100 மீற்றர் ஓட்டத்தில்; ஆண்டை வேகத்துடன் ஆரம்பித்தார் யுபுன்

இத்தாலியின் சிடா டி சவோனா போட்டியில் பங்கேற்ற இலங்கை குறுந்தூர ஓட்ட வீரர் யுபுன் அபேகோன் 100 மீற்றர் ஓட்டப் போட்டியை 10.01 விநாடியில் முடித்து இரண்டாவது இடத்தை வென்றுள்ளார்.

கடந்த புதனன்று (24) நடைபெற்ற இந்தப் போட்டியில் கடந்த ஆண்டு 100 மீற்றர் ஓட்டத்தை 10 விநாடிகளுக்கு குறைவான காலத்தில் பூர்த்தி செய்த முதல் இலங்கை வீரரான அபேகோன், பிரிட்டனின் ரீஸ் பிரஸ்கோட்டுக்கு அடுத்து போட்டியை நிறைசெய்தார். பிரஸ்கோட் 100 மீற்றர் தூரத்தை 9.94 விநாடிகளில் ஓடி முடித்தார்.

இத்தாலியின் லொரன்சோ பட்டா 10.09 விநாடிகளில் போட்டியை முடித்து மூன்றாவது இடத்தை பிடித்தார். எனினும் ஒலிம்பிக் தங்கப் பதக்கம் வென்ற 100 மீற்றர் ஆடவர் அஞ்சலோட்ட அணியில் இடம்பெற்றிருந்த இத்தாலியின் பிலிப்போ டோர்டு ஆறாவது இடத்தையே பிடித்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

அபேகோன் ஹீட் போட்டியிலும் கயானாவின் பெஞ்சமின் அசமட்டிக்கு பின்னால் 10.04 விநாடிகளில் ஓடி இரண்டாவது இடத்தை பெற்றிருந்தார்.

இந்தப் போட்டி அபேகோன் இந்த ஆண்டில் பங்கேற்ற முதலாவது 100 மீற்றர் ஓட்டப்போட்டியாகும். அவர் எதிர்வரும் ஜூன் 2 ஆம் திகதி புளோரன்ஸ் டயமன்ட் லீக் போட்டியில் பங்கேற்கவுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த மாத முற்பகுதியில் இத்தாலியில் நடைபெற்ற பிரென்ஸ் ஸ்பிரின்ட் பெஸ்டிவல் 2023 மெய்வல்லுனர் போட்டியில் பங்குகொண்ட யுபுன் அபேகோன், ஆண்களுக்கான 200 மீற்றர் ஓட்டப் போட்டியில் முதலிடம் பிடித்தார் என்பது குறிப்பிடத்தக்கது.


Add new comment

Or log in with...