இருதரப்பு ஈடுபாடுகளை மேலும் மேம்படுத்துவதில் கூடுதல் கவனம்

- ஐரோப்பிய ஒன்றிய பிரதிநிதிகளுடன் அமைச்சர் ஜெய்சங்கர் பேச்சு 

இந்தியாவும் ஐரோப்பிய ஒன்றியமும் இரு தரப்பு ஈடுபாடுகளை மேலும் மேம்படுத்துவது குறித்து கவனம் செலுத்தியுள்ளன. 

இந்தியா - ஐரோப்பிய ஒன்றியத்தின் வர்த்தக மற்றும் தொழில்நுட்ப கவுன்சிலின் முதலாவது அமைச்சர்கள் கூட்டத்தில் கலந்து கொள்ள பெல்ஜியம் நாட்டுக்கு விஜயம் செய்திருந்த இந்திய வெளிவிவகார அமைச்சர் கலாநிதி எஸ். ஜெய்சங்கர் ஐரோப்பிய ஒன்றியத்தின் உயர்மட்டப் பிரதிநிதிகளுடன் இவ்விடயம் குறித்து கலந்துரையாடியுள்ளார். 

இது தொடர்பில் அவர் விடுத்துள்ள ட்வீட்டில், 'ஐரோப்பிய ஒன்றியத்தின் உயர்மட்டப் பிரதிநிதி ஜோசப் பொரெல்லப் உடனான சந்திப்பு ஆக்கபூர்வமாக அமைந்திருந்தது. இச்சந்திப்பின் போது வர்த்தகம் மற்றும் தொழில்நுட்ப கவுன்சில், ஜி 20 நாடுகள் அமைப்பின் மாநாடு, உலகளாவிய தெற்குக்கான குரல், உக்ரைன், இந்து பசுபிக் நிலைமை உள்ளிட்ட விடயங்கள் குறித்து சிறந்த கலந்துரையாடலை நாம் மேற்கொண்டுள்ளோம். இத்தகைய கருத்துப் பரிமாறல்கள் எங்களுக்கிடையிலான மூலோபாயக் கூட்டாண்மையை வலுப்படுத்தும்' என்றுள்ளார். 

இரு நாட்கள் நடைபெற்ற இந்தியா - ஐரோப்பிய ஒன்றியத்தின் வர்த்தக மற்றும் தொழில்நுட்ப கவுன்சிலின் முதலாவது அமைச்சர்கள்  கூட்டத்தில் அமைச்சர் ஜெய்சங்கருடன் இந்திய மத்திய வர்த்தக அமைச்சர் பியூஷ் கோயல் மற்றும் இலத்திரனியல் மற்றும் தகவல் தொழில்நுட்பத் துறை அமைச்சர் அஷ்வினி வைஷ்ணவ் ஆகியோரும் கலந்து கொண்டனர். 

அமெரிக்காவுக்கு அடுத்தபடியாக ஐரோப்பிய ஒன்றியத்துடன் வர்த்தக மற்றும் தொழில்நுட்ப கவுன்சிலை நிறுவிய நாடாக இந்தியா விளங்குகிறது. 

இக்கூட்டத்தில் உரையாற்றிய வெளிவிவகார அமைச்சர், 'வர்த்தகம் மற்றும் தொழில்நுட்ப கவுன்சிலின் இந்த முதல் கூட்டம் இந்தியாவிற்கும் ஐரோப்பிய ஒன்றியத்திற்கும் இடையிலான மூலோபாயக் கூட்டாண்மையில் குறிப்பிடத்தக்க மைல்கல்லாகும். நாங்கள் ஒருவருக்கொருவர் வெளிப்படையாக முக்கியமான பங்காளிகளாவோம். ஆனால் வர்த்தக மற்றும் தொழில் நுட்ப கவுன்சிலைப் பிரதிநிதித்துவப்படுத்துவது உலகளாவிய பாதுகாப்புக்கான முக்கிய விடயங்களில் கவனம் செலுத்த வழிவகுக்கும்' என்றும் கூறியுள்ளார்.


Add new comment

Or log in with...