உணவு தானியங்களில் இந்தியாவின் தன்னிறைவுக்கு உதவிய காரணிகள்

- ஷங்காய் ஒத்துழைப்பு மாநாட்டில் கமநலத்துறை அமைச்சர்

உணவுத் தானியங்களில் இந்தியா இன்று தன்னிறைவு அடைந்திருப்பதற்கு உதவியுள்ள காரணிகளை ஷங்காய் ஒத்துழைப்பு அமைப்பின் அங்கத்துவ நாடுகளது விவசாய அமைச்சர்கள் மாநாட்டில் கமநல மற்றும் விவசாயிகள் நலனோம்புதல்கள் மத்திய அமைச்சர் நரேந்திர சிங்க் தோமர் குறிப்பிட்டுள்ளார்.

'எமது கொள்கை வகுப்பாளர்களின் தொலைநோக்கு, விவசாயத்துறை விஞ்ஞானிகளின் திறமை மற்றும் விவசாயிகளின் அயராத உழைப்பு என்பன அளித்துள்ள பிரதிபலன்களின் பயனாக உணவுத் தானியங்களில் இன்று தன்னிறைவு அடைந்துள்ள எமது நாடு,  பழங்கள், மரக்கறி வகைகள், பால், முட்டை, மீன் உள்ளிட்ட பல பொருட்களின் உற்பத்தியிலும் முன்னணியில் திகழுகிறது' என்றும் தெரிவித்துள்ளார். 

ஷங்காய் ஒத்துழைப்பு அமைப்பின் அங்கத்துவ நாடுகளது விவசாய அமைச்சர்கள் கூட்டம் இந்தியாவின் கமநல மற்றும் விவசாயிகள் நலனோம்புதல்கள் அமைச்சர் தலைமையில் நடைபெற்றுள்ளது. இக்கூட்டத்தில் உரையாற்றும் போதே அவர் மேற்கண்டவாறு கூறியுள்ளார்.

இந்தியா, ரஷ்யா, உஸ்பெகிஸ்தான், கஜகஸ்தான், கிர்கிஸ்தான், தஜிகிஸ்தான், சீனா, பாகிஸ்தான் ஆகிய நாடுகள் பங்குபற்றிய இம்மாநாட்டில் தொடர்ந்து உரையாற்றிய மத்திய அமைச்சர் நரேந்திர சிங்க், 'தற்போதைய சூழ்நிலையில் உணவு விநியோகச் சங்கிலியின் இயல்பான செயல்பாட்டைப் பேணவும், உணவு மற்றும் போஷாக்கின் பாதுகாப்புக்கும் பல்வேறு நாடுகளுக்கும் இடையில் நெருங்கிய தொடர்பும் ஒத்துழைப்பும் இருப்பது அவசியம்.

உலகளவில் விவசாயத் துறையில் இந்தியா மிகப்பெரிய தொழில் வழங்குனராக உள்ளது. எமது சனத்தொகையில் பாதிக்கும் மேற்பட்டவர்கள் விவசாயம் மற்றும் அதனுடன் தொடர்புடைய துறைகளில் ஈடுபட்டுள்ளனர். எமது பொது விநியோக முறையும், விவசாயிகளுக்கான விலை ஆதரவு முறையும் உலகிலேயே தனித்தன்மை வாய்ந்தது' என்றும் சுட்டிக்காட்டியுள்ளார்.


Add new comment

Or log in with...