சுமார் 3.5kg தங்கம்; 91 ஸ்மார்ட் கையடக்கத் தொலைபேசியுடன் கைதான அலி சப்ரி ரஹீம்

- மொத்த பெறுமதி சுமார் ரூ. 8 கோடி

இன்று (23) காலை ஐக்கிய அரபு இராச்சியத்தின் துபாயிலிருந்து Fly Dubai விமானம் FZ547 இலிருந்து இலங்கைக்கு வந்த, விசேட நபர்களுக்காக ஒதுக்கப்பட்ட வாயில் ஊடாக கட்டுநாயக்க விமான நிலையத்திலிருந்து புறப்பட்ட புத்தளம் மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் எம்.ஏ. அலி சப்ரி ரஹீம் இலங்கை சுங்கத்தின் வருமான கண்காணிப்பு பிரிவின் அதிகாரிகளால் சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்டுள்ளார்.

பின்னர், அவரது பயணத் பொதிகளை சோதனையிட்ட போது, ​​அதில் பதுக்கி வைத்திருந்த தங்க பிஸ்கட்கள், நகைகள் மற்றும் ஸ்மார்ட் கையடக்கத் தொலைபேசிகள் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டதாக, சுங்கத் திணைக்கள பேச்சாளரும் அதன் பணிப்பாளருமான சுதத்த சில்வா தெரிவித்தார்.

குறித்த தங்கத்தின் மொத்த நிறை 3 கிலோ 397 கிராம் எனவும் அதன் சந்தைப் பெறுமதி ரூ. 74 மில்லியன் (ரூ. 7.4 கோடி) எனவும் மதிப்பிடப்பட்டுள்ளது.

கையடக்கத் தொலைபேசிகளில் 91 ஸ்மார்ட் போன்கள் மீட்கப்பட்டுள்ளதோடு, அதன் சந்தைப் பெறுமதி ரூ. 4.2 மில்லியன் (ரூ. 42 இலட்சம்) என மதிப்பிடப்பட்டுள்ளது.

இதன்படி, இவற்றின் மொத்த சந்தைப் பெறுமதி ரூ. 78.2 மில்லியன் (சுமார் ரூ. 8 கோடி) ஆகும்.

தற்போது இலங்கை சுங்கத்தின் வருமான கண்காணிப்பு திணைக்கள அதிகாரிகள் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருவதாகவும், விசாரணை முடிவில் சுங்க சோதனையும் நடாத்த திட்டமிடப்பட்டுள்ளதாகவும், சுதத்த சில்வா மேலும் தெரிவித்தார்.

60 வயதான அலி சப்ரி ரஹீம் புத்தளம் மாவட்டத்திலிருந்து கடந்த பாராளுமன்றத் தேர்தலில் முதன் முறையாக பாராளுமன்றத்திற்கு தெரிவானதோடு, அவர் முஸ்லிம் தேசிய கூட்டமைப்பு எனும் கட்சியில் போட்டியிட்டு இவ்வாய்ப்பை பெற்றிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.


Add new comment

Or log in with...