இலங்கையின் அனைத்து வகை கிரிக்கெட் அணிகளுக்குமான புதிய ஆடை அறிமுகம்

இலங்கை கிரிக்கெட் அணிக்கான உத்தியோகபூர்வ ஆடை அனுசரணையாளராக தேர்வு செய்யப்பட்டிருக்கும் மூஸ் ஆடை நிறுவனம் இலங்கை கிரிக்கெட் அணிக்காக புதிய ஆடையை அறிமுகம் செய்துள்ளது.

இலங்கை கிரிக்கெட் சபையுடனான புதிய கூட்டாண்மையின் கீழ் சர்வதேச கிரிக்கெட் கெளன்சில் மற்றும் ஆசிய கிரிக்கெட் கெளன்சில் போட்டிகள் உட்பட அனைத்து வகை கிரிக்கெட்டுக்குமான இலங்கை தேசிய அணியின் ஆடைகளை மூஸ் நிறுவனம் வழங்கவுள்ளது.

இதன்படி எதிர்வரும் ஆப்கானிஸ்தானுக்கு எதிரான ஒருநாள் தொடருக்கான இலங்கை ஒருநாள் அணி ஜெர்சி அறிமுக நிகழ்வு கடந்த வியாழக்கிழமை (25) கொழும்பில் இடம்பெற்றது.

புதிய ஜெர்சியானது, விளையாட்டில் மிக உயர்ந்த அளவில் பயன்படுத்தப்படும் தொழில்நுட்ப துணிகளை இணைத்து, வீரரின் செயல்திறனை மேம்படுத்துவதற்கும், இயக்கத்தை எளிதாக்குவதற்கும் வடிவமைக்கப்பட்ட துணியின் முழுமையான ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டுப் பகுப்பாய்வைத் தொடர்ந்து வடிவமைக்கப்பட்டுள்ளது.

துணியின் உட்புறம் தோலில் இருந்து ஈரப்பதத்தை இழுக்கவும், வெளிப்புற அடுக்குக்கு மாற்றவும் உதவும், அதே நேரத்தில் வெளிப்புறம் உலர் நேரங்களுக்கு தாக்குப்பிடிக்கும் வகையில் அமைக்கப்பட்டுள்ளது.

இது தொடர்ச்சியான ஆவியாதல் செறிவூட்டலைத் தடுப்பதோடு சூடான மற்றும் குளிர் நிலைகளில் வெப்பநிலையை ஒழுங்குபடுத்துகிறது. இந்தத் துணி மிக இலேசாக இருப்பது வீரர்களுக்கு கூடுதல் நன்மையாக அமையும் என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

இந்த புதிய ஆடைகள் இலங்கை ஒருநாள், டெஸ்ட் மற்றும் மகளிர் கிரிக்கெட் அணிக்கு பயன்படுத்தப்படும். பாடசாலை கிரிக்கெட் வீரர்களைப் மையப்படுத்தி ஆடை காட்சிப்படுத்தப்பட்டது.

இலங்கை டெஸ்ட் அணித்தலைவர் திமுத் கருணாரத்ன, இந்த ஆடையை முதலில் மகளிர் அணி தலைவர் சாமரி அத்தபத்துவிடம் வழங்கினார்.

இந்நிகழ்வில், இலங்கை கிரிக்கெட் சபையின் செயலாளர் மொஹான் டி சில்வா, இலங்கை கிரிக்கெட் நிறுவனத்தின் நிறைவேற்று பணிப்பாளர் அஷ்லி டி சில்வா, மூஸ் அதிகாரிகள் மற்றும் கிரிக்கெட் வீரர்களும் கலந்துகொண்டனர்.


Add new comment

Or log in with...