நுவரெலியா சீதையம்மன் ஆலய சிறப்பை குறிக்கும் விசேட தபாலுறை வெளியீடு

நுவரெலியா சீதையம்மன் ஆலயத்துக்கான விசேட ஞாபகார்த்த தபாலுறை ஒன்று பிரதமர் தினேஷ் குணவர்தன மற்றும் இந்திய உயர் ஸ்தானிகர் கோபால் பாக்லே ஆகியோரால் அறிமுகம் செய்துவைக்கப்பட்டுள்ளது.

கடந்த ஞாயிற்றுக்கிழமை (23) நடைபெற்ற இவ்விசேட நிகழ்வில் வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த இந்த ஆலயத்தில் தியான நிலையம் ஒன்றிற்கான அடிக்கல்லையும் அவர்கள் நட்டமை குறிப்பிடத்தக்கது.

இந்நிகழ்வில் உரை நிகழ்த்தியிருந்த பிரதமர் தினேஷ் குணவர்தன,

இலங்கையில் முன்னொருபோதுமில்லாதவகையில் ஏற்பட்டிருந்த பொருளாதார நெருக்கடி நிலையின்போது இந்தியா இலங்கையுடன் துணைநின்றமையை நினைவூட்டியிருந்த அதேவேளை, இந்த தியான நிலையம் மனித மற்றும் சுற்றுலாத்துறை சார்ந்த அபிவிருத்திக்கும் பங்களிப்பு வழங்குமெனவும் குறிப்பிட்டிருந்தார்.

அத்துடன் இந்த நிகழ்வுகளில் பங்கேற்பதற்காக இந்தியாவிலிருந்து பெரும் எண்ணிக்கையிலான பக்தர்கள் குழாம் இங்கு பிரசன்னமாகியுள்ளமையை இச்சந்தர்ப்பத்தில் மெச்சிய உயர் ஸ்தானிகர், பல்லாயிரம் ஆண்டுகளாக இந்தியா மற்றும் இலங்கை இடையில் பகிரப்பட்டு வரும் நாகரீக அடிப்படையிலான மரபுகள் மற்றும் பெறுமானங்களுக்கான தூதுவர்களாக இந்த பக்தர்கள் திகழ்வதாகவும் சுட்டிக்காட்டியிருந்தார். 

யாழ்ப்பாணத்துக்கும் சென்னைக்கும் இடையிலான விமான சேவைகளை மீள ஆரம்பித்தமை மற்றும் கப்பல் சேவைகளை மீள ஆரம்பிப்பதற்கான அறிவித்தல் போன்றவற்றின் ஊடாக இலங்கைக்கும் இந்தியாவுக்கும் இடையிலான தொடர்புகளை மேம்படுத்துவதற்காக இலங்கை அரசாங்கத்தால் முன்னெடுக்கப்பட்டுவரும் முயற்சிகளுக்காக உயர் ஸ்தானிகர் பிரதமருக்கு தனது நன்றியினையும் தெரிவித்திருந்தார்,   மேலும் இலங்கைக்கு அதிகளவான சுற்றுலாப்பயணிகளை ஈர்ப்பதற்கான நடவடிக்கைகளில் இராமயண யாத்திரையின் சிறப்பு குறித்தும்,  மிகவும் நெருக்கமான உறவைக்கொண்டிருக்கும் இரு அயல் நாடுகளினதும் மக்களிடையிலான தொடர்புகளை மேலும் வலுவாக்குதலின் முக்கியத்துவம் குறித்தும் அவர் குறிப்பிட்டிருந்தார். 

இராமாயணத்தில் கூறப்படும் அஷோக வனத்தின் முக்கியத்துவத்தினை இந்த ஆலயம் பிரதிபலிப்பதாக நம்பப்படுவதுடன் குறிப்பாக இந்தியாவைச் சேர்ந்த பக்தர்கள் பெருமளவில் இந்த ஆலயத்துக்கு வருகை தருகின்றமையும் இரு நாட்டு மக்களிடையிலும் காணப்படுகின்ற மிகவும் பழைமைவாய்ந்ததும் பரந்ததுமான உறவின் மற்றொரு எடுத்துக்காட்டாகும்.


Add new comment

Or log in with...