அலி சப்ரி ரஹீம் MPக்கு எதிராக எதிரணி சபாநாயகருக்கு கடிதம்

தனது அரசியல் வாழ்வு நிறைவடைவதாக அலி சப்ரி தெரிவிப்பு

அரசாங்கத்தை பிரதிநிதித்துவப்படுத்தும் பாராளுமன்ற உறுப்பினரான அலி சப்ரி ரஹீமினால் சட்டவிரோதமான முறையில் 7.8 கோடி ரூபா பெறுமதியான 3 கிலோவுக்கு அதிகமான தங்கம் மற்றும் ஸ்மார்ட் கையடக்க தொலைபேசிகள் ஆகியவற்றை நாட்டுக்குள் எடுத்து வர முயற்சித்துள்ள நடவடிக்கை தொடர்பில் பாராளுமன்றம் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டுமென சபாநாயகருக்கு எதிர்க்கட்சி பாராளுமன்ற உறுப்பினர்கள் கடித மூலம் அறிவித்துள்ளனர்.

குறிப்பாக, விமான நிலையத்தில் பிரபுக்கள் முனையத்தின் ஊடாக சட்டவிரோதமாக இந்தப் பொருட்களை வெளியே எடுத்துச் செல்வதற்கு அந்தப் பாராளுமன்ற உறுப்பினர் தமது பாராளுமன்ற சிறப்புரிமையையும் இராஜதந்திர வெளிநாட்டு கடவுச்சீட்டையும் பயன்படுத்தியுள்ளாரென்றும் குறிப்பிட்டுள்ளனர்.

இதேவேளை, தனது அரசியல் வாழ்க்கை இத்துடன் நிறைவு பெறுவதாக, புத்தளம் மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் அலி சப்ரி ரஹீம் நேற்று தெரிவித்துள்ளார்.

பாராளுமன்ற உறுப்பினர் அலி சப்ரி ரஹீம், ஊடகமொன்றுக்கு தெரிவித்த போதே இவ்வாறு தெரிவித்துள்ளார். மேலும், தான் எவ்வித மோசடிக் குற்றச் செயல்களிலும் ஈடுபடவில்லை. நேற்று முன்தினம் இடம்பெற்ற சம்பவம் தொடர்பில் சமூக மத்தியில் அதிகளவுக்கு பேசுபொருளாக தான் மாறியதாகவும் இத்துடன் தனது அரசியல் பயணம் முடிவுக்கு வரும் எனவும் தெரிவித்தார்.

எனினும், தன்னை புத்தளம் பெரிய பள்ளிவாசல், சிவில் அமைப்புகள் மற்றும் புத்தளம் மக்கள் கோரிக்கை விடுக்கும் பட்சத்தில் தான் மீண்டும் பாராளுமன்ற தேர்தலுக்கு போட்டியிடுவேன் என்றும் அது தவிர, புத்தளம் மாவட்டத்தில் எவர் தேர்தலுக்கு முன்னின்றாலும் தாம் அதற்கு ஆதரவாக இருப்பதாவும் தெரிவித்தார்.


Add new comment

Or log in with...