அரச நிதிக்குழு தலைவராக ஹர்ஷ; ஜனாதிபதியுடன் மீண்டும் உரையாடி தீர்மானம்

அரசாங்க நிதி தொடர்பான பாராளுமன்ற தெரிவிக்குழுவின் தலைவராக எதிர்க்கட்சி எம்.பி. ஹர்ஷ டி சில்வாவை நியமிப்பது தொடர்பாக ஆளும் கட்சி எம்.பி.க்கள் மீண்டும் ஜனாதிபதியுடன் கலந்துரையாடி சுமுகமான தீர்மானம் எடுக்கப்படுமென, ஆளும் கட்சியின் பிரதம கொரடா அமைச்சர் பிரசன்ன ரணதுங்க தெரிவித்தார்.

பாராளுமன்றத்தில் நேற்று எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச அது தொடர்பாக முன்வைத்த விசேட கூற்றுக்குப் பதிலளிக்கும் வகையிலேயே அமைச்சர் இவ்வாறு தெரிவித்தார்.

ஆளும் கட்சி பாராளுமன்ற உறுப்பினர்கள் சிலர், ஷர்ஷ டி சில்வா தொடர்பாக தெரிவித்து வரும் அதிருப்தியை கவனத்திற்கொண்டு மீண்டும் ஒருமுறை ஜனாதிபதியுடன் பேச்சுவார்த்தை நடத்தி அது தொடர்பாக சுமுகமான தீர்மானம் மேற்கொள்ள முடிவு செய்யப்பட்டுள்ளதாகவும், அவர் சபையில் தெரிவித்தார்.

ஹர்ஷ டி சில்வாவை அரசாங்க நிதி தொடர்பான பாராளுமன்ற தெரிவுக்குழுவின் தலைவராக நியமிப்பதற்கு ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க இணக்கம் தெரிவித்துள்ளதாகவும் அதற்கான சந்திப்பில் பிரதமர் தினேஷ் குணவர்த்தன, சபை முதல்வரும் அமைச்சருமான சுசில் பிரேமஜயந்த, எதிர்க்கட்சி பாராளுமன்ற உறுப்பினர் கபீர் ஹாசிம் ஆகியோர் கலந்துகொண்டிருந்ததாகவும் தாமதமின்றி அவரை அந்த பதவிக்கு நியமிக்குமாறும் சஜித் பிரேமதாச சபையில் கேட்டுக்கொண்டார்.

இது தொடர்பாக மேலும் தெரிவித்த அமைச்சர் பிரசன்ன ரணதுங்க,

"ஹர்ஷ டி சில்வாவை அரசாங்க நிதி தொடர்பான தெரிவுக்குழுவின் தலைவராக நியமிப்பது தொடர்பாக பேச்சுவார்த்தை நடத்தப்பட்டிருந்தாலும், குழுவில் பெரும்பாலானோரின் இணக்கப்பாட்டின் கீழ் இதனை மேற்கொள்ள முடியும். எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச பாராளுமன்றத்திலும் வெளியிலும் அது தொடர்பில் வீண் பிரசாரங்களை மேற்கொண்டு வருகின்றார். பாராளுமன்றத்தில் நடைபெற்ற பொதுப் பயன்பாட்டு ஆணைக்குழுவின் தலைவர் ஜனக ரத்நாயக்கவை பதவி விலக்குவது தொடர்பான விவாதத்தில் ஹர்ஷ டி சில்வா தெரிவித்த கருத்துகள் கவனத்தில் கொள்ள வேண்டியவை.

அந்த வகையில், ஜனாதிபதியுடனான சந்திப்பில் ஜனாதிபதி அதற்கான இணக்கப்பாட்டை தெரிவித்திருந்தாலும், ஜனாதிபதியே அவர் வேறு கட்சி உறுப்பினர் என பல தடவை அவரே தெரிவித்துள்ளார். அந்த வகையில் பெரும்பான்மை கட்சி என்ற வகையில் நாம் அது தொடர்பாக ஆராய்ந்தே தீர்மானம் எடுக்க முடியும். எமது குழு ஜனாதிபதியுடன் மீண்டும் கலந்துரையாடி அது தொடர்பான தீர்மானத்தை மேற்கொள்ள முடியும்" என்று மேலும் தெரிவித்தார்.

லோரன்ஸ் செல்வநாயகம்


Add new comment

Or log in with...