அனைத்து அரச பாடசாலைகளும் திட்டமிட்டபடி ஆரம்பம்

- இடைநிலை வகுப்புகளில் இணைக்கும் சுற்றுநிருபம் ஏப்ரல் 20
- அதுவரை கல்வி அமைச்சினால் கடிதங்கள் வழங்கப்படாது

அனைத்து தமிழ், சிங்கள அரசாங்க பாடசாலைகளும் தவணை அட்டவணைக்கு அமைய நாளை ஏப்ரல் 17ஆம் திகதி ஆரம்பமாகவுள்ளன.

கல்வி அமைச்சு இதனை அறிவித்துள்ளது.

இதேவேளை முஸ்லிம் பாடசாலைகள் ரமழான் நோன்பு நிறைவடைந்ததைத் தொடர்ந்து 1ஆம் தவணையின் முதற் கட்டத்திற்காக ஏப்ரல் 24ஆம் திகதி ஆரம்பமாகவுள்ளன. (அட்டவணை இணைப்பு)

கடந்த மார்ச் 24ஆம் திகதி 2022 ஆம் ஆண்டுக்கான 3ஆம் தவணை நிறைவடைந்திருந்தது.

அதற்கமைய, 2023 ஆம் ஆண்டுக்கான பாடசாலை முதலாம் தவணை கடந்த மார்ச் 27ஆம் திகதி திங்கட்கிழமை ஆரம்பமானது.

அதனைத் தொடர்ந்து, 2023 ஆம் ஆண்டிற்கான பாடசாலை முதலம் தவணையின் முதற் கட்டம் ஏப்ரல் 04 ஆம் திகதியுடன் நிறைவடைந்ததோடு, சித்திரை புத்தாண்டுடன் இணைந்ததாக ஏப்ரல் 05 - 16 வரை விடுமுறை வழங்கப்பட்டது.

அதனைத் தொடர்ந்து 2023 பாடசாலை முதலாம் தவணையின் இரண்டாம் கட்ட கல்விச் செயற்பாடுகளுக்காக நாளை ஏப்ரல் 17 ஆம் திகதி பாடசாலைகள் ஆரம்பமாகவுள்ளன.

முதலாம் தவணையின் இரண்டாம் கட்டம் மே 12 ஆம் திகதி வெள்ளிக்கிழமை வரை இடம்பெறவுள்ளது.

ஏற்கனவே மே 14ஆம் திகதி க.பொ.த. சாதாரண தரப் பரீட்சைக்காக விடுமுறை வழங்க திட்டமிடப்பட்டிருந்த நிலையில், அது மே 29ஆம் திகதிக்கு ஒத்தி வைக்கப்பட்டுள்ளதால் குறித்த காலப் பகுதியில் க.பொ.த. சாதாரண தரப் பரீட்சைகளுக்காக விடுமுறை வழங்கப்படுமென எதிர்பார்க்கப்படுகின்றது.

இடைநிலை வகுப்புகளில் மாணவர்களை சேர்த்தல்
இதேவேளை, எதிர்வரும் ஏப்ரல் 20 ஆம் திகதி முதல் அமுலுக்கு வரும் வகையில் தேசிய பாடசாலைகளில் இடைநிலை வகுப்புகளுக்கு மாணவர்களை அனுமதிப்பது தொடர்பாக புதிய சுற்றறிக்கை வெளியிடப்படவுள்ளதாக கல்வி அமைச்சு சுட்டிக்காட்டியுள்ளது.

அந்த வகையில், இடைநிலை வகுப்புகளில் மாணவர்களை அனுமதிப்பதற்கான கடிதங்களை அமைச்சு வழங்காது என கல்வி அமைச்சு குறிப்பிட்டுள்ளது.

PDF icon School-Term-time-Table.pdf (1.48 MB)

PDF File: 

Add new comment

Or log in with...