அமெரிக்காவின் முக்கிய உட்கட்டமைப்புகளில் சீனா மின்னிலக்க முறையில் உளவு பார்ப்பதாக மைக்ரோசொப்ட் நிறுவனமும் அமெரிக்க உளவுத் துறை அமைப்புகளும் குற்றஞ்சாட்டியுள்ளன.
சீன அரசாங்கத்தின் ஆதரவு பெற்ற ஊடுருவிகள் தகவல்களைச் சேகரிக்க குவாம் உள்ளிட்ட பல இடங்களில் தீங்கு விளைவிக்கும் மென்பொருட்களை நிறுவியிருப்பதாக அவை கூறின.
அமெரிக்க இராணுவத்தளம் அமைந்துள்ள குவாமை ஊடுருவிகள் முக்கியமாகக் குறிவைத்துள்ளனர். தாய்வான் அல்லது தென் சீனக் கடல் பூசலில் அமெரிக்கா ஏதாவது நடவடிக்கை எடுக்க முனைந்தால் குவாம்தான் முக்கியக் களமாக அமையும்.
இதுவரை மின்னியல் தரவு அல்லது சாதனம் ஏதும் சீர்குலைக்கப்படவில்லை என்று மைக்ரோசொப்ட் கூறியது.
இராணுவப் பூசல் நீடிக்கும் சூழலில் வட அமெரிக்காவுக்கும் ஆசியாவுக்கும் இடையே தொடர்புமுறையில் இடையூறு ஏற்படுத்த ஊடுருவிகள் முயற்சி செய்யலாம் என்று அது எச்சரித்தது.
முக்கிய உட்கட்டமைப்பு நிறுவனங்கள் தீங்கு விளைவிக்கும் செயல்களை அடையாளம் கண்டு உரிய நடவடிக்கை எடுக்குமாறு வலியுறுத்தப்பட்டுள்ளன.
Add new comment