கோதுமை ரூ. 3 சுங்க வரிச் சலுகை நீக்கம்

- மாவின் விலை அதிகரிக்காது என சியம்பலாபிட்டிய தெரிவிப்பு
- கோதுமை ரூ. 10 இனாலும், சீனி ரூ. 25 இனாலும் அதிகரிப்பதாக இறக்குமதியாளர்கள் தெரிவிப்பு

கோதுமை மாவிற்கு விதிக்கப்பட்ட ரூ. 3 சுங்க வரிச் சலுகை நீக்கப்பட்டுள்ளதாகவும், இதனால் கோதுமை மாவின் விலையில் எவ்வித மாற்றமும் ஏற்படாது எனவும் நிதி இராஜாங்க அமைச்சர் ரஞ்சித் சியம்பலாபிட்டிய தெரிவித்துள்ளார்.

அவிசாவளை பிரதேசத்தில் நேற்று (07) மாலை இடம்பெற்ற நிகழ்வொன்றின் பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இதனைத் தெரிவித்தார்.

அரிசிக்கான பிரதான மாற்றான கோதுமை மாவுக்கு கிலோ ஒன்றுக்கு ரூ. 3 எனும் சுங்க வரியை மீண்டும் அமுல்படுத்துவதன் மூலம் 90% ஆன வாழ்வாதாரத்தைக் கொண்ட நெல் விவசாயிகளை பாதுகாக்க கோதுமை மாவின் விலையை நிர்வகிக்க முடியும் என அமைச்சர் மேலும் தெரிவித்தார்.

இதேவேளை, கோதுமை மாவின் விலை ரூ. 10 இனாலும் சீனியின் விலை ரூ. 25 இனாலும் அதிகரிக்கப்படுவதாக, அத்தியாவசிய உணவு இறக்குமதியாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.

கோதுமை மாவிற்கு வழங்கப்பட்டு வந்த வரிச் சலுகை நீக்கப்பட்டமை மற்றும் வேறு சில செலவுகள் அதிகரிப்பு காரணமாக கோதுமை மாவ ஒரு கிலோவின் விலையை ரூ. 10 இனால் அதிகரித்துள்ளதாக சங்கம் தெரிவித்துள்ளது.

இதைவேளை, வரிச் சலுகையின் கீழ் இந்தியாவில் இருந்து சீனி இறக்குமதி செய்வதற்கான காலம் நிவைவடைந்துள்ள நிலையில், ஏனைய நாடுகளில் இருந்து சீனி இறக்குமதி செய்யப்படுவதாகவும், இதனால் சீனி ஒரு கிலோவின் விலை ரூ. 25 இனால் அதிகரிக்கப்படுவதாக, அத்தியாவசிய உணவு இறக்குமதியாளர்கள் சங்கத்தின் பேச்சாளர் நிஹால் செனவிரத்ன தெரிவித்துள்ளார்.


Add new comment

Or log in with...