பாவனையாளர் அலுவல்கள் அதிகாரசபையினால் 2 அதி விசேட வர்த்தமானிகள்

- சில பொருட்களின் நேரடி வர்த்தகத்தில் ஈடுபடும் தனிநபர்கள் பதிவு செய்வது கட்டாயம்
- மசகு எண்ணெய், கிரீஸ் இறக்குமதி மற்றும் உற்பத்திக்கு தடை

சூரிய மின்கல தொகுதிகள், தொலைபேசிகள் மற்றும் அவற்றின் பாகங்கள், தளபாடங்கள், துப்புரவாக்கிகள், காலணிகள், காகிதாதிகள், சமையலறை உபகரணங்கள் மற்றும அவற்றின் பாகங்கள், கட்டில் போர்வைகள் மற்றும் மெத்தைகள், தைத்த ஆடைகள் போன்றவற்றின் நேரடி வர்த்தகத்தில் ஈடுபடும் தனிநபர்கள் மற்றும் நிறுவனங்கள் பாவனையாளர் அலுவர்கள் அதிகாரசபையில் பதிவு செய்ய வேண்டும் என அதி விசேட வர்த்தமானி அறிவித்தல் வெளியிடப்பட்டுள்ளது.

பாவனையாளர் அலுவல்கள் அதிகார சபையின் தலைவர் சாந்த நிரியல்லவின் கையொப்பத்துடன் ஏப்ரல் 12 திகதியிடப்பட்டு குறித்த அதி விசேட வர்த்தமானி வெளியிடப்பட்டுள்ளது.

அதற்கமைய, நடமாடும் விற்பனை, வாடிக்கையாளர்களைச் சந்தித்து பேரம் பேசுதல், காட்சிப்படுத்தல், விற்பனை மற்றும் அதுசார்ந்த செய்பாடுகளின் மூலம் வர்த்தகத்தில் ஈடுபடுபவர்கள் நேரடி வர்த்தகர்கள் என்ற வரையறைக்குள் உள்ளடங்குவதாக குறித்த வர்த்தமானியில் குறிப்பிடப்பட்டுள்ளது.

அதற்கமைய அவ்வாறான நேரடி வர்த்தகர்கள் தமது வணிகப் பெயர், பதிவு இலக்கம் அல்லது நிறுவன பதிவு இலக்கம் ஆகியவற்றைச் சமர்ப்பித்து அதிகாரசபையில் உடனடியாக வர்த்தகராக பதிவு செய்ய வேண்டுமென அறிவிக்கப்பட்டுள்ளது.

அத்துடன், அவர்கள் தமது வாடிக்கையாளருக்கு வழங்கிய அச்சிடப்பட்ட அல்லது இலத்திரனியல் வடிவ பற்றுச்சீட்டின் பிரதியை தம்வசம் வைத்திருப்பது அவசியமாகும் என வர்த்தமானியில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

குறித்த பற்றுசீட்டு அல்லது அதன் இலக்கம், பரிவர்த்தனையின் வகை (மொத்த விற்பனை அல்லது சில்லறை விற்பனை), பரிவர்த்தனை திகதி, விற்ற பொருட்களின் வகை, விற்ற பொருட்களின் அளவு, ஒன்றின் பெறுமதி, பொருட்களின் மொத்த பெறுமதி, தொகுதி இலக்கம் (ஏதேனும் இருந்தால்), உத்தரவாத இலக்கம் (ஏதேனும் இருந்தால்), வாடிக்கையாளரின் பெயர் மற்றும் முகவரி, ஏதேனும் எழுதப்பட்ட சட்டத்தின் கீழ் விதிக்கப்பட்ட ஏனைய வழிகாட்டல்கள் உள்ளிட்ட விடயங்கள் அப்பற்றுச்சீட்டில் உள்ளடங்கியிருக்க வேண்டுமெனவும் அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

PDF icon 2327-35_E.pdf (213.39 KB)

மசகு எண்ணெய், கிரீஸ் இறக்குமதி மற்றும் உற்பத்திக்கு தடை
இதேவேளை, ஏற்றுமதி அல்லது இறக்குமதி நோக்கத்துக்காக இலங்கை அரசாங்கத்துடன் அத்தகைய உற்பத்தியாளர் அல்லது வியாபாரியினால் வலிதான உடன்படிக்கையொன்றின் அதிகாரத்தின் கீழல்லாமல் ஏதேனும் மசகு எண்ணெய் அல்லது கிரீஸினை இறக்குமதி செய்தல் அல்லது உற்பத்தி செய்யக் கூடாது என அதி விசேட வர்த்தமானி அறிவித்தலொன்று வெளியிடப்பட்டுள்ளது.

பாவனையாளர் அலுவல்கள் அதிகார சபையின் தலைவர் சாந்த நிரியல்லவின் கையொப்பத்துடன் ஏப்ரல் 12 திகதியிடப்பட்டு வெளியிடப்பட்டுள்ள மற்றுமொரு அதி விசேட வர்த்தமானி அறிவித்தலிலேயே இவ்வறிவித்தல் வெளியிடப்பட்டுள்ளது.

PDF icon 2327-36_T.pdf (120.51 KB)

PDF File: 

Add new comment

Or log in with...