வசந்த கரன்னாகொட மற்றும் அவரது குடும்பத்தினருக்கு அமெரிக்கா நுழைய தடை

- இது தொடர்பில் வெளி விவகார அமைச்சு கவலை
- நல்லிணக்கத்தை ஏற்படுத்தும் இவ்வேளையில் இம்முடிவு துரதிஷ்டவசமானது
- நல்லிணக்கம், பொருளாதார மேம்பாட்டை மேற்கொள்வது தொடர்ந்தும் இடம்பெறும்

கடற்படைத் தளபதியாக இருந்த காலத்தில் இடம்பெற்ற மனித உரிமை மீறல் குற்றச்சாட்டின் பேரில், அட்மிரல் ஒப் தி ப்லீட் வசந்த கரன்னாகொட மற்றும் அவரது குடும்பத்தினர் அமெரிக்காவிற்குள் நுழைய தடை விதிப்பதாக, அமெரிக்க இராஜாங்கத் திணைக்களம் அறிவித்துள்ளது.

வடமேல் மாகாணத்தின் தற்போதைய ஆளுநரான அட்மிரல் ஒப் தி ப்லீட் வசந்த கரன்னாகொட தொடர்பில் நேற்றையதினம் (26) அமெரிக்கா எடுத்த தீர்மானத்திற்கு இலங்கை வருந்துவதாக, வெளி விவகார அமைச்சு தெரிவித்துள்ளது.

இது தொடர்பில் இன்றையதினம் (27) இலங்கையிலுள்ள அமெரிக்க தூதுவர் ஜூலி சங்கிடம் இலங்கை கவலைகளை வெளி விவகார அமைச்சர் அலி சப்ரி வெளியிட்டுள்ளதாக அமைச்சு குறிப்பிட்டுள்ளது.

இது தொடர்பில் வெளி விவகார அமைச்சு வெளியிட்டுள்ள அறிவித்தலில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,

இலங்கையின் நீண்டகால இருதரப்பு பங்காளி என்ற வகையில், உரிய நடைமுறைகளை பின்பற்றாமல் அமெரிக்காவின் இத்தகைய ஒருதலைப்பட்சமான நடவடிக்கையானது, தேசிய ஒற்றுமை மற்றும் நல்லிணக்கத்தை நிவர்த்தி செய்வதில் இலங்கை எடுத்துள்ள முழுமையான அணுகுமுறைக்கு எதிரானதாகும்.

நாட்டின் ஜனநாயக ஆட்சி மற்றும் நல்லிணக்கக் கட்டமைப்புகளை வலுப்படுத்துவதில் அரசாங்கம் மேற்கொண்டுள்ள உறுதியான முன்னேற்றத்தின் பின்னணியில் இந்த அறிவிப்பு வெளிவருவது துரதிஷ்டவசமானது.

ஆயினும் இவ்வாறான சவால்களுக்கு மத்தியிலும், நல்லிணக்கம், பொருளாதார மீட்சி மற்றும் சமூக-பொருளாதார மேம்பாட்டை அடைவதற்கான அதன் தொடர்ச்சியான முயற்சிகளில் இலங்கை தொடரும் என வெளிவிவகார அமைச்சு சுட்டிக்காட்டியுள்ளது.


Add new comment

Or log in with...