ஏப்ரல் 20 முதல் சமய நிகழ்வுகள் தவிர்ந்த காலி முகத்திடலில் அனைத்து நிகழ்வுகளுக்கும் தடை

- பொதுமக்கள் சுதந்திரமாக பொழுதைக் கழிக்க பயன்படுத்தப்படும்
- ஜனாதிபதியின் 8 யோசனைக்கு அமைச்சரவை அனுமதி
- இவ்வார அமைச்சரவைக் கூட்டத்தில் 13 முடிவுகள்

எதிர்வரும் ஏப்ரல் 20 ஆம் திகதி தொடக்கம் நடைமுறைக்கு வரும் வகையில் சமய நிகழ்வுகள் தவிர்ந்த, காலிமுகத்திடலின் எழில் மிகுந்த தோற்றத்திற்குப் பாதிப்புக்களை ஏற்படுத்தும் அல்லது பாதிப்புக்களை ஏற்படுத்தக் கூடிய இசை நிகழ்ச்சிகள், அரசியல் கூட்டங்கள் அல்லது வேறு நடவடிக்கைகளுக்காக காலி முகத்திடலைப் பயன்படுத்துவதற்கு அனுமதி வழங்காதிருப்பதற்கு அமைச்சரவை தீர்மானித்துள்ளது.

பெருநிறுவன சமூகப் பொறுப்பு  (CSR) கருத்திட்டமாக காலிமுகத்திடலை அபிவிருத்தி செய்வதற்கு இலங்கை துறைமுக அதிகாரசபை பொறுப்பேற்றுள்ளதுடன், இதுவரை மேற்கொள்ளப்பட்டுள்ள அபிவிருத்தி நடவடிக்கைகளுக்காக குறித்த அதிகாரசபை ரூ. 220 மில்லியன் ரூபாய்களை செலவிட்டுள்ளது. கடந்த போராட்ட காலங்களில் சொத்துக்களுக்கு ஏற்பட்ட சேதங்களை புனரமைக்க மாத்திரம் 6.6 மில்லியன் ரூபாய்கள் செலவிடப்பட்டுள்ளது.

பொதுமக்கள் சுதந்திரமாகப் பொழுதைக் கழிப்பதற்கு இயலுமாகும் வகையில் இத்திடலைப் பயன்படுத்த வேண்டியிருப்பினும், இசை நிகழ்ச்சிகள் மற்றும் பெருந்திரளான மக்கள் ஒன்றுகூடும் வேறு பல செயற்பாடுகளால் இத்திடல் தொடர்ந்து சேதமடைவதுடன், இச்சுற்றுச்சூழலின் அழகையும், எழில் மிகுந்த தோற்றத்தையும் பேணிச் செல்வதில் சிரமங்கள் ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

2. இலங்கைக்கும் இஸ்ரேலுக்கும் இடையில் தற்போது காணப்படுகின்ற விமானப் போக்குவரத்து ஒப்பந்தத்தைத் திருத்தம் செய்தல்
இலங்கைக்கும் இஸ்ரேலுக்கும் இடையிலான விமானப் போக்குவரத்து ஒப்பந்தத்தில் 2003.08.24 அன்று கையொப்பமிடப்பட்டுள்ளதுடன், குறித்த ஒப்பந்தத்தை திருத்தம் செய்வதற்காக 2016.12.06 அன்று பஹாமாஸ் நாட்டில் நாசாயூகில் இடம்பெற்ற சிவில் விமான சேவைகள் மாநாட்டில் இருதரப்பினர்களுக்கிடையே உடன்பாடு எட்டப்பட்டுள்ளது. அதற்கமைய, அதற்கமைவான விதிமுறை ஒப்பந்தத்தில் (Protocol) கையொப்பமிடுவதற்காக 2021.01.11 அன்று இடம்பெற்ற அமைச்சரவைக் கூட்டத்தில் இதற்கு முன்னர் அங்கீகாரம் வழங்கப்பட்டிருப்பினும், இதுவரை ஒப்பந்தத்தில் கையொப்பமிடப்படவில்லை.

குறித்த விதிமுறை ஒப்பந்த வரைபுக்கு சட்டமா அதிபரின் ஒப்புதல் மற்றும் வெளிவிவகார அமைச்சின் உடன்பாடு கிடைத்துள்ளது. அதற்கமைய, இலங்கைக்கும் இஸ்ரேலுக்கும் இடையில் தற்போது கையொப்பமிடப்பட்டுள்ள விமானப் போக்குவரத்து ஒப்பந்தத்தைத் திருத்தம் செய்வதற்கான விதிமுறை ஒப்பந்தத்தில் கையொப்பமிடுவதற்கும், இலங்கை அரசு சார்பாக குறித்த விதிமுறை ஒப்பந்தத்தில் கையொப்பமிடுவதற்காக இஸ்ரேலுக்கான இலங்கைத் தூதுவருக்கு அதிகாரம் வழங்குவதற்கும் துறைமுகங்கள், கப்பல்துறை மற்றும் விமான சேவைகள் அமைச்சர் சமர்ப்பித்த யோசனைக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.

3. தேசிய மரநடுகை வேலைத்திட்டம் - 'நாட்டின் மூச்சுக்கான சுபநேரம்'
2020 ஆம் ஆண்டில் தேசிய மரநடுகை வேலைத்திட்டத்திற்கு இணையாக தமிழ் சிங்கள புத்தாண்டு சுபநேரப் பத்திரத்தில் மரநடுகைக்கான தேசிய சுபநேரமும் சேர்க்கப்பட்டுள்ளது. அதற்கமைய, 'சுபநேரத்தில் ஒரு மரம் - நாட்டின் மூச்சுக்கான சுபநேரம்' எனும் மரநடுகை வேலைத்திட்டம் குறித்த ஆண்டில் நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளதுடன், நாடளாவிய ரீதியில் 11 இலட்சம் மரக்கன்றுகளும் நாட்டப்பட்டன.

இவ்வருட தமிழ் சிங்கள புத்தாண்டு சுபநேரப் பத்திரத்திற்கமைய, 2023.04.20 ஆம் திகதி முற்பகல் 6.38 இற்கு மரநடுகைக்கான சுபநேரம் அமைவதுடன், குறித்த சுபநேரத்தை அடிப்படையாகக் கொண்டு மரநடுகை வேலைத்திட்டத்தை நடைமுறைப்படுத்துவதற்காக விவசாய அமைச்சு நடவடிக்கை எடுத்துள்ளது.

அதற்கமைய, இவ்வருடத்தில் பயன்தரு பலபருவப் பயிர்களை நடுகை செய்வதற்கும், எமது நாட்டில் 52 இலட்ச மொத்தக் குடும்பங்களையும் பங்கேற்புச் செய்வதற்காக விவசாய அமைச்சு மேற்கொண்டுள்ள படிமுறைகள் தொடர்பாக அமைச்சரவைக்குத் தெளிவூட்டப்பட்டது. குறித்த வேலைத்திட்டத்திற்கு உடன்பாடு தெரிவிப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது.

4. இலங்கையில் மாலைதீவு கலாச்சார நிலையமொன்றை அமைப்பதற்கான புரிந்துணர்வு ஒப்பந்தமொன்றை மேற்கொள்ளல்
கலாச்சார மற்றும் கலை விவகாரங்கள் தொடர்பான பயிற்சி வாய்ப்புக்களை வழங்கல், விளையாட்டுக்களுக்கான வசதியளித்தல், கண்காட்சிகள், இசை நிகழ்ச்சிகள், மாநாடுகள், பொதுக் கருத்தரங்குகள், திரைப்படங்கள் மற்றும் ஏனைய கட்புல செவிப்புல தயாரிப்புக்களின் வெளியீடுகள் போன்ற செயற்பாடுகளுக்காக இலங்கையில் மாலைதீவுக் குடியரசின் கலாச்சார நிலையமொன்றை தாபிப்பதற்கான முன்மொழிவு சமர்ப்பிக்கப்பட்டுள்ளது.

அதற்கான புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் கையொப்பமிடுவதற்கு இருதரப்பினருக்குமிடையில் உடன்பாடு எட்டப்பட்டுள்ளதுடன், புரிந்துணர்வு ஒப்பந்த வரைபுக்கு சட்டமா அதிபரின் ஒப்புதல் கிடைத்துள்ளது.

அதற்கமைய, குறித்த புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் கையொப்பமிடுவதற்கு புத்தசாசன, சமய மற்றும் கலாச்சார விவகாரங்கள் அமைச்சர் சமர்ப்பித்த யோசனைக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.

5. அபிவிருத்தி லொத்தர் சபையின் சீட்டிழுப்புக்களுக்கான அதிஷ்டலாபச் சீட்டுக்களை அச்சிடுவதற்கான பெறுகைக் கோரல்
2023 மே மாதம் தொடக்கம் ஒருவருட காலப்பகுதிக்கான அபிவிருத்தி லொத்தர் சபையின் கணணிமுறை சீட்டிழுப்புக்களுக்கான லக்கின அதிஷ்டம், அத கோடிபதி, சனிதா, சுப்பர் போல், அபிவிருத்தி அதிஷ்டம், ஜயோதா, கப்ருக மற்றும் சசிரி போன்ற அதிஷ்டலாபச் சீட்டுக்களை அச்சிட்டு விநியோகிப்பதற்கான பெறுகைக் கோரலுக்கு ஒவ்வொரு அதிஷ்டலாபச் சீட்டின் அடிப்படையில் தேசிய போட்டிவிலைமனுக் கோரல் முறைமையைப் பின்பற்றி விலைமுறி கோரப்பட்டுள்ளது.

அமைச்சரவையால் நியமிக்கப்பட்டுள்ள நிரந்தரப் பெறுகைக் குழ மற்றும் மேன்முறையீட்டு சபையின் பரிந்துரைகளுக்கமைய கீழ்க்காணும் வகையில் குறித்த அதிஷ்டலாபச் சீட்டுக்களை அச்சிட்டு விநியோகிப்பதற்கான பெறுகைகளை வழங்குவதற்காக நிதி, பொருளாதார உறுதிப்பாடு மற்றும் தேசிய கொள்கைகள் அமைச்சராக ஜனாதிபதி சமர்ப்பித்துள்ள யோசனைக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.

  • லக்கின அதிஷ்டம், அத கோடிபதி, சுப்பர் போல், மற்றும் கப்ருக அதிஷ்டலாபச் சீட்டுக்களை அச்சிட்டு விநியோகிப்பதற்கான பெறுகையை Grand Export (Pvt) Ltd இற்கு வழங்குதல்
  • சனிதா, ஜயோதா, அபிவிருத்தி அதிஷ்டம் மற்றும் சசிரி அதிஷ்டலாபச் சீட்டுக்களை அச்சிட்டு விநியோகிப்பதற்கான பெறுகையை Printcare Secure Ltd இற்கு வழங்குதல்

6. 2007 ஆம் ஆண்டின் 48 ஆம் இலக்க விசேட வியாபாரப் பண்டங்கள் அறவீட்டுச் சட்டத்தின் ஏற்பாடுகளுக்கமைவாக விதிக்கப்பட்டுள்ள கட்டளைகளை பாராளுமன்ற அங்கீகாரத்திற்காக சமர்ப்பித்தல்
2007 ஆம் ஆண்டின் 48 ஆம் இலக்க விசேட வியாபாரப் பண்டங்கள் அறவீட்டுச் சட்டத்தின் 2 ஆம் பிரிவு மற்றும் 5 ஆம் பிரிவின் கீழ் வெளியிடப்பட்டுள்ள கீழ்க்காணும் கட்டளைகளை பாராளுமன்ற அங்கீகாரத்திற்காக சமர்ப்பிப்பதற்காக நிதி, பொருளாதார உறுதிப்பாடு மற்றும் தேசிய கொள்கைகள் அமைச்சராக ஜனாதிபதி சமர்ப்பித்துள்ள யோசனைக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.

  • 2022.11.30 ஆம் திகதிய 2308/17 ஆம் இலக்க அதிவிசேட வர்த்தமானிப் பத்திரிகையின் மூலம் வெளியிடப்பட்டுள்ள 2007 ஆம் ஆண்டின் 48 ஆம் இலக்க விசேட வியாபாரப் பண்டங்கள் அறவீட்டுச் சட்டத்தின் 2 ஆம் பிரிவின் கீழான கட்டளை
  • 2023.01.04 ஆம் திகதிய 2313/34 ஆம் இலக்க அதிவிசேட வர்த்தமானிப் பத்திரிகையின் மூலம் வெளியிடப்பட்டுள்ள 2007 ஆம் ஆண்டின் 48 ஆம் இலக்க விசேட வியாபாரப் பண்டங்கள் அறவீட்டுச் சட்டத்தின் 2 ஆம் பிரிவின் கீழான கட்டளை
  • 2023.01.25 ஆம் திகதிய 2316/28 ஆம் இலக்க அதிவிசேட வர்த்தமானிப் பத்திரிகையின் மூலம் வெளியிடப்பட்டுள்ள 2007 ஆம் ஆண்டின் 48 ஆம் இலக்க விசேட வியாபாரப் பண்டங்கள் அறவீட்டுச் சட்டத்தின் 2 ஆம் பிரிவின் கீழான கட்டளை
  • 2023.02.20 ஆம் திகதிய 2320/04 ஆம் இலக்க அதிவிசேட வர்த்தமானிப் பத்திரிகையின் மூலம் வெளியிடப்பட்டுள்ள 2007 ஆம் ஆண்டின் 48 ஆம் இலக்க விசேட வியாபாரப் பண்டங்கள் அறவீட்டுச் சட்டத்தின் 2 ஆம் மற்றும் 5ம் பிரிவின் கீழான கட்டளை
  • 2023.03.04 ஆம் திகதிய 2321/76 ஆம் இலக்க அதிவிசேட வர்த்தமானிப் பத்திரிகையின் மூலம் வெளியிடப்பட்டுள்ள 2007 ஆம் ஆண்டின் 48 ஆம் இலக்க விசேட வியாபாரப் பண்டங்கள் அறவீட்டுச் சட்டத்தின் 2 ஆம் பிரிவின் கீழான கட்டளை
  • 2023.03.07 ஆம் திகதிய 2322/20 ஆம் இலக்க அதிவிசேட வர்த்தமானிப் பத்திரிகையின் மூலம் வெளியிடப்பட்டுள்ள 2007 ஆம் ஆண்டின் 48 ஆம் இலக்க விசேட வியாபாரப் பண்டங்கள் அறவீட்டுச் சட்டத்தின் 2 ஆம் பிரிவின் கீழான கட்டளை
  • 2023.03.07 ஆம் திகதிய 2322/21 ஆம் இலக்க அதிவிசேட வர்த்தமானிப் பத்திரிகையின் மூலம் வெளியிடப்பட்டுள்ள 2007 ஆம் ஆண்டின் 48 ஆம் இலக்க விசேட வியாபாரப் பண்டங்கள் அறவீட்டுச் சட்டத்தின் 5 ஆம் பிரிவின் கீழான கட்டளை
  • 2023.03.17 ஆம் திகதிய 2323/40 ஆம் இலக்க அதிவிசேட வர்த்தமானிப் பத்திரிகையின் மூலம் வெளியிடப்பட்டுள்ள 2007 ஆம் ஆண்டின் 48 ஆம் இலக்க விசேட வியாபாரப் பண்டங்கள் அறவீட்டுச் சட்டத்தின் 2ம் மற்றும் 5ம் பிரிவின் கீழான கட்டளை

7. 1969 ஆம் ஆண்டின் 01 ஆம் இலக்க இறக்குமதி மற்றும் ஏற்றுமதி (கட்டுப்பாட்டுச்) சட்டத்தின் கீழான ஒழுங்குவிதிகளை பாராளுமன்ற அங்கீகாரத்திற்காக சமர்ப்பித்தல்
1969 ஆம் ஆண்டின் 01ம் இலக்க இறக்குமதி மற்றும் ஏற்றுமதி (கட்டுப்பாட்டுச்) சட்டத்தின் கீழ் ஆக்கப்பட்டுள்ள 2023.03.24 ஆம் திகதிய 2324/45 ஆம் இலக்க அதிவிசேட வர்த்தமானிப் பத்திரத்தின் மூலம் வெளியிடப்பட்டுள்ள 2023 ஆம் ஆண்டின் 06 ஆம் இலக்க இறக்குமதி மற்றும் ஏற்றுமதி (கட்டுப்பாட்டுச்) சட்டத்தின் கீழான ஒழுங்குவிதிகளை பாராளுமன்ற அங்கீகாரத்திற்காக சமர்ப்பிப்பதற்காக நிதி, பொருளாதார உறுதிப்பாடு மற்றும் தேசிய கொள்கைகள் அமைச்சராக ஜனாதிபதி சமர்ப்பித்துள்ள யோசனைக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.

8. 1979 ஆம் ஆண்டின் 40 ஆம் இலக்க ஏற்றுமதி அபிவிருத்திச் சட்டத்தின் கீழான கட்டளைகளை பாராளுமன்ற அங்கீகாரத்திற்காக சமர்ப்பித்தல்
1979 ஆம் ஆண்டின் 40 ஆம் இலக்க ஏற்றுமதி அபிவிருத்திச் சட்டத்தின் 14வது உறுப்புரையின் கீழ் ஆக்கப்பட்டுள்ள 2023.03.28 ஆம் திகதிய 2325/06 ஆம் இலக்க அதிவிசேட வர்த்தமானிப் பத்திரத்தின் மூலம் வெளியிடப்பட்டுள்ள கட்டளைகளை பாராளுமன்ற அங்கீகாரத்திற்காக சமர்ப்பிப்பதற்காக முதலீட்டு ஊக்குவிப்பு அமைச்சராக ஜனாதிபதி சமர்ப்பித்துள்ள யோசனைக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.

9. கண்டிய சட்ட பிரகடனம் மற்றும் திருத்தக் கட்டளைச்சட்டத்திற்கான (Kandyan law declaration and amendment ordinance) திருத்தத்தை அறிமுகப்படுத்தல்
கண்டிய சட்டத்தின் கீழ் மேற்கொள்ளப்படும் திருமணங்களின் போது விதவைகளுக்கு ஏற்படும் தீமைபயக்கும் நிலைமைகளை நிவர்த்தி செய்வதற்கு இயலுமாகும் வகையில் பொதுவான சட்டத்தின் கீழ் விதவையொருவருக்கு உரித்தாகும் உரிமைகள் கண்டிய சட்டத்தின் கீழ் திருமணமாகிய விதவைகளுக்கும் உரித்தாகும் வகையில் ஏற்பாடுகளை வகுத்துத் தருமாறு கண்டிய சமூகத்தவர்கள் நீண்டகாலமாகக்; கோரிக்கைகளை முன்வைத்துள்ளனர்.

அதற்கமைய, கண்டிய சட்டப் பிரகடனம்  மற்றும் திருத்தக் கட்டளைச்சட்டத்தை திருத்தம் செய்வதற்கும், அதற்காக திருத்தத்தை தயாரிக்குமாறு சட்டவரைஞருக்கு ஆலோசனை வழங்குவதற்கும் நீதி, சிறைச்சாலை அலுவல்கள் மற்றும் அரசியலமைப்பு மறுசீரமைப்பு அமைச்சர் சமர்ப்பித்துள்ள யோசனைக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.

10. 1976 ஆம் ஆண்டின் 01 ஆம் இலக்க இலங்கை கட்டடக்கலையியலாளர் கல்வி நிறுவக சட்டத்திருத்தம்
இலங்கையில் கட்டடக்கலை தொழில், அதன் நடைமுறைகள் மற்றும் கட்டடக்கலையியல்கலைக் கல்வி  தொடர்பாக 1976 ஆம் ஆண்டின் 01 ஆம் இலக்க சட்டத்தின் மூலம் நிறுவப்பட்டுள்ள கட்டடக்கலையியலாளர் கல்வி நிறுவகம் செயலாற்றி வருகின்றது. கட்டடக்கலையியல் தொழிலின் சமகாலத் தேவைகளுக்கு ஏற்புடைய வகையில் இலங்கை கட்டடக்கலையியலாளர் கல்வி நிறுவகச் சட்டத்தில் குறிப்பிடப்பட்டுள்ள நடைமுறைகள், உறுப்புரிமை மற்றும் உரிமப் பயன்பாடு போன்றவற்றுக்குரிய சட்டப்பிரிவுகளைத் திருத்தம் செய்ய வேண்டிய தேவை கண்டறியப்பட்டுள்ளது.

அதற்கமைய, அதுதொடர்பான விடயங்களை ஆராய்ந்து பரிந்துரைகளைச் சமர்ப்பிப்பதற்காக குறித்த தொழில்வாண்மை நிறுவனங்களின் பிரதிகளுடன் கூடிய குழுவொன்று நியமிக்கப்பட்டுள்ளது.

அக்குழுவின் பரிந்துரைகளுக்கமைவாக 1976 ஆம் ஆண்டின் 01 ஆம் இலக்க இலங்கை கட்டடக்கலையியலாளர் கல்வி நிறுவக சட்டத்தின் குறித்த பிரிவுகளை திருத்தம் செய்வதற்காக நீதி, சிறைச்சாலை அலுவல்கள் மற்றும் அரசியலமைப்பு மறுசீரமைப்பு அமைச்சர் சமர்ப்பித்துள்ள யோசனைக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.

11. சர்வதேச நாணய நிதியத்தின் நீடிக்கப்பட்ட கடன்வசதி செயற்பாடுகளுக்கான பாராளுமன்ற அனுமதியைப் பெற்றுக்கொள்ளல்
சர்வதேச நாணய நிதியத்தின் நிறைவேற்று சபையால் 2023.03.22 ஆம் திகதி 48 மாதகாலத்திற்கான விசேட மீட்பு உரிமைகள் (SDR) 2.29 பில்லியன் அமெரிக்க டொலர்கள், (அண்ணளவாக 03 பில்லியன் அமெரிக்க டொலர்கள்) பெறுமதியுடன் கூடிய நீடிக்கப்பட்ட கடன்வசதி இலங்கைக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளதுடன், நிதி, பொருளாதார உறுதிப்பாடு மற்றும் தேசிய கொள்கைகள் அமைச்சு அதற்கான வாக்குறுதிப் பத்திரத்தை வெளியிட்டுள்ளது.

குறித்த நிதி வசதிகள் மற்றும் ஏனைய ஆவணங்கள் 2023.03.22 ஆம் திகதி பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்டுள்ளதுடன், குறித்த கடன்வசதி தொடர்பாக பாராளுமன்ற உறுப்பினர்களின் நிலைப்பாட்டை உறுதி செய்து கொள்வதற்கும், குறித்த கடன் வசதிக்குரிய ஏற்புடைய பிரதான கொள்கை வகுப்புக்களில் உட்சேர்த்துக் கொள்ள வேண்டியுள்ளது.

அதற்கமைய, சர்வதேச நாணய நிதியத்தின் நீடிக்கப்பட்ட கடன்வசதி செயற்பாடுகளுக்காக பாராளுமன்ற அங்கீகாரத்தைப் பெற்றுக்கொள்வதற்காக நிதி, பொருளாதார உறுதிப்பாடு மற்றும் தேசிய கொள்கைகள் அமைச்சராக ஜனாதிபதி சமர்ப்பித்துள்ள யோசனைக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.

12. 2002 ஆம் ஆண்டின 24 ஆம் இலக்க நலன்புரி நன்மைகள்; சட்டத்தின் ஏற்பாடுகளுக்கமைய நலன்புரி நன்மைகளைச் செலுத்துவதற்கான உத்தேசத் திட்டத்தை தயாரித்து நடைமுறைப்படுத்தல்
2002 ஆம் ஆண்டின 24 ஆம் இலக்க நலன்புரி நன்மைகள்; சட்டத்தின் ஏற்பாடுகளுக்கமைய நலன்புரி நன்மைகளைச் செலுத்துதல் தொடர்பாக குறித்த காலப்பகுதி உத்தேச திட்டத்தின் கீழ் நன்மைகளைப் பெறுபவர்களின் மொத்த எண்ணிக்கை, நடைமுறைப்படுத்தலை ஆரம்பிக்கும் தினம், உத்தே திட்டத்தை நடைமுறைப்படுத்துவதற்காக செலவாகும் தொகை போன்ற விடயங்களைத் திட்டவட்டமாகக் குறிப்பிட்டு அதற்காக அமைச்சரவை அங்கீகாரத்தைப் பெற்றுக்கொண்ட பின்னர், வர்த்தமானி பத்திரத்தில் வெளியிட்டு குறித்த நலன்புரிக் கொடுப்பனவுகளைச் செலுத்துவதற்கு பாராளுமன்ற அங்கீகாரத்தைப் பெற்றுக் கொள்ள வேண்டும்.

அதற்கமைய, நடைமுறைப்படுத்த வேண்டிய உத்தேச திட்டமொன்றைத் தயாரிப்பதற்கான வழிகாட்டலைப் பெற்றுக்கொள்வதற்காக விடயம்சார் நிபுணர்களுடன் கூடிய தொழிநுட்பக் குழுவால் சமர்ப்பிக்கப்பட்டுள்ள அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ள விடயங்களைக் கருத்தில் கொண்டு, வறுமை இடைவெளியின் அடிப்படையில், நிலைமாற்றுநிலை, இடர்நேர்வுகளுக்குள்ளாகிய, வறுமை மற்றும் தீவிர வறுமைக்குட்பட்ட சமூகக் குழுக்களுக்கு நலன்புரி நன்மைகள் உத்தேச திட்டத்தை நடைமுறைப்படுத்துவதற்குத் திட்டமிடப்பட்டுள்ளது.

அத்துடன், தற்போது நலன்புரி நன்மைகளைப் பெற்றுவருகின்ற இயலாமையுடன் கூடிய நபர்கள், சிறுநீரக நோயாளர்கள் மற்றும் வயோதிபர்களை அடையாளங்கண்டு அவர்களுக்கான வேறானதொரு நலன்புரி நன்மைகள் உத்தேச திட்டத்தை நடைமுறைப்படுத்தவும் திட்டமிடப்பட்டுள்ளது.

அதற்கமைய, உத்தேச நலன்புரி நன்மைகள் திட்டத்தை 2023.07.01 தொடக்கம் நடைமுறைப்படுத்துவதற்கு எதிர்பார்க்கின்றதுடன், அதற்காக செலவிடப்படும் மொத்தத் தொகை ஆண்டொன்றுக்கு 206 மில்லியன் ரூபாய்கள் எனவும் கணக்கிடப்பட்டுள்ளது.

அதற்கமைய, உத்தேச நலன்புரி நன்மைகள் கொடுப்பனவு செலுத்தல் முறைமைகளை நடைமுறைப்படுத்துவதற்காக நிதி, பொருளாதார உறுதிப்பாடு மற்றும் தேசிய கொள்கைகள் அமைச்சராக ஜனாதிபதி சமர்ப்பித்துள்ள யோசனைக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.

13. 2011 ஆம் ஆண்டின் 18 ஆம் இலக்க துறைமுக விமானநிலைய அபிவிருத்தி அறவீட்டுச் சட்டத்தின் ஏற்பாடுகளுக்கமைய விதிக்கப்பட்டுள்ள கட்டளைகளை பாராளுமன்ற அங்கீகாரத்திற்காக சமர்ப்பித்தல்
உற்பத்திக் கைத்தொழில் ஊக்குவிப்பு, சர்வதேச வணிகங்களை மேற்கொள்வதில் நிலவுகின்ற தடைகளை அகற்றல் மற்றும் விவசாயத்துறை உள்ளிட்ட உள்ளூர் தொழிற்றுறைகள் மற்றும் கருத்திட்டங்களுக்குத் தேவையான ஊக்குவிப்புக்கள் மற்றும் வசதியளித்தல்களுக்காக துறைமுக விமானநிலைய அபிவிருத்திக்கான வரி மற்றும் வியாபாரப் பண்டங்கள் ஏற்றுமதி சலுகைகள் உத்தேச முறையின் கீழான வரி (செஸ் வரி) போன்ற தீர்வை வரிகளற்ற, ஏற்றுமதி அடிப்படையில் விதிக்கப்பட்டுள்ள வரியை படிப்படியாக நீக்குவதற்காக ஜனாதிபதியினால் நிதி, பொருளாதார உறுதிப்பாடு மற்றும் தேசிய கொள்கைகள் அமைச்சராக 2023 ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத்திட்டத்தின் மூலம் முன்மொழியப்பட்டுள்ளது.

அதற்கமைவாக நடவடிக்கைகளை மேற்கொள்ளும் போது அரச வருமானத்தின் மீது ஏற்படுகின்ற தாக்கங்களை சமநிலைப்படுத்துவதற்காக சுங்க இறக்குமதி வரி மூலம் நிவர்த்தி செய்வதற்கு எதிர்பார்க்கப்படுகின்றது. இவ்வேலைத்திட்டம் உலக வங்கியின் அபிவிருத்திக் கொள்கைளுக்கான நிதியிடல் நிகழ்ச்சித்திட்டத்தின் ஒருபகுதியாக நிறைவேற்ற வேண்டிய முற்கூட்டிய நடவடிக்கையாக கண்டறியப்பட்டுள்ளது.

அதற்கமைய, முதற்படிமுறையாக அரசுக்கு குறைந்தளவு வருமான இழப்பு உனும் அடிப்படையில் தெரிவுசெய்யப்பட்ட தீர்வை வரி பொருள் வகைகள் 1,631 இற்கான துறைமுக விமானநிலைய அபிவிருத்தி வரியிலிருந்து விடுவிப்பதற்காக 2011 ஆம் ஆண்டின் 18 ஆம் இலக்க துறைமுக விமானநிலைய அபிவிருத்தி அறவீட்டுச் சட்டத்தின் கீழ் கட்டளைகள் வெளியிடப்பட்டுள்ளன. குறித்த கட்டளைகளை பாராளுமன்ற அங்கீகாரத்திற்காக சமர்ப்பிப்பதற்காக நிதி, பொருளாதார உறுதிப்பாடு மற்றும் தேசிய கொள்கைகள் அமைச்சராக ஜனாதிபதி சமர்ப்பித்துள்ள யோசனைக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது. 


Add new comment

Or log in with...