16 மாணவிகள் துஷ்பிரயோகம்; களுத்துறை தனியார் வகுப்பு ஆசிரியர் கைது

- ஆசிரியரின் மனைவியும் பொலிஸில் முறைப்பாடு
- ஒன்லைன் மூலம் சிறுமிகளை நிர்வாணமாக்கியதாக குற்றச்சாட்டு
- துஷ்பிரயோக வீடியோக்களும் மீட்பு

16 மாணவிகளை துஷ்பிரயோகம் செய்த குற்றச்சாட்டில் களுத்துறையைச் சேர்ந்த தனியார் வகுப்பு ஆசிரியர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

சந்தேகநபர் 30 வயதுடைய திருமணமான கணித பாட ஆசிரியர் ஒருவர் என அடையாளம் காணப்பட்டுள்ளார்.

அவருக்கு எதிராக இது தொடர்பில் அவரது மனைவியும் பொலிஸில் முறைப்பாடு செய்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

களுத்துறை ஹோட்டல் ஒன்றில் 16 வயது மாணவி மரணித்த சம்பவம் நடந்து பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ள நிலையில், களுத்துறையில் மற்றுமொரு இவ்வாறான சம்பவம் இடம்பெற்றுள்ளமை குறிப்பிடத்தக்கது.

ஆசிரியரான குறித்த சந்தேகநபர் ஒன்லைன் மூலமும் மாணவிகளுக்கு கற்பிக்கும் வேளையில், ஆடைகளை களைந்து நிர்வாணமாக்கியுள்ளதாக, விசாரணைகளில் தெரிய வந்துள்ளதாக, பொலிஸ் ஊடகப் பேச்சாளர் சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் நிஹால் தல்தூவ தெரிவித்தார்.

குறித்த ஆசிரியர் சிறுமிகளை வீட்டுக்கு அழைத்துச் செல்லும் போர்வையில் காட்டுப் பகுதிகளில் வைத்து தனது காருக்குள் துஷ்பிரயோக நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளதாகவும் தெரிய வந்துள்ளது.

இவை தொடர்பான சிறுமிகளை பாலியல் துஷ்பிரயோகம் செய்யும் போது எடுக்கப்பட்ட 16 வீடியோ பதிவுகளும் உள்ளதாகவும் அவை தொடர்பில் ஆராய்ந்து பாதிக்கப்பட்ட சிறுமிகளை கண்டறியவும், இது தொடர்பில் பாரபட்சமற்ற வகையில் சிறுமிகளை அவதானித்து மேலதிக விசாரணைகள் மேற்கொள்ளப்படும் என களுத்துறை சிறுவர் மற்றும் மகளிர் துஷ்பிரயோக தடுப்பு பணியகம் தெரிவித்துள்ளது. 

துஷ்பிரயோகத்திற்கு உள்ளானவர்களில் களுத்துறை பிரதேச பொலிஸ் நிலைய அதிகாரி ஒருவரின் மகளும் உள்ளடங்குவதாக தெரிவிக்கப்படுகின்றது.

சந்தேகத்திற்குரிய ஆசிரியர் வேறு இடங்களில் சிறிய குழுக்களாக வகுப்புகளை நடத்தியுள்ளதோடு, அங்கும் சிறுமிகள் துஷ்பிரயோகம் செய்யப்பட்டார்களா இல்லையா என்பதைத் கண்டறிய மேலதிக விசாரணைகள் நடைபெற்று வருகின்றன.

சிறுவர் துஷ்பிரயோகம் தொடர்பான முறைப்பாடுகளுக்கு 1929 என்ற தொலைபேசி இலக்கத்தை அழைக்குமாறு சிறுவர் பாதுகாப்பு அதிகார சபை பொதுமக்களிடம் கோரிக்கை விடுத்துள்ளது.


Add new comment

Or log in with...