26 வயது பெண்ணை சுட்டுக் கொன்ற சந்தேகநபர் தற்கொலை

(படங்கள்: வவுனியா விசேட நிருபர்)

- சந்தேகநபர் திருமணமான பெண்ணின் 24 வயதான முன்னாள் காதலன்
- வவுனியா, நீலியாமோட்டை பகுதியில் சம்பவம்

இன்று (13) காலை, வவுனியா, பறயனாலங்குளம் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட நீலியாமோட்டை பகுதியில் பெண் ஒருவர் வீடொன்றில் துப்பாக்கிச் சூட்டின் மூலம் கொல்லப்பட்டுள்ளதுடன் சந்தேகநபரும் தற்கொலை செய்து கொண்டுள்ளார்.

இது தொடர்பில் பறயனாலங்குளம் பொலிஸ் நிலையத்திற்கு 119 தகவல் நிலையத்திடமிருந்து கிடைத்த தகவலுக்கமைய பொலிஸார் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.

உயிரிழந்தவர் பூவரசங்குளம், நீலியாமோட்டையை வசிப்பிடமாகக் கொண்ட 26 வயதுடைய திருமாண நியூட்டன் தர்சினி எனும் பெண் என்பதுடன், தற்கொலை செய்து கொண்ட சந்தேகநபர் 24 வயதுடைய சிவபாலன் சுஜாந்தன் எனும் நீலியாமோட்டையை வசிப்பிடமாக கொண்டவர் என அடையாளம் காணப்பட்டுள்ளதாக, பொலிஸ் ஊடகப் பேச்சாளர் அலுவலகம் தெரிவித்துள்ளது.

மரணமடைந்தவவர், நீலியாமோட்டையில் கணவன் மற்றும் ஒன்றரை வயது குழந்தையுடன் வசிக்கும் பெண் என்பதோடு, இறப்பதற்கு முன்னர் சந்தேகநபருடன் இருந்த காதல் தொடர்பில் ஏற்பட்ட காதல் உறவின் அடிப்படையில் ஏற்பட்ட தகராறு காரணமாக சந்தேகநபர், பெண்ணின் வீட்டில் வைத்து அவரை சுட்டுக் கொன்றுள்ளார்.

இதனைத் தொடர்ந்து, இன்று காலை குறித்த வீட்டில் இருந்து சிறிது தூரத்தில் உள்ள நீலியாமோட்டை கோவிலுக்கு முன்பாக அவர் தன்னைத் தானே சுட்டுக்கொண்டு தற்கொலை செய்து கொண்டுள்ளதாக விசாரணைகளில் தெரிய வந்துள்ளதாக பொலிசார் தெரிவித்தனர்.

குறித்த சடலத்திற்கு அருகில் துப்பாக்கி ஒன்றும் மீட்கப்பட்டுள்ளது.

சடலங்கள் தொடர்பிலான நீதவான் விசாரணைகளை மேற்கொண்டதன் பின்னர், சடலங்களை பிரேத பரிசோதனைக்காக வவுனியா வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்படவுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

பறயனாலங்குளம் பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.


Add new comment

Or log in with...