கப்பட்டமையால் உயிரிழந்துள்ளாரென்றே குறிப்பிடப்பட்டிருந்தது. அதன்பின்னர் இரண்டாவது தடவையாக அதே சட்ட வைத்திய அதிகாரியினால் வெளியிடப்பட்டிருந்த அறிக்கையில் கழுத்தை தானே நெரித்து தற்கொலை செய்துகொண்டிருக்கலாமென்று கூறப்பட்டது. சட்டவைத்திய அதிகாரியினால் முதல் அறிக்கையில் கூறப்பட்ட மரணத்துக்கான காரணம் முழுமையான பிரேத பரிசோதனை அறிக்கையில் தலைகீழாக மாறியது.

அதுமட்டுமின்றி உணவில் சயனைட் கலக்கப்பட்டிருந்ததாகவும் கூறப்பட்டது. எனவே நொடிக்கு நொடி மாறிவரும் பிரேத பரிசோதனை அறிக்கைகள் தொடர்பில் ஜனாதிபதி சட்டத்தரணி அனுஜ பிரேமரத்ன நீதிமன்றத்தின் கவனத்துக்கு கொண்டுவந்தார்.

கொழும்பு விசேட சட்டவைத்திய அதிகாரி ரூஹுல் ஹக், இதற்கு முன்னர், பல சர்ச்சைக்குரிய மரணங்கள் தொடர்பில் பிரேத பரிசோதனைகளை மேற்கொண்டு குற்றவாளிகளை கைது செய்ய பொலிஸாருக்கு உதவியவர். அவர் இலங்கையில் பல பகுதிகளில் பணிபுரிந்துள்ளார். ஆயிரக்கணக்கான பிரேத பரிசோதனைகளை மேற்கொண்டுள்ளார். எனவே தினேஷ் ஷாப்டரின் மரணத்தில் ஏன் இத்தகைய குழப்பங்கள் காணப்படுகின்றன என்பது கேள்விக்குறியாகவே உள்ளது.

ஒரு அனுபவமிக்க சட்ட மருத்துவ அதிகாரி இறந்த உடலைப் பரிசோதிக்கும் போதே அது கழுத்து நெரிக்கப்பட்டதா? அல்லது உடலில் விஷம் கலந்துள்ளதா? என்ற தெளிவான தீர்ப்பை வழங்க முடியும். எனவே தான் இத்தகைய குழப்பங்களுக்கு தீர்வு காணும் முகமாக ஷாப்டரின் மரணத்துக்கான காரணத்தைக் கண்டறியும் வகையில் நீதிமன்றத்தால் குழுவொன்று நியமிக்கப்பட்டது. அக்குழுவில் பேராசிரியர் அசேல மெண்டிஸ், பேராசிரியர் டி.சி.ஆர். பெரேரா, பேராசிரியர் டி.என்.பி. பெர்னாண்டோ, கலாநிதி சிவசுப்பிரமணியம் மற்றும் கலாநிதி ரொஹான் ருவன்புர ஆகியோர் செயற்பட்டு வருகின்றனர்.

அதன்படியே நிபுணத்துவ மருத்துவக் குழுவினரால் இரண்டாவது பிரேதப் பரிசோதனையின் அவசியம் தொடர்பில் நீதிமன்றத்தில் சுட்டிக்காட்டப்பட்டது. தினேஷ் ஷாப்டரின் மரணம் தொடர்பான விசாரணைகள் மற்றும் பிரேத பரிசோதனை அறிக்கைகள் என்பவற்றின் நீண்ட ஆய்வுக்குப் பின்னரே அவர்கள் இந்த முடிவுக்கு வந்தனர்.

பொரளை பொதுமயானத்தில் அடக்கம் செய்யப்பட்டிருந்த தினேஷ் ஷாப்டரின் சடலம் கடந்த 25ஆம் திகதி தோண்டியெடுக்கப் பட்டது. கொழும்பு மேலதிக மாஜிஸ்திரேட் நீதவான் ரஜிந்ரா ஜயசூரியவின் மேற்பார்வையின் கீழ் பிரேத பரிசோதனைக்கான வைத்தியர் குழுவினர் ஆகியோர் முன்னிலையில் சடலம் தோண்டியெடுக்கப்பட்டது.

இறந்தவரின் சடலம் மீட்கப்படும் போது, அதை அடையாளம் காண இறந்தவரின் குடும்பத்தைச் சேர்ந்த நெருங்கிய ஒருவரும் சம்பவ இடத்தில் இருக்க வேண்டும். அதன்படி, தினேஷ் ஷாப்டரின் சடலத்தை அடையாளம் காண்பிப்பதற்காக அவரது தந்தை ஜனசக்தி குழும வர்த்தகத்தின் தலைவரான சந்திரா ஷாப்டர் பொரளை பொது மயானத்துக்கு வந்திருந்தார். இன்னும் சில குடும்ப உறுப்பினர்களும் ஜனாதிபதி சட்டத்தரணி அனுஜ பிரேமரத்ன உள்ளிட்ட சட்டத்தரணிகள் குழுவினரும் வந்திருந்தனர்.

அதுமட்டுமின்றி நிபுணத்துவ மருத்துவக் குழுவினர், தினேஷ் ஷாப்டரின் மரணம் குறித்து விசாரணை நடத்தி வரும் குற்றப்புலனாய்வுத் துறையின் கொலை மற்றும் ஒழுங்கமைக்கப்பட்ட குற்றப் புலனாய்வுப் பிரிவு அதிகாரிகள் மற்றும் குற்றப்புலனாய்வு ஆய்வக அதிகாரிகள் ஆகியோரும் வந்திருந்தனர்.

அடக்கம் செய்யப்பட்ட இடத்திலிருந்து காலை 8.45 மணியளவில் சடலத்தை மீட்பதற்கான அகழ்வுப் பணிகள் மேற்கொள்ளப்பட்டு, காலை 9.40 மணியளவில் சடலம் மீட்கப்பட்டது. மீட்கப்பட்ட சடலம் அவரது மகனுடையதுதான் என்பதை தினேஷ் ஷாப்டரின் தந்தை சந்திரா ஷாப்டர் அடையாளம் காட்டினார். அதன்பின்னரே உடல் சீல் வைக்கப்பட்ட உறையில் போடப்பட்டு இரண்டாவது பிரேத பரிசோதனைக்காக பலத்த பொலிஸ் பாதுகாப்புடன் காலி கராப்பிட்டிய போதனா வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டது.

மாலை 3.00 மணியளவில் காலி கராப்பிட்டிய போதனா வைத்தியசாலை பிரேத அறைக்குள் சடலம் கொண்டு செல்லப்பட்டது. சடலம் தடயவியல் விஞ்ஞானத்தின் நவீன முறைகளின் படி ஸ்கேன் செய்யப்பட்டது.

தினேஷ் ஷாப்டரின் மரணம் தொடர்பான பிரேத பரிசோதனையை மேற்கொள்ள நீதிமன்றம் இரண்டு நாட்கள் மாத்திரமே காலஅவகாசம் அளித்துள்ளது. அந்த இரண்டு நாட்களுக்குள் பிரேத பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டு மீண்டும் பொரளை பொது மயானத்தில் சடலம் அடக்கம் செய்யப்பட வேண்டும்.

கராப்பிட்டிய வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்ட சடலம் தடயவியல் ஆய்வின் நவீன முறைகளின் படி ஸ்கேன் செய்யப்பட்டு அன்றைய தினமே இரண்டாவது பிரேத பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டதாக தெரிவிக்கப்படுகின்றது. நவீன ஸ்கேன் முறையின் மூலம் உடல் உள் உறுப்புகள் குறித்த விரிவான தகவல்களை தெரிந்து கொள்ள முடியுமென தடயவியல் நிபுணத்துவம் பெற்ற பேராசிரியர் ஒருவர் தெரிவித்தார்.

உலகின் முன்னேறிய நாடுகளான அமெரிக்கா, இங்கிலாந்து, அவுஸ்திரேலியா போன்ற நாடுகளில் இத்தகைய ஸ்கேன் முறைகளே பின்பற்றப்படுவதாக தெரிவிக்கப்படுகின்றது. அந்த நாடுகளில் இறந்த உடல்களை அறுவை செய்து பிரேத பரிசோதனைகளை மேற்கொள்வது மிக அரிதாகவே காணப்படுவதாக தெரியவருகின்றது. இதன் சிறப்பு என்னவென்றால் உடலின் நுண்ணிய பாகங்களை துண்டிக்காமல் தெளிவாக பார்த்துக்கொள்ள முடியும்.

இதுபோன்ற ஸ்கேன் பிரேத பரிசோதனைகள் இதுவரை இலங்கையில் மேற்கொள்ளப்படவில்லையென்றே கூறப்படுகின்றது. அப்படி இருக்கும் பட்சத்தில், இறந்தவர்களின் உடல்களை தோண்டி எடுத்து இரண்டாவது பிரேத பரிசோதனை செய்ய வேண்டிய அவசியம் இருக்காதென தடயவியல் நிபுணத்துவம் பெற்ற பேராசிரியர் தெரிவித்தார்.

ஸ்கேன் மூலம் மரணம் இயற்கையானதா? என்று கூட அறிய முடியும். மேலும், தாக்குதல்கள், வெட்டுக்காயங்கள் போன்றவற்றால் உடலில் ஏற்படும் வெளிப்புற மற்றும் உட்புற காயங்கள் மற்றும் அடையாளங்களை தெளிவாக அடையாளம் காண முடியுமென்று தடயவியல் நிபுணர் பேராசிரியர் குறிப்பிடுகிறார்.

அதன்படி, முதற்கட்ட பிரேதப் பரிசோதனையிலேயே தினேஷ் ஷாப்டரின் சடலத்தை ஸ்கேன் செய்து பார்த்திருந்தால், அவரது மரணம் கழுத்து நெரிக்கப்பட்டமையால் ஏற்பட்டதா? என்பது தெளிவாக கூறமுடிந்திருக்குமென அவர் மேலும் தெரிவித்தார். மேலும் ஸ்கேன் பரிசோதனை மூலம் உடலில் விஷம் கலந்தமையால் மரணம் சம்பவித்திருக்கலாம் என்பதை தெளிவாக கூறமுடியாது.

இரத்த மாதிரிகளை பெற்று பரிசோதனைகள் மேற்கொள்ள வேண்டும். எனினும் சடலம் பல மாதங்கள் பழமையானது என்பதால் இரத்த மாதிரிகளை பெறுவது கடினமாகவிருக்கும். எனவே உடற் பாகங்களை பெற்று இரசாயன பகுப்பாய்வுகளை மேற்கொள்ள திட்டமிடப்பட்டுள்ளது.

எனவே இரண்டாவது பிரேத பரிசோதனையும் நடைபெற்று வருவதால், தினேஷ் ஷாப்டரின் மரணம் குறித்த கூடுதல் தகவல்கள் வெளியாகுமென எதிர்பார்க்கப்படுகின்றது. இதன்மூலம் நொடிக்கு நொடி மாறிய பிரேத பரிசோதனை அறிக்கைகள் தொடர்பான உண்மைகள் வெளிவருவதற்கான வாய்ப்புகள் காணப்படுகின்றன.

வசந்தா அருள்ரட்ணம்


Add new comment

Or log in with...