ஜனக ரத்நாயக்கவை வீட்டுக்கு அனுப்ப 123 பேர் கையுயர்த்தினர்

- பிரேரேணை 77 பேரின் எதிர்ப்புக்கு மத்தியில் 46 வாக்குகளால் நிறைவேற்றம்
- இதுவரை அரசுக்கு ஆதரவளித்த அலி சப்ரி ரஹீம் எதிர்த்து வாக்களிப்பு
- பிரேரணைக்கு ஆதரவு: 123; எதிர்ப்பு: 77; வாக்களிக்காதோர்: 24

இலங்கை பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழுவின் (PUCSL) தலைவர் ஜனக ரத்நாயக்கவை அப்பதவியிலிருந்து நீக்குவதற்கான தீர்மானம் இன்று (24) பாராளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டது.

பொது பயன்பாடுகள் ஆணைக்குழுவின் தலைவர் பதவியிலிருந்து ஜனக்க ரத்நாயக்கவை நீக்குவது தொடர்பான பிரேரணைக்கு ஆதரவாக 123 எம்.பி.க்களும், எதிராக 77 எம்.பிக்களும் வாக்களித்திருந்தனர்.

அதற்கமைய குறித்த பிரேரணை 46 மேலதிக வாக்குகளால் நிறைவேற்றப்பட்டுள்ளது.

குறித்த பிரேரணை மீதான விவாதம் இன்று காலை 10.30 மணி முதல் பி.ப. 5.00 மணி வரை பாராளுமன்றத்தில் இடம்பெற்று அதன் பின்னர் வாக்கெடுப்பு நடத்தப்பட்டது.

சபை முதல்வர் அமைச்சர் சுசில் பிரேமஜயந்த இந்த பிரேரணையை பாராளுமன்றத்தில் இன்று முற்பகல் சமர்ப்பித்தார்.

அதன் மீதான விவாதத்தை மின்சக்தி எரிசக்தி அமைச்சர் கஞ்சன விஜேசேகர ஆரம்பித்து வைத்தார்.

இலங்கை பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு சட்டத்தின் 7ஆவது பிரிவின் பிரகாரம், ஜனக ரத்நாயக்கவுக்கு எதிரான பாராளுமன்ற தீர்மானம் சமர்ப்பிக்கப்பட்டு நிறைவேற்றப்பட்டுள்ளது.

ஐக்கிய மக்கள் சக்தி, சுதந்திர மக்கள் கூட்டணி, தேசிய மக்கள் சக்தி (ஜே.வி.பி.) எம்.பிக்கள் பிரேரணைக்கு எதிராக வாக்களித்தனர்.

தமிழ் தேசியக் கூட்டமைப்பு, தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் பாராளுமன்ற உறுப்பினர்கள் உள்ளிட்ட 24 பேர் வாக்களிப்பின் போது அவையில் இருக்கவில்லை.

இதேவேளை, தங்கம் மற்றும் கையடக்க தொலைபேசிகளுடன்  விமான நிலையத்தில் நேற்று (23) சுங்கத் திணைக்களத்தின் கட்டுப்பாட்டில் வைக்கப்பட்டு இன்று (24) காலை விடுவிக்கப்பட்ட அலி சப்ரி ரஹீம் எம்.பி. இன்று பாராளுமன்றத்திற்கு வருகை தந்திருந்ததோடு, அவர் பிரேரணைக்கு எதிராக வாக்களித்திருந்தனர்.

இதற்கு முன்னர் பல சந்தர்ப்பங்களில் அரசாங்கத்திற்கு ஆதரவு வழங்கி வாக்களித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

இது தொடர்பில் பாராளுமன்ற ஊடகவியலாளர்களிடம் கருத்து தெரிவித்த அவர், தான் எதிர்கொண்ட சம்பவத்திற்கு தனக்கு தொடர்பு இல்லை என்றும் தன்னுடன் இணைந்து வந்த நபரே அதற்கு பொறுப்பு எனவும், இது தொடர்பில் ஜனாதிபதியின் செயலாளர் சமன் ஏக்கநாயக்க மற்றும் பிரதமரிடம் கூறியதாகவும், அவர்கள் அதற்கு எவ்வித உதவியும் செய்யவிலையெனவும், எந்த தவறும் செய்யாத தான், ரூ. 75 இலட்சம் அபராதம் செலுத்தி வெளியே வந்ததாகவும் தெரிவித்தார். எவ்வித உதவியும் செய்யாததால் தான் அரசாங்கத்திற்கு எதிராக வாக்களித்ததாகவும் அவர் குறிப்பிட்டார்.

பொதுஜன பெரமுன, அரசாங்கத்திற்கு ஆதரவு தெரிவிக்கும் எதிர்க்கட்சியிலுள்ள எம்.பிக்கள், பாராளுமன்றத்தில் சுயாதீனமாக செயற்படும் சிலரும் ஜனக்க ரத்நாயக்கவை பொது பயன்பாடுகள் ஆணைக்குழுவின் தலைவரை பதவியில் இருந்து  நீக்கும் பிரேரணைக்கு ஆதரவாக வாக்களித்திருந்தனர்.

ஶ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியைச் சேர்ந்த துமிந்த திஸாநாயக்க, அநுர பிரியதர்ஷன யாப்பா,  ஜோன் செனவிரத்ன, குமார் வெல்கம ஆகியோரும் பிரேரணைக்கு ஆதரவாக வாக்களித்திருந்தனர்.

ஐக்கிய மக்கள் சக்தி பாராளுமன்ற உறுப்பினர்களான வடிவேல் சுரேஷ், ஏ.எச்.எம். பௌஸி ஆகியோரும் பிரேரணைக்கு ஆதரவாக வாக்களித்திருந்தனர்.

மின்சக்கதி மற்றும் வலுசக்தி அமைச்சர் கஞ்சன விஜேசேகரவுக்கும், ஜனக ரத்நாயக்கவுக்கும் இடையில் மின்சாரக் கட்டணத் திருத்தம், மின்வெட்டு நேரம் உள்ளிட்ட பல்வேறு விடயங்கள் தொடர்பில் பல்வேவறு வாதப் பிரதிவாதங்கள் இடம்பெற்றதை அடுத்து குறித்த விடயம் தொடர்பில் அமைச்சர் முன்வைத்த யோசனைனக்கு ஆளும் கட்சி எம்.பிக்கள் ஆதரவு வழங்குவதாக தெரிவித்த நிலையில் இவ்விடம் பாராளுமன்றத்திற்கு கொண்டு வரப்பட்டிருந்தது.


Add new comment

Or log in with...