சார்ள்ஸ் மன்னரின் முடிசூட்டு விழாவில் கலந்து கொண்ட சாரணர்கள் ஜனாதிபதியை சந்திப்பு

ஐக்கிய இராச்சிய சாரணர் இயக்கத்தினால் ஏற்பாடு செய்யப்பட்ட முடிசூட்டு விழா முகாமில் இலங்கையை பிரதிநிதித்துவப்படுத்தி பங்கேற்ற இலங்கை சாரணர் இயக்கத்தின் சிரேஷ்ட சாரணர்கள் மற்றும் பெண் சாரணர்களுக்கும் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவிற்கும் இடையிலான சந்திப்பு நேற்று (07) லண்டனில் இடம்பெற்றது.

முடிசூட்டு விழாவிற்கு இலங்கை சாரணர் இயக்கத்தைப் பிரதிநிதித்துவப்படுத்தி ஷலினி பெரேரா, அரிதா பண்டார, அசேல பண்டார, சரித் பெனாண்டோ ஆகிய சாரணர்கள் கலந்துகொண்டனர்.

அவர்களுடன் சிநேகபூர்வ உரையாடலில் ஈடுபட்ட ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க, உலகளாவிய காலநிலை மாற்றம் உள்ளிட்ட தேசிய மற்றும் சர்வதேச நலன்களில் தீவிரமாக ஈடுபடுமாறு சாரணர்களை ஊக்குவித்தார்.

நாட்டின் எதிர்கால தலைமைத்துவத்தை பொறுப்பேற்க இளைஞர்கள் எவ்வாறு தயாராக இருக்க வேண்டும் என்றும் ஜனாதிபதி இங்கு மேலும் சுட்டிக்காட்டினார்.

இலங்கை சாரணர் இயக்கத்தின் பிரதம ஆணையாளர் சட்டத்தரணி ஜனபிரித் பெனாண்டோவின் வேண்டுகோளுக்கு இணங்க இந்த சந்திப்பு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

மூன்றாம் சார்ள்ஸ் மன்னரின் முடிசூட்டு விழாவில் கலந்துகொள்வதற்காக பிரித்தானியாவிற்கு சென்ற ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க இன்று (08) அதிகாலை நாடு திரும்பினார் என்பது குறிப்பிடத்தக்கது.


Add new comment

Or log in with...