அன்னை மரியாள் அனைவரையும் குழந்தைகளாக ஏற்றுக்கொள்கிறார்

திருத்தந்தை பிரான்சிஸ்

கடவுளின் ஞானமாம் இயேசுவை வரவேற்கும் பொருட்டு தன் வாழ்க்கை, பழக்கவழக்கங்கள், கனவுகள் மற்றும் விருப்பங்களை மாற்றியமைக்க துணிவுடன் ஆண்டவரின் அழைப்பை ஏற்றுக்கொண்டவர் மரியாள் என்றும் நாசரேத்து, கல்வாரிமலை, சீடர்கள் இருந்த மேல் அறை போன்ற எல்லா இடங்களிலும் உடனிருந்து இயேசுவின் உயிர்ப்பின் ஒளியைத் தாழ்ச்சியுடன் பகிர்ந்து கொண்டவர் மரியாள் எனவும் திருத்தந்தை பிரான்சிஸ் தெரிவித்தார்.

வரவேற்பு என்பது அன்னை மரியாளின் உடன்இருப்பு மற்றும் அவரது பணியின் அடிப்படை பரிமாணம் என எடுத்துரைத்த திருத்தந்தை அவர்கள், அன்னையின் முன்மாதிரியைப் பின்பற்றி குழுக்கள் மற்றும் கடவுள் நம்மிடம் ஒப்படைத்துள்ள மக்களிடம் செயல்படுமாறும் கேட்டுக்கொண்டார்.

வரவேற்பு அதிகமாகத் தேவைப்படும் புதிய சூழ்நிலைகளில் எல்லோருடனும் நம்மை நெருக்கமாக்குவதற்கு படைப்பாற்றல் தேவை என்றும் திறந்த இதயத்துடன் வரவேற்பு வழங்கப்பட வேண்டும் என்றும் மனிதகுலம் அனைத்திற்கும் மன்னிப்பு, உரையாடல், ஏற்றுக்கொள்ளுதல், அமைதி ஆகியவற்றின் பாதைகளை துணிவு மற்றும் படைப்பாற்றலுடன் உருவாக்க அன்னை மரியாளின் துணையை நாடவேண்டும் என்றும் அவர் வலியுறுத்தினார். நாம் பேசும் நற்பண்புகள் ஒவ்வொரு நிலையிலும் மக்கள் அன்பு செய்யப்படுதல் மற்றும் மதிக்கப்படுதலை உணரும் போது செழித்து வளரும் என்றும் அன்னை மரியாள் தன் மென்மையான கரங்களால் நம் அனைவரையும் குழந்தைகளாக ஏற்றுக்கொள்கிறார் என்றும், அன்னை மரியாள் மீது உண்மையான பக்தி கொண்டு அன்பால் ஒருவரை ஒருவர் அணைத்துக் கொள்ளுங்கள் என்றும் திருத்தந்தை பிரான்சிஸ் தெரிவித்தார்.


Add new comment

Or log in with...