நாட்டு மக்களுக்கு மகிழ்ச்சிகரமான செய்தியொன்றை மின்சக்தி எரிசக்தி அமைச்சர் கஞ்சன விஜேசேகர நேற்றுமுன்தினம் வழங்கியுள்ளார். பாராளுமன்றத்தில் உரையாற்றும் போதே அவர் இத்தகவலை தெரிவித்து இருக்கின்றார்.
பொதுப்பயன்பாடுகள் ஆணைக்குழுத் தலைவர் ஜனக ரட்நாயக்காவை பதவி நீக்கம் செய்யும் வகையிலான பிரேரணையைப் பாராளுமன்றத்தில் சமர்ப்பித்து உரையாற்றிய அமைச்சர் விஜேசேகர, 'எதிர்வரும் ஜுலை மாதம் முதல் மின்கட்டணத்தைக் குறைப்பதற்கு ஏற்ப திருத்தம் செய்வதற்கு முன்மொழிவுகள் முன்வைக்கப்பட்டுள்ளன. அதற்கேற்ப நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும்' என்று குறிப்பிட்டதோடு கட்டணக் குறைப்புக்காக முன்மொழியப்பட்டுள்ள வீதங்களையும் எடுத்துக் கூறியுள்ளார்.
இச்செய்தி மக்களுக்கு மகிழ்ச்சிக்குரியதாகவும் ஆறுதலாகவும் இருக்கும். இந்நடவடிக்கையை மக்கள் நிச்சயம் வரவேற்பர். நாட்டின் மின் கட்டணத்தில் அண்மையில் மேற்கொள்ளப்பட்ட திருத்தம் கடந்த சில மாதங்களாக பெரும் பேசுபொருளாக இருந்து வருகின்றது. மின்கட்டணம் குறைக்கப்பட வேண்டும் என்ற கோரிக்கை பல மட்டங்களிலும் முன்வைக்கப்பட்டுள்ளது.
இவ்வாறான சூழலில்தான் அமைச்சர் இவ்வறிப்பை விடுத்திருக்கிறார். இந்த அறிவிப்பின் படி 0 முதல் 30 வரையான அலகுகளுக்கு 23 வீதமும், 31 முதல் 60 வரையான அலகுகளுக்கு 09 வீதமும் சமய வழிபாட்டுத்தலங்களுக்கு 23 வீதமும், உல்லாச விடுதிகளுக்கு 40 வீதமும் என்றபடி மின்கட்டணம் குறைக்கப்பட உள்ளது. நிலையான கட்டணத்தை ரூபா 400.00 இலிருந்து ரூபா 250.00 ஆகவும் 0 - 30 வரையான அலகுகளுக்கான விலையை ரூபா 5.00 இனால் குறைத்து அலகுக்கு ரூபா 25.00 வீதம் குறைக்கவும் முன்மொழியப்பட்டுள்ளது.
இந்த அறிவிப்பு நிச்சயம் மக்களுக்கு பாரிய நிவாரணம் என்பதில் மாற்றுக்கருத்துக்கு இடமில்லை.
நாடு கடந்த வருட முற்பகுதியில் பொருளாதார நெருக்கடிக்கு முகம்கொடுத்தது. அதன் விளைவாக மின்கட்டணங்களும் அதிகரிக்கப்பட்டன. இந்நிலையில் மக்கள் பொருளாதார நெருக்கடியின் தாக்கங்களுக்கும் அழுத்தங்களுக்கும் முகம்கொடுத்துக் கொண்டிருக்கும் சூழலில் மின்கட்டணத்தை உயர்த்துவதைத் தவிர்க்குமாறு மக்கள் ஆரம்பம் முதலே கோரிக்கை விடுத்தனர். ஆனாலும் நாடு எதிர்கொண்ட பொருளாதார நெருக்கடிக்கு மத்தியில் தொடராக 24 மணிநேரமும் மின்சாரத்தை வழங்க மின்கட்டணத்தை அதிகரிக்க வேண்டிய தேவை ஏற்பட்டிருந்தது.
அதேநேரம் மின்கட்டண உயர்வினால் மக்கள் எதிர்கொள்ளக் கூடிய அசெளகரியங்கள், தாக்கங்கள் குறித்து அரசு கவனம் செலுத்தவும் தவறவில்லை. இப்பின்புலத்தில் மின்கட்டணம் அதிகரிக்கப்பட்டாலும் இவ்வருடத்தின் நடுப்பகுதியாகும் போது மக்களுக்கு நிவாரணம் பெற்றுக் கொடுக்கப்படும் என்று கட்டண உயர்வின் போது மக்களுக்கு உத்தரவாதம் அளிக்கப்பட்டது.
பொருளாதார நெருக்கடிக்கு உள்ளாகியுள்ள நாட்டை மீட்டெடுக்கும் நோக்கில் முன்னெடுக்கப்படும் வேலைத்திட்டங்களுக்கு குடிமக்களும் பங்களிப்புக்களையும் ஒத்துழைப்புக்களையும் நல்குவது அவசியம். அந்த அடிப்படையில் மக்களுக்கும் இக்கட்டண உயர்வின் விளைவான அசௌகரியங்களை சகித்துக் கொண்டுள்ளனர். அரசாங்கம் நிச்சயம் நிவாரணம் அளிக்கும் என்ற நம்பிக்கையில் அவர்கள் உறுதியாக உள்ளனர்.
அரசாங்கம் முன்னெடுத்துவரும் ஒவ்வொரு வேலைத்திட்டமும் மக்களுக்கு முன்னுரிமை அளித்த வகையில் அமைந்திருப்பதை மக்கள் அறியாதவர்கள் அல்லர். அந்த வகையில் மின்கட்டணக் குறைப்பு குறித்து நாட்டு மக்களுக்கு ஏற்கனவே அளித்துள்ள உத்தரவாதம், எரிபொருள் மற்றும் நிலக்கரி என்பவற்றின் விலைக்குறைப்பின் பிரதிபலனை மக்களுக்கு பெற்றுக்கொடுக்கும் நோக்கில் மின்கட்டணக் குறைப்பதற்கு முன்மொழியப்பட்டிருக்கிறது.
இதன் ஊடான பிரதிபலன்கள் நாட்டின் எல்லா மட்ட மக்களுக்கும் கிடைக்கப்பெறும் என்பதில் ஐயமில்லை. அது நிச்சயம் மக்களுக்கு நிவாரணமாகவும் ஆறுதலாகவும் இருக்கும். பொருளாதார நெருக்கடிக்கு உள்ளாகி வங்குரோத்து நிலையை அடைந்திருந்த நாடு மீட்சி பெற்று வந்து கொண்டிருக்கும் சூழலில் இவ்வாறு பாரிய நிவாரணத்தை வழங்குவது என்பது இலகுவான காரியமல்ல. அப்படி இருந்த போதிலும் மின்சாரத்தின் முக்கியத்துவத்தையும் மக்களின் நலன்களையும் கருத்தில் கொண்டுதான் மின்கட்டணக் குறைப்புக்காக இந்நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டிருக்கிறது.
ஆகவே மின்கட்டணக் குறைப்புக்கான முன்மொழிவுகள் மூலம் கிடைக்கப்பெறும் பிரதிபலன்கள் மூலம் உச்ச பிரதிபலன்களை அடைந்து கொள்வதில் மக்கள் கவனம் செலுத்த வேண்டும். அத்தோடு மின்சாரம் வீண்விரயம் செய்யப்படுவதை தவிர்த்துக் கொள்ளவும் வேண்டும். அது நாட்டுக்கு ஆற்றும் பாரிய பங்களிப்பாக அமையும் என்றால் அது மிகையாகாது.
Add new comment