சிறு போக நெற்செய்கைக்கு 25,000 மெ.தொ. யூரியா இறக்குமதி

- மின்சார வாகன இறக்குமதி தொடர்பில் மேலும் சலுகைக் காலம்
- பெற்றோலியக் கூட்டுத்தாபன பணிகளுக்கு வாடகைக்கு கப்பல்
- இவ்வார அமைச்சரவைக் கூட்டத்தில் 7 முடிவுகள்

1. 2023 சிறுபோகச் நெற்செய்கைக்கான யூரியா உரத்தை இறக்குமதி செய்தல்
2023 சிறுபோகச் செய்கைக்காக இரண்டு அரச உரக் கம்பனிகள் மற்றும் தனியார் துறையினரிடம் காணப்படுகின்ற யூரியா உரத்தின் அளவு மற்றும் கமநல சேவைகள் நிலையங்களில் எஞ்சியுள்ள தொகையைக் கருத்தில் கொள்ளும் போது, 25,000 மெற்றிக்தொன் யூரியா உரம் இறக்குமதி செய்ய வேண்டியுள்ளமை கண்டறியப்பட்டுள்ளது.

அதற்கமைய, லங்கா உரக் கம்பனி மூலமாக 60% சதவீதமும், வரையறுக்கப்பட்ட கொழும்பு கொமர்ஷல் உரக்கம்பனி மூலமாக 40% சதவீதமுமாக குறித்த உரத்தின் அளவை இறக்குமதி செய்வதற்காக விவசாய அமைச்சர் சமர்ப்பித்த யோசனைக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.

2. இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபனத்தின் பராமரிப்பு மற்றும் துரித பதிலளிப்புக் கப்பலொன்றை வாடகைக்குப் பெறல்
இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபனத்தின் பராமரிப்பு மற்றும் துரித பதிலளிப்புக் கப்பலொன்றை சர்வதேச போட்டி விலைமனுக் கோரல் முறையைப் பின்பற்றி வாடகை அடிப்படையில் பெற்றுக்கொள்வதற்காக 2022.11.21 அன்று இடம்பெற்ற அமைச்சரவைக் கூட்டத்தில் அங்கீகாரம் வழங்கப்பட்டது.

அதற்கமைய, அமைச்சரவையால் நியமிக்கப்பட்டுள்ள பெறுகைக் குழுவின் பரிந்துரைக்கமைய 2023.06.01 தொடக்கம் இரண்டு ஆண்டுகளுக்கு வாடகை அடிப்படையில் பராமரிப்பு மற்றும் துரித பதிலளிப்புக் கப்பலொன்றை பணியில் அமர்த்துவதற்கான ஒப்பந்தம் M/s Srilanka Shipping Company Limited இற்கு வழங்குவதற்காக மின்சக்தி மற்றும் வலுசக்தி அமைச்சர் சமர்ப்பித்த யோசனைக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.

3. வெளிநாடுகளில் தொழில் புரிகின்ற இலங்கையர்களுக்கு இலத்திரனியல் வாகனத்தை இறக்குமதி செய்கின்ற அனுமதிப்பத்திரம் வழங்கும் முன்மொழிவுத் திட்டம்
புலம்பெயர் தொழிலாளர்கள் வெளிநாடுகளில் ஈட்டுகின்ற வருமானம் சட்டபூர்வமான வழிமுறைகள் மூலம் எமது நாட்டுக்குப் பண அனுப்பல்களை ஊக்குவிக்கும் நோக்கில், புலம்பெயர் தொழில்களில் ஈடுபடுகின்ற இலங்கையர்களுக்கு இலத்திரனியல் வாகனங்களை இறக்குமதி செய்வதற்கான அனுமதிப்பத்திரங்களை வழங்கும் உத்தேசத் திட்டத்தை நடைமுறைப்படுத்துவதற்காக, இதற்கு முன்னர் இடம்பெற்ற அமைச்சரவைக் கூட்டத்தில் அங்கீகாரம் வழங்கப்பட்டுள்ளது.

அதற்கமைய, இலத்திரனியல் வாகனத்தை இறக்குமதி செய்வதற்காக புலம்பெயர் தொழிலாளர்கள் 2022.05.01 தொடக்கம் 2022.12.31 வரையான காலப்பகுதியில் அவர்கள் எமது நாட்டுக்கு அனுப்பியுள்ள வெளிநாட்டு செலாவணியின் தொகை அடிப்படையாகக் கொள்ளப்படும்.

ஆனாலும், குறித்த காலப்பகுதியில் அனுப்பப்பட்டுள்ள வெளிநாட்டு செலாவணியின் தொகைக்கமைய, அவர்கள் எதிர்பார்க்கின்ற இலத்திரனியல் வாகனங்களை இறக்குமதி செய்வதற்கான வாய்ப்பு இருக்கவில்லை எனக் கண்டறியப்பட்டுள்ளது.

அதனால், குறித்த உத்தேச திட்டத்தின் கீழ் வாகன இறக்குமதி அனுமதிப்பத்திரத்தைப் பெற்றுக்கொள்வதற்காக எமது நாட்டுக்கு அனுப்பியுள்ள வெளிநாட்டு செலாவணித் தொகையைக் கணிக்கும் காலப்பகுதியை 2023.09.15 ஆம் திகதி வரை நீடிப்பதற்காக தொழிலாளர் மற்றும் வெளிநாட்டு வேலைவாய்ப்பு அமைச்சர் சமர்ப்பித்த யோசனைக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.

4. “தன்னோ புதுன்கே ஸ்ரீ தர்மாஸ்கந்தா” எனும் பாடலை தேசிய மரபுரிமையாக பிரகடனப்படுத்தல்
1903 ஆம் ஆண்டில் முதுபெரும் எழுத்தாளர் ஜோன் டி சில்வா அவர்களால் எழுதப்பட்டு, விஸ்வநாத் லவ்ஜி அவர்களால் இசையமைக்கப்பட்டு, சிறிசங்கபோ பாடல் தொகுப்பில் உள்ளடக்கப்பட்டு தற்போது 120 ஆண்டுகள் பழமை வாய்ந்த “தன்னோ புதுன்கே ஸ்ரீ தர்மாஸ்கந்தா” எனும் பாடலை தேசிய மரபுரிமைப் பாடலாக பெயரிடுவது பொருத்தமானதெனக் கண்டறியப்பட்டுள்ளது.

எமது நாட்டின் தேசிய கீதம் பயன்பாட்டுக்கு வரும் வரைக்கும் வைபவங்களிலும் ஏனைய சந்தர்ப்பங்களிலும் இப்பாடல் தேசிய கீதத்திற்கு சமமாகப் பயன்படுத்திய சான்றுகள் காணப்படுகின்றன.

இப்பாடல்   நூறு ஆண்டுகளுக்கும் மேலாக தேசத்தின் இரசனையிலும் சிந்தனையிலும் தொடர்ச்சியாக பங்காற்றியமையைக் கருத்தில் கொண்டு, “தன்னோ புதுன்கே ஸ்ரீ தர்மாஸ்கந்தா” எனும் பாடலை தேசிய மரபுரிமையாகப் பிரகடனப்படுத்துவதற்காக பொது நிருவாக, உள்நாட்டலுவல்கள், மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி அமைச்சராக பிரதமர் சமர்ப்பித்த யோசனைக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.

5. அரச தொழில் முயற்சி மீள்கட்டமைப்புக் கொள்கை
அரச தொழில் முயற்சிகளை மீள்கட்டமைப்பு  பற்றித் தேவையான வழிகாட்டல்களையும் ஒத்துழைப்புக்களையும் வழங்குவதற்காக நிதி, பொருளாதார உறுதிப்பாடு மற்றும் தேசிய கொள்கைகள் அமைச்சின் கீழ் அரச தொழில் முயற்சி மீள்கட்டமைப்பு அலகை நிறுவுவதற்காக 2022.09.05 அன்று இடம்பெற்ற அமைச்சரவைக் கூட்டத்தில் அங்கீகாரம் வழங்கப்பட்டுள்ளது.

அதற்கமைய, அரச தொழில் முயற்சிகளால் விநியோகிக்கப்படும் பண்டங்கள் மற்றும் சேவைகளின் தரப்பண்பு, விலை மற்றும் அணுகலை அதிகரித்தல், குறித்த தொழில் முயற்சிகளால் திறைசேரிக்குக் கொடுக்கப்படும் நிதி அழுத்தத்தைக் நீக்குதல் மற்றும் தனிப்பட்ட முதலீடுகளைக் கவர்ந்திழுப்பதற்காக போட்டித்தன்மையான மற்றும் சந்தையை அடிப்படையாகக் கொண்ட வியாபாரச் சூழலை உருவாக்கும் நோக்கில் அரச தொழில் முயற்சி மீள்கட்டமைப்புக் கொள்கை தயாரிக்கப்பட்டுள்ளது.

குறித்த கொள்கையின் அடிப்படையில் அரச தொழில் முயற்சிகளின் மீள்கட்டமைப்புப் பற்றித் தொடர் நடவடிக்கைகளை மேற்கொள்வதற்காக நிதி, பொருளாதார உறுதிப்பாடு மற்றும் தேசிய கொள்கைகள் அமைச்சராக ஜனாதிபதி சமர்ப்பித்த யோசனைக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.

6. கைத்தொழில் கண்காட்சி வாரத்தை பிரகடனப்படுத்தல்
2030 ஆம் ஆண்டாகும் போது, தற்போது 28% சதவீதமாகவுள்ள மொத்தத் தேசிய உற்பத்தியை 30% வீதமாகவும், தற்போது மொத்த தேசிய உற்பத்திக்கு 15% சதவீதமான உற்பத்திக் கைத்தொழில் பங்களிப்பை 25% சதவீதமாகவும் அதிகரிப்பதற்குத் தேவையான திட்டங்கள் தயாரிக்கப்பட்டுள்ளன.

அத்துடன், தற்போது 2.8% சமவீதமான தொழில்முயற்சியாளர்களின் பங்களிப்பை 10% சதவீதமாகவும், மொத்தத் தேசிய உற்பத்திக்கு நுண், சிறிய மற்றும் நடுத்தர அளவிலான கைத்தொழில்களின் பங்களிப்பு 52% சதவீதத்திலிருந்து 70% வீதம் வரைக்கும் 2030 ஆம் ஆண்டாகும் போது அதிகரிப்பதற்கு எதிர்பார்க்கப்படுகின்றது.

குறித்த இலக்கை அடைவதற்காக 06 கைத்தொழில் துறைகள் அடையாளங் காணப்பட்டுள்ளதுடன், குறித்த துறைகளுக்குத் தேவையான உட்கட்டமைப்பு வசதிகளைப் போலவே ஏனைய வசதிகளை வழங்குவதற்காக கூட்டு அணுகுமுறையை உறுதிப்படுத்துவதற்கு கைத்தொழில் அமைச்சு நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளது.

அதற்கமைய, கைத்தொழில் அமைச்சர் சமர்ப்பித்துள்ள யோசனையைக் கருத்தில் கொண்டு, உள்;ர் கைத்தொழில்களைக் கட்டியெழுப்புவதற்கும் ஊக்குவிப்பதற்கும், வெளிநாட்டு முதலீட்டாளர்கள் மற்றும் தொழிற்துறையினரைக் கவர்ந்திழுக்கும் நோக்கில் வருடாந்த கைத்தொழில் கண்காட்சியை ஒருவார காலத்திற்கு நடாத்துவதற்காகவும், அதன் ஆரம்பப் படிமுறையாக குறித்த கண்காட்சியை இவ்வாண்டில் யூன் மாதம் 22 ஆம் திகதி தொடக்கம் 25 ஆம் திகதி வரை நடாத்துவதற்காக அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.

7. சீனா மக்கள் குடியரசின் (Republic of China) யூனான் மாகாண மக்கள் குடியரசின் வெளிவிவகாரங்கள் அலுவலகத்திற்கும், இலங்கை வெளிநாட்டு வளங்கள் திணைக்களத்திற்கும் இடையிலான புரிந்துணர்வு ஒப்பந்தம்
2022 மே மாதம் 16 ஆம் திகதி தொடக்கம் 20 ஆம் திகதி வரை சீனக் குடியரசின் யூனான் மாகாண ஆளுநர் வன்(ங்) யூகோ அவர்களின் இலங்கைக்கான விஜயத்தின் போது, சீனக் குடியரசின் யூனான் மாகாணக் குடியரசின் வெளிவிவகாரங்கள் அலுவலகத்திற்கும், இலங்கை வெளிநாட்டு வளங்கள் திணைக்களத்திற்கும் இடையிலான புரிந்துணர்வு ஒப்பந்தமொன்றில் கையொப்பமிடுவதற்கு முன்மொழியப்பட்டுள்ளது.

குறித்த புரிந்துணர்வு ஒப்பந்தத்தின் மூலம் பரஸ்பர சுற்றுலா, பொருளாதாரம், சந்தை மற்றும் வர்த்தகம், கல்வி, சுற்றுலாத்துறை, விவசாயம், மனிதக் கலாச்சாரப் பரிமாற்றங்கள், மக்களுடைய வாழ்க்கைத்தரம் மற்றும் சுகாதாரம் போன்ற துறைகளுக்காக இலங்கைக்கு ஒத்துழைப்பு வழங்குவதற்கு எதிர்பார்க்கப்படுகின்றது.

அதற்கமைய, குறித்த புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் கையொப்பமிடுவதற்காக நிதி, பொருளாதார உறுதிப்பாடு மற்றும் தேசிய கொள்கைகள் அமைச்சராக ஜனாதிபதி சமர்ப்பித்த யோசனைக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது. 


Add new comment

Or log in with...