- 24 வயதுடைய மாத்தளை பிரதேசத்தைச் சேர்ந்தவர்
குருணாகல் வைத்தியசாலையில் வைத்தியர்கள் இருவரை தாக்கிய சம்பவத்துடன் தொடர்புடைய சந்தேகநபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
கடந்த திங்கட்கிழமை (08) குருணாகல் வைத்தியசாலையின் குழந்தைகள் மற்றும் மகப்பேறு பிரிவில் 72ஆம் இலக்க வார்டில் கடமையாற்றிய ஆண் வைத்தியர் ஒருவரையும் பெண் வைத்தியர் ஒருவரையும் தாக்கியமை தொடர்பில் குருணாகல் பொலிஸார் விசாரணைகளை ஆரம்பித்திருந்தனர்.
இதன்படி, இச்சம்பவத்துடன் தொடர்புடைய சந்தேகநபர் ஒருவரை நேற்று (11) பிற்பகல் தம்புள்ளை பிரதேசத்தில் காரில் பயணித்துக் கொண்டிருந்த போது, குருணாகல் பொலிஸ் நிலைய அதிகாரிகள் குழுவொன்று காருடன் கைது செய்துள்ளது.
கைது செய்யப்பட்ட சந்தேகநபர் 24 வயதுடைய மாத்தளை பிரதேசத்தை சேர்ந்தவர் என அடையாளம் காணப்பட்டுள்ளார்.
சந்தேகநபரை இன்றையதினம் (12) குருணாகல் நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
குறித்த தாக்குதலுக்கு எதிர்ப்பு தெரிவித்து நேற்று (11) அவ்வைத்தியசாலையின் வைத்தியர்கள் பணிப்புறக்கணிப்பில் ஈடுபட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.
குருணாகல் பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
Add new comment