CPC வழங்குவதை விடவும் குறைந்த விலைக்கு எரிபொருள்

இலங்கையின் எரிபொருள் சந்தைக்குள் பிரவேசிக்கும் மூன்று வெளிநாட்டு நிறுவனங்களுக்கு, இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபனம் விற்பனை செய்யும் விலையை விட குறைவான விலையில் எரிபொருளை விற்பனை செய்வதற்கு அரசாங்கம் அனுமதி வழங்கியுள்ளது.

மூன்று நிறுவனங்களுடனான ஒப்பந்தங்கள் இந்த மாத இறுதியில் முடிவடையும், அதன்பிறகு ஒரு மாதத்திற்குள் அதன் செயற்பாடுகள் ஆரம்பமாகும் என்று மின்சக்தி மற்றும் எரிசக்தி அமைச்சு தெரிவித்துள்ளது.

சீனாவின் சினோபெக், அவுஸ்திரேலியாவின் யுனைட்டட் பெற்றோலியம் மற்றும் அமெரிக்காவின் ஆர்.எம். பாக்ஸ் ஆகிய நிறுவனங்கள் இலங்கையில் எரிபொருள் சில்லறை விற்பனை சந்தையில் நுழைய அனுமதிக்கப்பட்டுள்ளன.

இந்த நிறுவனங்கள், பெற்றோலியக் கூட்டுத்தாபனத்தின் விலையை விட குறைந்த விலையில் எரிபொருளை விற்க அனுமதித்தால், பெற்றோலியக் கூட்டுத்தாபனத்தின் எரிபொருளுக்கான தேவை குறையலாம்.

எனவே அரசாங்கத்தின் எரிபொருள் செலவும் குறைக்கப்படலாம் என்று அரச அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.

தற்போது அரசாங்கம் சராசரியாக மாதமொன்றுக்கு 450 மில்லியன் அமெரிக்க டொலர்களை எரிபொருளுக்காக செலவழித்து வருகிறது.

இந்த நிலையில் குறித்த மூன்று நிறுவனங்களும் சராசரியாக 120 மில்லியன் அமெரிக்க டொலர் பெறுமதியான எரிபொருளை மாதாந்தம் இறக்குமதி செய்யும் என அமைச்சு எதிர்பார்த்துள்ளது. இந்த நடவடிக்கை பெற்றோலியக் கூட்டுத்தாபன விற்பனையில் தாக்கத்தை ஏற்படுத்தக்கூடும், ஆனால் வாடிக்கையாளர்களுக்கு பயனுள்ளதாக இருக்கும் என்றும் அரச அதிகாரி தெரிவித்துள்ளார்.

இதேவேளை, இலங்கைக்கு வரும் மூன்று நிறுவனங்களும் இறக்குமதிக்கான அமெரிக்க டொலர்களை திரட்ட உள்ளூர் வங்கிகளைப் பயன்படுத்துவதை நிறுவனங்கள் தவிர்க்க வேண்டும்.

அதே நேரத்தில் இலாபத்தை ஒரு வருடத்திற்குப் பின்னரே நாட்டிற்கு வெளியே எடுத்துச்செல்லமுடியும் என்ற நிபந்தனை விதிக்கப்பட்டுள்ளது.


Add new comment

Or log in with...