பள்ளிவாசல்துறை முஸ்லிம் மகாவித்தியாலய மாணவர்கள் கரப்பந்தாட்டத்தில் அதீத திறமை

இலங்கையில் கரப்பந்தாட்ட விளையாட்டை விருத்தி செய்யும் வகையில் அரசும், கல்வியமைச்சும் பலவிதமான நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றன. இதற்கேற்ப அடிப்படை வசதிகளற்ற மற்றும் விளையாட்டு உபகரணங்கள் இல்லாத நிலையில் கற்பிட்டி கல்விக் கோட்டத்திலுள்ள பாடசாலைகளுக்கிடையிலான கரப்பந்தாட்ட சுற்றுப் போட்டி நடைபெறவுள்ளது. புத்தளம் வலயமட்ட போட்டிகளில் பங்கேற்கும் வகையில் 16 மற்றும் 18 வயதுப் பிரிவுகளில் பள்ளிவாசல்துறை முஸ்லிம் மகாவித்தியாலய மாணவர்கள் தெரிவு செய்யப்பட்டுள்ளனர்.

இப்பாடசாலை மாணவர்கள் எதிர்காலத்தில் மாவட்ட, மாகாண, தேசிய மட்டத்தில் சாதனை படைப்பார்கள் என்பதில் எவ்வித ஐயமுமில்லை.

இப்பாடசாலை அதிபர் எம்.எச்.யு.பரீதா அவர்களின் நிர்வாகத்தின் கீழ், ஆசிரியர்கள், பாடசாலை அபிவிருத்தி சபை மற்றும் பழைய மாணவர் சங்கம் என்பவற்றின் மகத்தான பங்களிப்பில் உடற்கல்வித்துறை ஆசிரியர் எஸ்.ஐ.எம்.அம்ஜத் அவர்களின் தொடர் முயற்சியினால் இந்த அடைவு கிடைக்கப் பெற்றுள்ளமை பாராட்டத்தக்க விடயமாகும்.

இப்பாடசாலையில் கல்வி கற்று , கரப்பந்தாட்டத் துறையில் பிரகாசித்த எம்.தஹீர் என்ற பழைய மாணவர் இலங்கை இராணுவ கரப்பந்தாட்ட அணியில் இடம்பெற்று இன்றும் தனது திறமையை வெளிக்காட்டி வருவது பெருமை தருகின்றது.

இப்பாடசாலையிலிருந்து யாழ்ப்பாணம் பல்கலைக்கழகத்திற்குத் தெரிவாகி அங்கு கல்வி கற்றுவரும் எம்.ஐ.எம்.ஜராத் என்ற பழைய மாணவர் அனைத்துப் பல்கலைக்கழகங்களுக்கிடையிலான கரப்பந்தாட்ட சுற்றுப் போட்டியில் பங்கேற்று யாழ்ப்பாணம் பல்கலைகழகத்திற்கு பெருமை சேர்த்துள்ளார். அத்துடன் தேசிய பல்கலைக்கழக கரப்பந்தாட்ட அணியில் இடம்பெற்றுள்ளதுடன் அண்மையில் கொழும்பு பண்டாரநாயக்க சர்வதேச மாநாட்டு மண்டபத்தில் இடம்பெற்ற விருது விழாவில் கெளரவிக்கப்பட்டமை இப்பாடசாலைக்கு மகுடம் சூட்டியுள்ளது. கற்பிட்டி கல்வி சமூகம் இப்பாடசாலை மாணவர்களுக்கு கரப்பந்தாட்ட துறையில் உதவ முன்வரும் போது தேசிய மட்டத்தில் மாத்திரமல்ல சர்வதேச ரீதியிலும் சாதனை படைப்பார்கள் என்ற நம்பிக்கை அதிகரித்துள்ளது.

எம்.ஐ.எம்.அஸ்ஹர்...
(மாளிகைக்காடு குறூப் நிருபர்)


Add new comment

Or log in with...