தகுதியான அனைவருக்கும் அரசின் ஆறுதல் நிவாரணம்

உலகில் மக்களின் நலன்களுக்காக முன்னுரிமை அளித்து செயற்பட்டுவரும் நாடுகளில் இலங்கையும் ஒன்றாகும். அந்த வகையில் ஆரம்பக்கல்வி முதல் உயர்கல்வி வரை இங்கு முற்றிலும் இலவசமாகப் பெற்றுக் கொடுக்கப்படுகிறது. அதேபோன்று சுகாதார சேவையும் முற்றிலும் இலவசமானது. இச்சேவைகளுக்காக விசாலமான ஆளணி மற்றும் உட்கட்டமைப்பு வசதிகள் ஏற்படுத்தப்பட்டுள்ளன. இச்சேவைகளுக்காக வரவு செலவுத்திட்டத்தின் ஊடாக வருடா வருடம் கோடிக்கணக்கான ரூபா செலவிடப்படுகின்றது.

அத்தோடு வறுமை ஒழிப்பு மற்றும் சமூக பாதுகாப்புக்காகவும் வருடா வருடம் கோடிக்கணக்கில் செலவிடப்படுவதும் இங்கு சுட்டிக்காட்டப்பட வேண்டிய விடயமாகும். இவ்வாறான நிலையில் கடந்த வருடத்தின் முற்பகுதியில் நாடு கடுமையான பொருளாதார நெருக்கடிக்கு முகம்கொடுத்தது. இப்பொருளாதார நெருக்கடியின் தாக்கங்களும் அழுத்தங்களும் வெளிப்படையானவை. அதனால் இவை தொடர்பில் கருத்தில் கொண்டு அவ்வப்போது பல்வேறு விதமான நிவாரண நடவடிக்கைகளை அரசாங்கம் முன்னெடுத்து வருகின்றது.

அந்த வகையில் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவின் பணிப்புரைக்கமைய மற்றொரு நிவாரணத்திட்டத்தை நடைமுறைப்படுத்துவதற்கான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன.

'அஸ்வெசும' (ஆறுதல்) என்ற பெயரில் ஜூலை முதலாம் திகதி முதல் ஆரம்பிக்கப்படவிருக்கும் இவ்வேலைத்திட்டத்தின் ஊடாக வறிய மற்றும் குறைந்த வருமானம் பெறும் 33 இலட்சத்துக்கும் மேற்பட்டோர் நன்மைகள் பெற்றுக்கொள்ள உள்ளனர்.

இத்திட்டத்தின் கீழ், தற்காலிக நெருக்கடிகளுக்கு முகம்கொடுத்திருக்கும் நான்கு இலட்சம் பேருக்கு ரூபா 2500.00 படி மாதாந்தக் கொடுப்பனவு 2023 டிசம்பர் 31 ஆம் திகதி வரையில் வழங்கப்பட உள்ளது. மேலும் பாதிக்கப்படக்கூடிய நான்கு இலட்சம் பேருக்கு ரூபா 5000.00 கொடுப்பனவு 2024 ஜூலை 31 வரையிலும் பெற்றுக்கொடுக்கப்படவிருக்கிறது. மேலும் வறியோர் என்று அறியப்பட்ட பயனாளிகள் எட்டு இலட்சம் பேருக்காக ரூபா 8500.00 கொடுப்பனவும் மிக வறுமையானவர்களுக்காக மாதாந்தம் ரூபா 15,000.00 கொடுப்பனவும் 2023 ஜூலை 01 முதல் மூன்று வருட காலத்திற்கு வழங்கப்படவுள்ளன.

தற்போது நலன்புரி நன்மைகள் கொடுப்பனவுகளை பெற்றுக்கொள்ளும் 72,000 மாற்றுத் திறனாளிகளுக்கு மாதாந்தம் ரூபா 5000.00 வீதமும், சிறுநீரக பாதிப்புக்கான நிவாரணங்களை பெறும் 39,150 பேருக்கு ரூபா 5000.00 வீதமும் முதியவர்களுக்கான கொடுப்பனவுகளை பெறும் 416,667 பேருக்கு ரூபா 2000.00 ரூபாவும் கொடுப்பனவும் பெற்றுக்கொடுக்கப்பட உள்ளது.

இவ்வாறான சூழலில் சிலர், இத்திட்டத்தின் கீழ் மலையகப் பெருந்தோட்ட மக்களுக்கு நன்மைகள் கிடைக்கப்பெறப் போவதில்லை' என்றும் இந்த உதவித் திட்டங்களில் இருந்து அவர்களது பெயர்கள் நீக்கப்படுவதாகவும் பிரசாரம் செய்கின்றனர்.

இது தொடர்பில் கவனம் செலுத்திய தோட்ட உட்கட்டமைப்பு வசதிகள் அபிவிருத்தி மற்றும் நீர்வழங்கல் அமைச்சரும் இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் பொதுச் செயலாளருமான ஜீவன் தொண்டமான் ஊடக சந்திப்பொன்றை நடாத்தி, 'அரசாங்கத்தினால் முன்னெடுக்கப்படும் சமுர்த்தி உள்ளிட்ட சமூகப் பாதுகாப்பு உதவித்திட்டங்களைப் பெறத் தகுதியான அனைவருக்கும் அந்த உதவிகள் கிடைக்கப்பெறும். இந்த உதவித்திட்டங்களில் இருந்து மலையகப் பெருந்தோட்ட மக்களின் பெயர்கள் நீக்கப்படுவதாகத் தெரிவிக்கப்படும் போலிப் பிரசாரத்தில் எவ்வித உண்மையும் இல்லை. மக்கள் மத்தியில் பீதியை ஏற்படுத்துவதற்காக சிலர் முன்னெடுக்கும் முயற்சியே அவை' என்று குறிப்பிட்டுள்ளார்.

அரசாங்கமானது மக்களின் நலனோன்புதல்களுக்கு முன்னுரிமை அளித்து செயற்படுகிறது. நாடு முகம்கொடுத்த பொருளாதார நெருக்கடி ஒரு பிரதேசத்தையோ, ஒரு சமூகத்தையோ இலக்கு வைத்ததல்ல. இந்நெருக்கடியினால் இந்நாட்டில் வாழும் எல்லா மக்களும் கூடிக் குறைந்த வகையில் தாக்கங்களுக்கும் அழுத்தங்களுக்கும் முகம்கொடுத்துள்ளார்கள். அதற்கேற்ப எல்லா மக்களுக்கும் நிவாரணங்களைப் பெற்றுக்கொடுக்கும் வகையில்தான் இத்திட்டம் முன்னெடுக்கப்பட உள்ளது. அதுவே நியாயமானதும் கூட. அந்த அடிப்படையில்தான் அரசாங்கமும் செயற்பட்டு வருகிறது.

இருந்த போதிலும் இந்நிவாரணத்திட்டம் குறித்து போலிப்பிரசாரங்களை முன்னெடுப்பதன் மூலம் மக்கள் மத்தியில் பீதியை ஏற்படுத்தி அற்ப அரசியல் இலாபம் தேடிட சிலர் முயற்சி செய்கிறனர். ஆனால் இவர்களது பிரசாரத்தின் உண்மை முகத்தை மக்கள் அறியாதவர்கள் அல்லர்.

இப்பின்புலத்தில்தான் அமைச்சர் ஜீவன் தொண்டமான், 'போலி பிரசாங்களை முன்னெடுத்து மக்கள் மத்தியில் பீதியை ஏற்படுத்த வேண்டாம்' என்றும் 'தகுதியான அனைவருக்கும் நிவாரண உதவித் திட்டங்கள் கிடைக்கப்பெறும்' என்றும் 'எவருக்கும் பாகுபாடு காட்டப்பட மாட்டாது' என்றும் உறுதிபட தெரிவித்திருக்கிறார்.

ஆகவே மலையகப் பெருந்தோட்ட மக்களை பீதிக்குள்ளாக்கும் போலிப் பிரசாரங்களை இனியாவது தவிர்த்துக் கொள்வதில் சம்பந்தப்பட்ட தரப்பினர் கவனம் செலுத்த வேண்டும். ஆனால் இப்பிரசாரங்களை மக்கள் முற்றாக நிராகரக்கத் தவறலாகாது. அதுவே சமூகநல ஆர்வலர்களின் கருத்தாகும்.


Add new comment

Or log in with...