பொத்துவில் பிரதேசத்தில் மாலையானதும் படையெடுக்கும் காட்டு யானைகள்!

அம்பாறை மாவட்டம் பொத்துவில் பிரதேச செயலாளர் பிரிவுக்குட்பட்ட குடியிருப்புப் பகுதிகளில் காட்டு யானைகளின் அட்டகாசம் அதிகரித்துக் காணப்படுகிறது. இதனால் அப்பகுதிகளில் உள்ள மக்கள் பல்வேறு இழப்புகளைச் சந்தித்து வருகின்றனர்.

பொத்துவில் பிரதேசத்தின் அல்ஹுதா, இன்ஸ்பெக்டர் ஏத்தம், ஆர்.எம்.நகர், செங்காமம், ரொட்டை, ஆத்திமுனை, ஒருக்காமலை, ஹிஜ்ரா நகர், கொட்டுக்கல், குடாக்கல்லி, ஊறணி, மற்றும் களப்புக்கட்டு போன்ற மக்கள் வாழும் குடியிருப்புப் பகுதிக்குள் தினமும் நுழையும் காட்டு யானைகள் அங்கு பல்வேறு சேதங்களை ஏற்படுத்திவிட்டுச் செல்கின்றன.

குறிப்பாக மாலையானதும் அங்கு வருகை தரும் யானைகள் வீடுகள், பாதுகாப்பு வேலிகள் போன்றவற்றை உடைத்து அக்குடியிருப்பு பகுதிகளிலுள்ள பயிர்கள், செடிகொடிகள் மற்றும் பயன்தரும் மரங்களையும் அழித்துவிட்டு செல்வதாக அங்குள்ள மக்கள் கவலை தெரிவிக்கின்றனர்.

அத்துடன் சிறுபோக விவசாய நடவடிக்கைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ள நிலையில் தினமும் வயல் பிரதேசங்களுக்குள் நுழையும் காட்டு யானைகள் அங்கும் பல்வேறு சேதங்களை ஏற்படுததுவதாகவும் பெரும் அச்சத்துடனே விவசாய நடவடிக்கைகளில் ஈடுபட்டு வருவதாகவும் விவசாயிகள் குறிப்பிடுகின்றனர்.

அண்மையில் இன்ஸ்பெக்டர் ஏத்தம் பகுதிக்குள் நுழைந்த காட்டு யானைகள் அங்குள்ள பாடசாலை சுற்றுமதில், நுழைவாயில் போன்றவற்றை உடைத்து மிக மோசமாக சேதப்படுத்தியுள்ளதுடன், அப்பகுதியில் உள்ள சில வீடுகளின் சுற்றுமதில், பாதுகாப்பு வேலிகளையும் உடைத்து சேதப்படுத்திவிட்டு சென்றுள்ளன.

பொத்துவில் பிரதேசத்தில் யானைகளின் தாக்குதல்களினால் பலர் உயிரிழந்துள்ளதுடன், மேலும் பலர் பலத்த காயங்களுடன் உபாதைக்குள்ளாகியுள்ளதாகவும், தொடர்ந்தும் யானைகளின் அச்சுறுத்தல்கள் காணப்படுவதாகவும் மக்கள் மேலும் தெரிவிக்கின்றனர்.

யானைகளினால் தொடர்ந்தும் இழப்புக்களை சந்தித்துகொண்டிருக்கும் பொத்துவில் பிரதேச மக்களின் பாதுகாப்பை உறுதிப்படுத்துவதற்கு அரசியல்வாதிகளும், அதிகாரிகளும் காத்திரமான நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டுமென்று கோரிக்கை விடுக்கப்படுகின்றது.

ஆதம்லெப்பை றியாஸ்...

(பாலமுனை விசேட நிருபர்)


Add new comment

Or log in with...