புறம் பேசுவதை தவிர்ப்போம்

உண்மை முஸ்லிம் புறம்பேசுவது, கோள்சொல்வது போன்ற காரியங்களிலிருந்து முற்றிலும் விலகியிருப்பார். அவர் இஸ்லாமிய பண்புகளிலும் அதன் கலாசாரத்திலும் வளர்ந்தவர். எனவே இத்தகைய செயல்களுக்கு தனது வாழ்வில் இடமளிக்கமாட்டார். அல்லாஹ்வின் வேதத்தையும் நபி (ஸல்) அவர்களின் வழிமுறையையும் அறிந்து கொள்வதில் மூழ்கியிருப்பார். அவ்வழிமுறைகள் ஏவியதை ஏற்று நடப்பார், விலக்கியதை தடுத்துக் கொள்வார்.

'உங்களில் ஒருவர் மற்றெவரையும் புறம் பேச வேண்டாம். உங்களில் எவனும் தன்னுடைய இறந்த சகோதரனின் மாமிசத்தைப் புசிக்க விரும்புவானா? அதனை நீங்கள் வெறுப்பீர்களே! (புறம் பேசுவதும் அவ்வாறே இவ்விஷயங்களில்) அல்லாஹ்வுக்குப் பயந்து கொள்ளுங்கள். நிச்சயமாக அல்லாஹ் (பாவத்திலிருந்து) விலகுவோரை அங்கீகரிப்போனாகவும் கிருபை செய்வோனாகவும் இருக்கின்றான். (அல் குர்ஆன் 49:12)

இத்திருவசனத்தைக் காணும் முஸ்லிமின் இதயத்தில் புறம் பேசுவதன்மீது அளவில்லா கோபமும், வெறுப்பும் உண்டாகிவிடும். அவர் புறம் பேசுபவரை இறந்துவிட்ட தனது சகோதரனின் மாமிசத்தை சாப்பிடுபவர் போன்று கருதுவதால், அல்லாஹ்விடம் தெளபாவை நோக்கி விரைந்தோடுவார். ஏனெனில் புறம் பேசியதற்கு அல்லாஹ் தெளபாவைத் தான் பரிகாரமாகக் கூறுகிறான்.

ஒரு மனிதரின் கேள்விக்குப் பதிலளித்த நபி (ஸல்) அவர்களின் வழிகாட்டுதலையும் கவனத்தில் கொள்வார். ஒருவர் 'அல்லாஹ்வின் தூதரே! முஸ்லிம்களில் சிறந்தவர் யார்?' எனக் கேட்டார். நபி (ஸல்) அவர்கள் பதிலளித்தார்கள், 'எவரது நாவிலிருந்தும் கையிலிருந்தும் முஸ்லிம்கள் நிம்மதி பெறுகிறார்களோ அவரே முஸ்லிம்களில் சிறந்தவர்.' (ஆதாரம்- முஸ்லிம்)

இத்தகைய அறிவார்ந்த உபதேசத்தையும், உயரிய வழிகாட்டுதலையும் பெற்றுள்ள முஸ்லிம் புறம்பேசத் துணியமாட்டார். சமூகத்தில் எவருக்கும் தனது நாவாலும் நோவினை செய்யமாட்டார். அவர் இதற்கெல்லாம் அப்பாற்பட்டவர். வரம்பு மீறும் சிலரது நாவுகள், ஒரு முஸ்லிம் சகோதரரைப் பற்றி அவர் இல்லாதபோது தவறாகப் பேசினால் அதைத் தடுத்து நிறுத்தி அவரது கெளரவத்தைக் காப்பார்.

ஒரு தடவை நபி (ஸல்) அவர்கள், 'எவர் தனது சகோதரர் இல்லாத போது அவரது கெளரவத்தைக் காக்கின்றாரோ அவரை நரகிலிருந்து விடுதலை செய்வது அல்லாஹ்வின் கடமையாகும்' என்று கூறினார்கள்.(ஆதாரம்- முஸ்னத் அஹ்மத்)

இது தொடர்பில் அல்லாஹ்தஆலா, 'குறைகூறிப் புறம் பேசித்திரிவோருக்கெல்லாம் கேடுதான் (அல்குர்ஆன் 104:1) என்றுள்ளான்.

உண்மை முஸ்லிம் கோள்சொல்லித் திரியமாட்டார். ஏனெனில் கோள் சொல்வது மக்களிடையே குழப்பத்தை ஏற்படுத்துவதையும், நண்பர்களிடையே உறவைத் துண்டிப்பதையும் நோக்கமாக கொண்ட தீயவர்களுடன் தன்னைச் சேர்த்துவிடும் என்பதை அவர் அறிவார்.

மற்றொரு நபி (ஸல்) அவர்கள், 'உங்களில் சிறந்தவரை நான் உங்களுக்கு அறிவிக்கட்டுமா?' எனக் கேட்க நபித்தோழர்கள், 'அறிவியுங்கள் அல்லாஹ்வின் தூதரே!' என்றார்கள். அதற்கு நபி (ஸல்) அவர்கள், 'அவர்களைப் பார்த்தால் (பார்ப்பவருக்கு) அல்லாஹ்வின் நினைவு ஏற்படும்.' என்று கூறியதோடு, 'உங்களில் மிகக் கெட்டவர்களைப் பற்றி நான் உங்களுக்கு அறிவிக்கட்டுமா?' எனக்கேட்டதோடு அவர்கள் யாரெனில் கோள் சொல்லித் திரிபவர்கள், நேசர்களுக்கிடையே குழப்பத்தை ஏற்படுத்துபவர்கள், நிரபராதிகளிடம் குறைகளைத் தேடித்திரிபவர்கள்' என்றார்கள். (ஆதாரம்- முஸ்னத் அஹ்மத்)

கோள் சொல்லும் குழப்பவாதிகளுக்கு உலகில் இழிவும், மறுமையில் கொடிய முடிவும் ஏற்படும். அவன் தனது தவறை தொடர்ந்து கொண்டிருந்தால் வெற்றிக்கான அனைத்து வாயில்களும் மூடப்பட்டுவிடும். அந்த வகையில் நபி (ஸல்) அவர்கள், 'கோள் சொல்லித் திரிபவன் சுவனம் நுழையமாட்டான் (ஆதாரம்- புஹாரி, முஸ்லிம்) என்று குறிப்பிட்டார்கள்.

ஆகவே கோள் சொல்வதையும் புறம் பேசித் திரிவதையும் தவிர்த்துக்கொள்வோம்.

அபூயூஸுப்...


Add new comment

Or log in with...