WHO அமுல்படுத்திய உலக கொவிட்-19 அவசர நிலை முடிவுக்கு வந்தது

- இது குறித்து கவலைப்பட வேண்டியதில்லை என்பதே அறிவிப்பு
- கொவிட்-19 அச்சுறுத்தல் முடியவில்லை; எச்சரிக்கை அவசியம்
- உலக சுகாதார ஸ்தாபன பணிப்பாளர் நாயகம் தெரிவிப்பு

கொவிட்-19 (கொரோனா வைரஸ்) தொற்று பரவல் காரணமாக, உலக சுகாதார ஸ்தாபனம் (WHO) அமுல்படுத்தியிருந்த உலகளாவிய அவசர நிலை முடிவுக்கு கொண்டு வரப்பட்டுள்ளதாக, உலக சுகாதார ஸ்தாபன பணிப்பாளர் நாயகம் டெட்ரோஸ் அதோனம் அறிவித்துள்ளார்.

நேற்று முன்தினம் (04), COVID19 அவசரநிலைக் குழு 15ஆவது முறையாகக் கூடி, சர்வதேச நலல் தொடர்பான பொதுச் சுகாதார அவசரநிலைக்கு முற்றுப்புள்ளி வைக்குமாறு தனக்கு பரிந்துரை முன்வைத்தாகவும், அந்த ஆலோசனையை தான் ஏற்றுக்கொண்டுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

 

 

அத்துடன் மிகுந்த நம்பிக்கையுடன் கொவிட்-19 தொற்றை உலகளாவிய சுகாதார அவசரநிலை முடிவுக்கு வருவதாக அறிவிப்பதாக உலக சுகாதார ஸ்தாபன பணிப்பாளர் நாயகம் டெட்ரோஸ் அதோனம் அறிவித்துள்ளார்.

ஆயினும் கொவிட்-19 அச்சுறுத்தல் முடிந்துவிட்டதாகக் கருதக் கூடாது எனவும், கொவிட்-19 தொற்றினால் ஒவ்வொரு 3 நிமிடங்களுக்கும் ஒருவர் என்ற எண்ணிக்கையில் உயிரிழப்பு ஏற்பட்டது. எனவே தற்போது வெளியிடப்பட்டிருப்பது, இனியும் மக்கள் இது குறித்து கவலைப்பட வேண்டியதில்லை எனும் அறிவிப்பே எனவும், கொவிட்-19 தொடர்பில் நாடுகள் தொடர்ந்தும் எச்சரிக்கையாக இருக்க வேண்டுமென அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.

 

 

சீனாவில் கடந்த 2019 ஆம் ஆண்டு இறுதியில் கொரோனா வைரஸ் தொற்று கண்டறியப்பட்டது. அதனைத் தொடர்ந்து இந்த வைரஸ் உலகம் முழுவதும் பரவியது.

அது தொடர்பான நோயை கொவிட்-19 என உலக சுகாதார ஸ்தாபனம் அறிவித்தது.

கொவிட்-19 தொற்றைற கட்டுப்படுத்த மிகக் கடுமையான பொதுமுடக்க கட்டுப்பாடுகளை சீனா முதலில் விதித்தது. இதைப் பின்பற்றி ஏனைய நாடுகளும் பொது முடக்க கட்டுப்பாடுகளை கொண்டு வந்தன.

கொவிட்-19 தொற்று கடுமையான பாதிப்பை ஏற்படுத்தியதைத் தொடர்ந்து, கடந்த 2020 ஜனவரி 30 ஆம் திகதி, கொவிட்-19 தொற்று சர்வதேச அவசர நிலையாக  உலக சுகாதார ஸ்தாபனத்தினால் அறிவிக்கப்பட்டது.

கொவிட்-19 தொற்று பல அலைகளாக பரவி, உலகம் முழுவதும் பல கோடிக்கணக்கானவர்களுக்கு தொற்றியதோடு, பல இலட்சம் உயிரிழப்புகளையும் ஏற்படுத்தியது.

இந்நிலையில் கொவிட்-19 தொற்று நோயை கட்டுப்படுத்த பல்வேறு தடுப்பூசிகள் கண்டறியப்பட்டு, பல்வேறு டோஸ்களாக அது விநியோகிக்கப்பட்டது.

தற்போது கொரோனா தொற்றின் தாக்கம் பெருமளவு குறைந்து விட்ட நிலையில், கொவிட்-19 தொற்று அவசர நிலை முடிவுக்கு வந்துள்ளதாக உலக சுகாதார ஸ்தாபனம் தற்போது அறிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது. 


Add new comment

Or log in with...