- 2022 O/L பரீட்சைகள் திங்கள் ஆரம்பம்
2021 க.பொ.த சாதாரண தரப் பரீட்சையின் மீள் திருத்தப் பெறுபேறுகள் வெளியாகியுள்ளன.
பரீட்சைகள் திணைக்களத்தின் உத்தியோகபூர்வ இணையத்தளமான www.doenets.lk ஐப் பார்வையிடுவதன் மூலம் பெறுபேறுகளை பெற்றுக்கொள்ள முடியும்.
இம்முறை பெறுபேறுகளை மீளாய்வு செய்வதற்கு 80,272 விண்ணப்பதாரர்கள் விண்ணப்பித்துள்ளதாக பரீட்சைகள் திணைக்களம் தெரிவித்துள்ளது.
2021 க.பொ.த. சாதாரண தரப்பரீட்சைக்கு மொத்தமாக 5 இலட்சத்து 18 ஆயிரத்து 245 (518,245) பேர் விண்ணப்பித்திருந்தனர். இதில் 4 இலட்சத்து 77 ஆயிரத்து 85 (477,085) பேர் பாடசாலை பரீட்சார்த்திகளும் ஒரு இலட்சத்து 10 ஆயிரத்து 460 (110,460) பேர் தனிப்பட்ட பரீட்சார்த்திகளும் உள்ளடங்குகின்றனர்.
2021 க.பொ.த சாதாரண தர பரீட்சைக்குத் தோற்றிய பாடசாலை பரீட்சார்த்திகளில் 2 இலட்சத்து 31 ஆயிரத்து 982 (231,982) பேர் க.பொ.த. உயர் தரத்தில் கல்வி கற்க தகுதி பெற்றுள்ளதாக பெறுபேறுகள் வெளியிடப்பட்ட வேளையில், முன்னாள் பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் எல்.எம்.டி. தர்மசேன தெரிவித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
இதேவேளை, 2022ஆம் ஆண்டுக்கான க.பொ.த சாதாரண தரப் பரீட்சைக்கான வினாத்தாள்கள் நேற்று (26) நள்ளிரவு பரீட்சை நிலையங்களுக்கு விநியோகம் செய்யப்பட்டுள்ளதாக பரீட்சைகள் திணைக்களம் தெரிவித்துள்ளது.
5 நாட்கள் வரை நடைபெறும் பரீட்சைகளுக்கான வினாத்தாள்கள் பரீட்சை நிலையங்களுக்கு விநியோகிக்கப்படும் என பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் அமித் ஜயசுந்தர தெரிவித்துள்ளார்.
பரீட்சைக்குத் தேவையான காகிதாதிகளின் விநியோகம் நிறைவடைந்துள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
இதேவேளை, விசேட தேவையுடைய மாணவர்கள், சிறைக் கைதிகள் மற்றும் புற்றுநோயாளிகளுக்கு விசேட பரீட்சை நிலையங்கள் நிறுவப்பட்டுள்ளதாக ஆணையாளர் நாயகம் மேலும் தெரிவித்தார்.
டெங்கு நோயினால் பாதிக்கப்பட்ட பரீட்சை பரீட்சார்த்திகள் இருப்பின் அவர்கள் மருத்துவ நிபுணரின் ஆலோசனையின் பேரில் அருகில் உள்ள பரீட்சை நிலையத்தில் பரீட்சைக்குத் தோற்றுவதற்கான வாய்ப்பு வழங்கப்படும் என அவர் குறிப்பிட்டுள்ளார்.
2022 ஆம் ஆண்டுக்கான க.பொ.த சாதாரண தரப் பரீட்சை மே 29 ஆம் திகதி தொடக்கம் ஜூன் 08 ஆம் திகதி வரை நடைபெறவுள்ளது.
இப்பரீட்சைகள் நாடளாவிய ரீதியில் 3,568 பரீட்சை நிலையங்களில் இடம்பெறவுள்ளதோடு, 472,553 பரீட்சார்த்திகள் இந்த வருடத்திற்கான பரீட்சையை எதிர்கொள்ளவுள்ளதாக பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் அமித் ஜயசுந்தர தெரிவித்துள்ளார்.
மீள்திருத்த பெறுபேறுகள் தொடர்பிலான மேலதிக விசாரணைகளை பின்வரும் தொலைபேசி இலக்கங்கள் மூலம் பெறலாம் என திணைக்களம் அறிவித்துள்ளது.
பாடசாலை பரீட்சைகள் மற்றும் பெறுபேறுகள் பிரிவு
- 011-2784208
- 011-2784537
- 011-3188350
- 011-3140314
துரித இலக்கம்
- 1911
Add new comment