7 கி.கி. தங்கத்தை உடலில் மறைத்து சட்டவிரோதமாக கடத்தி வந்தவர் கைது

- சுமார் 5 கிலோ தங்க பிஸ்கட்டுகள்; 2 கிலோ தங்க நகைகள் மீட்பு

சட்டவிரோதமான முறையில் சுமார் 7 கி.கி. (6 கிலோ 996 கிராம்) தங்கத்தை நாட்டுக்குள் கடத்தி வந்த 43 வயதுடைய இலங்கை பிரஜை ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

ஐக்கிய அரபு இராச்சியத்தின் துபாய் நகரிலிருந்து கட்டுநாயக்க பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்தை (BIA) வந்தடைந்த சந்தேகநபரே கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் அலுவலகம் தெரிவித்துள்ளது.

நேற்று (07) காலை கட்டுநாயக்க விமான நிலையத்தின் வருகைதரும் முனையத்தில் வைத்து, போதைப்பொருள் தடுப்புப் பிரிவின் அதிகாரிகள் மேற்கொண்ட சுற்றிவளைப்பை அடுத்து சந்தேகநபர் இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார்.

சட்டவிரோதமான முறையில் கடத்தப்பட்ட தங்கத்தை சந்தேகநபர் தனது இடுப்புப் பகுதியில் சூட்சுமமாக மறைத்து வைத்திருந்த நிலையில் இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

சந்தேகநபரிடமிருந்து 4 கிலோ 942 கிராம் எடையுள்ள தங்க பிஸ்கட்டுகளும் 2 கிலோ 54 கிராம் எடையுள்ள தங்க நகைகளும் மீட்கப்பட்டுள்ளன.

சந்தேகநபர் கொழும்பு 10, ஸ்ரீ சங்கராஜ மாவத்தை பிரதேசத்தைச் சேர்ந்தவர் என அடையாளம் காணப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

இது தொடர்பான மேலதிக விசாரணைகளுக்காக அவர் விமான நிலையத்தில் உள்ள சுங்க அதிகாரிகளிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளார்.


Add new comment

Or log in with...