சிங்கப்பூர், ஜப்பான் விஜயத்தை நிறைவு செய்த ஜனாதிபதி நாடு திரும்பினார்

சிங்கப்பூர் மற்றும் ஜப்பானுக்கு விஜயம் உத்தியோகபூர்வம் விஜயம் மேற்கொண்டிருந்த ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க நேற்றிரவு (27) நாடு திரும்பினார்.

கடந்த செவ்வாய்க்கிழமை (23) அதிகாலை இலங்கையிலிருந்து புறப்பட்டு, சிங்கப்பூருக்கான தனது ஒரு நாள் விஜயத்தை நிறைவு செய்த ஜனாதிபதி அதனைத் தொடர்ந்து ஜப்பானுக்கு விஜயம் செய்தார்.

ஜனாதிபதியின் இவ்விஜயத்தின்போது, சிங்கப்பூர் பிரதி பிரதமர், ஜப்பானின் முன்னாள் பிரதமர்கள், ஜப்பான் நிதி அமைச்சர், வெளிவிவகார அமைச்சர்களுடன் ஜனாதிபதி சந்திப்பை மேற்கொண்டிருந்தார்.

சிங்கப்பூரில் சட்டம் மற்றும் உள்துறை அமைச்சர் கே. சண்முகம் மற்றும் அந்நாட்டின் பல உயர்மட்ட இராஜதந்திரிகளுடன் அவர் கலந்துரையாடலை மேற்கொண்டிருந்தார்.

இதனைத் தொடர்ந்து மே 24 - 27 வரையான ஜனாதிபதியின் ஜப்பானுக்கான உத்தியோகபூர்வ விஜயத்தின் போது, ஜப்பானிய பிரதமர், முன்னாள் பிரதமர்கள் உள்ளிட்டோருடன் கலந்துரையாடல்களை மேற்கொண்டிருந்தார்.

ஜப்பானுக்கும் இலங்கைக்கும் இடையிலான இருதரப்பு உறவுகளை புதிய அணுகுமுறையின் ஊடாக வலுப்படுத்துவது குறித்தும், பிராந்திய மற்றும் சர்வதேச விவகாரங்கள் தொடர்பாகவும் இதன்போது கருத்துப் பரிமாற்றம் இடம்பெற்றன.

டிஜிட்டல் மயமாக்கலின் போது இலங்கை – ஜப்பான் ஒத்துழைப்புகளை மேம்படுத்துவது குறித்து அவதானம் செலுத்தப்பட்டது.

ஜப்பான் உதவியுடன் கொழும்பில் முன்னெடுக்கப்படவிருந்த இலகு ரயில் வேலைத்திட்டத்தினை இடைநடுவில் கைவிட்டமைக்காக ஜப்பான் அரசாங்கத்திடம் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க கவலை தெரிவித்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

அத்துடன், மே 25, 26 ஆம் திகதிகளில் டோக்கியோவில் நடைபெற்ற “ஆசியாவின் எதிர்காலம் தொடர்பான 28ஆவது சர்வதேச மாநாட்டில்” (Nikkei) நிக்கெய் மாநாட்டில் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க கலந்து கொண்டு உரையாற்றியிருந்தார்.

ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க மற்றும் வியட்நாம் பிரதிப் பிரதமர் ட்ரான் லூ குவாங் (Tran Luu Quang) ஆகியோருக்கிடையிலான சந்திப்பொன்றும் டோக்கியோ நகரில் நடைபெற்றது. இதன்போது இருதரப்பு உறவுகள் மற்றும் கலாசார தொடர்புகளை பலப்படுத்துவது தொடர்பில் ஆராயப்பட்டது.

அதனைத் தொடர்ந்து, குறித்த விஜயத்தை நிறைவு செய்த ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க மலேசியாவின் கோலாலம்பூரில் இருந்து மலேசியன் எயார்லைன்ஸ் விமானம் மூலம் நேற்றிரவு (27) இலங்கை வந்தடைந்தார்.


Add new comment

Or log in with...