2 அமைச்சுகளுக்கு செயலாளர்கள்; தூதுவர் ஒருவரின் நியமனத்திற்கு அனுமதி

- நயிமுதீன், சத்யானந்தா அமைச்சு செயலாளர்கள்
- பிலிப்பைன்ஸ் தூதுவராக கலாநிதி சானக ஹர்ஷ தல்பஹேவா


இரு அமைச்சுக்களுக்கான புதிய செயலாளர்கள் மற்றும் தூதுவர் ஒருவரின் நியமனத்துக்குப் பாராளுமன்ற உயர் பதவிகள் பற்றிய குழுவில் அனுமதி வழங்கியுள்ளது.

இரண்டு அமைச்சுக்களுக்கான புதிய செயலாளர்கள் மற்றும் புதிய தூதுவர் ஒருவரின் நியமனங்களுக்கு பாராளுமன்ற உயர் பதவிகள் பற்றிய குழுவின் அனுமதி அண்மையில் (06) கிடைத்திருப்பதாகப் பாராளுமன்ற செயலாளர் நாயகம் தம்மிக தசநாயக்க தெரிவித்தார்.

இதற்கமைய நகர அபிவிருத்தி மற்றும் வீடமைப்பு அமைச்சின் புதிய செயலாளராக டபிள்யூ.எஸ். சத்யானந்தாவின் நியமனத்துக்கு உயர் பதவிகள் பற்றிய குழு அனுமதி வழங்கியது.

அத்துடன், முதலீட்டு ஊக்குவிப்பு அமைச்சின் புதிய செயலாளராக எம்.எம். நயிமுதீனின் நியமனத்துக்கும் உயர் பதவிகள் பற்றிய குழு அனுமதி வழங்கியிருப்பதாக செயலாளர் நாயகம் குறிப்பிட்டார்.

இது தவிரவும், பிலிப்பைன்சுக்கான இலங்கைத் தூதுவராகக் கலாநிதி சானக ஹர்ஷ தல்பஹேவாவை நியமிப்பதற்கும் உயர் பதவிகள் பற்றிய குழுவின் அனுமதி கிடைத்திருப்பதாகப் பாராளுமன்ற செயலாளர் நாயகம் தெரிவித்தார்.

பாராளுமன்ற உயர் பதவிகள் பற்றிய குழுக் கூட்டம் அண்மையில் (06) சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தன தலைமையில் கூடியதுடன், இதில் பாராளுமன்ற உறுப்பினர்களான ஜோன் செனவிரத்ன, (சட்டத்தரணி) அநுர பிரியதர்ஷன யாப்பா, (சட்டத்தரணி) தலதா அதுகோரல மற்றும் (வைத்தியகலாநிதி) சுதர்ஷினி பெனாண்டோபுள்ளே ஆகியோர் கலந்துகொண்டனர்.


Add new comment

Or log in with...