கடுவலை முன்னாள் பிரதி மேயர் சந்திக அபேரத்ன சமூக ஊடக செயற்பாட்டாளர் பியத் நிகேசல கைது

- இன்று நீதிமன்றில் முன்னிலைப்படுத்த நடவடிக்கை
- இறுதியாக பியத் நிகேசல வெளியிட்ட யூடியுப் ஏளன வீடியோ
- தாக்குதல் இடம்பெற்ற போது எடுக்கப்பட்ட வீடியோ

சமூக ஊடக செயற்பாட்டாளர் பியத் நிகேசலவை தாக்கிய குற்றச்சாட்டில் கடுவலை மாநகர சபை முன்னாள் பிரதி மேயர் சந்திக அபேரத்ன கைது செய்யப்பட்டுள்ளார்.

முல்லேரியா வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் நேற்றிரவு (10) அவர் கைது செய்யப்பட்டதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

காரில் பயணித்த சமூக ஆர்வலர் பியத் நிகேஷல தாக்கப்பட்ட சம்பவத்தை அவர் தனது கையடக்கத் தொலைபேசியில் பதிவிட்ட வீடியே சமூக ஊடகங்களில வைரலாக பரவி வருகின்றது.

 

 

பியத் நிகேஷல கோட்டகோகம போராட்டத்தின் ('அரகலய') போது முக்கிய பங்கு வகித்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

தலங்கம, கொஸ்வத்த சமகி மாவத்தை பிரதேசத்தில் கடுவலை மாநகர சபையின் முன்னாள் பிரதி மேயர் மற்றும் மேலும் இரண்டு கார்களில் வந்த சிலர் அவர் மீதும் அவரது கார் மீதும் இந்த தாக்குதலை மேற்கொண்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

இதேவேளை, குறித்த சம்பவத்தில் பியத் நிகேஷல தன்னை பின்தொடர்ந்து விபத்தை ஏற்படுத்த முயற்சித்ததாக, கடுவலை மாநகர சபையின் முன்னாள் பிரதி மேயர் சந்திக அபேரத்ன செய்த முறைப்பாட்டின் அடிப்படையில் சமூக ஊடக செயற்பாட்டாளர் பியத் நிகேசலவும் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

தலங்கம வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் பியத் நிகேஷல கைது செய்யப்பட்டுள்ளார். அவர் மேலதிக சிகிச்சைக்காக கொழும்பு தேசிய வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

கைது செய்யப்பட்ட கடுவலை மாநகர சபையின் முன்னாள் பிரதி மேயர் சந்திக அபேரத்ன மற்றும் சமூக ஊடக செயற்பாட்டாளர் பியத் நிகேஷல ஆகியோர் தற்போது பொலிஸ் பாதுகாப்பில் வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருவதோடு, குறித்த இருவரையும் இன்றையதினம் (11) நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்படவுள்ளதாக  பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

கடந்த வருடம் மே 09 ஆம் திகதி இடம்பெற்ற சம்பவத்தில் ஶ்ரீ லங்கா பொதுஜன பெரமுன முக்கியஸ்தர் மஹிந்த கஹந்தகம தாக்கப்பட்ட சம்பவத்தை முன்னிறுத்தி, அவருக்கு அழைப்பை ஏற்படுத்தி ஏளனம் செய்யும் வீடியோ ஒன்றை பியத் நிகேஷல நேற்று (10) தனது யூடியுப் அலைவரிசையில் ஒன்றை பதிவிட்டிருந்தார்.

இதனைத் தொடர்ந்து நேற்றையதினம் காரில் பயணித்துக் கொண்டிருந்த அவர் மீது இத்தாக்குதல் மேற்கொள்ளப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.


Add new comment

Or log in with...