உயிருடன் புதைக்கப்பட்ட பெண் மீட்பு

பிரேஸிலில் கல்லறையில் உயிருடன் புதைக்கப்பட்ட பெண் 10 மணிநேரம் கழித்துக் கண்டுபிடிக்கப்பட்டுள்ளார்.

மினாஸ் ஜெரைஸ் மாநிலத்தில் உள்ள ஒரு கல்லறையில் அந்தச் சம்பவம் நடந்தது.

அண்மையில் மூடப்பட்டிருந்த கல்லறையைச் சுற்றி ரத்தக் கறைகள் இருந்ததை அடுத்து அங்குள்ள ஊழியர்கள் அவசரச் சேவைகளைத் தொடர்புகொண்டனர்.

உள்ளேயிருந்து உதவி கேட்டுக் குரல் வந்ததாகக் கூறப்பட்டது. கல்லறைச் சுவரை உடைத்து 36 வயதுப் பெண்ணை அந்த அதிகாரிகள் காப்பாற்றியுள்ளனர். பெண்ணின் தலையிலும் கைகளிலும் காயங்கள் இருந்தன.

அவர் கடந்த திங்கட்கிழமை (27 மார்ச்) கல்லறையில் வைக்கப்பட்டார் எனச் சந்தேகிக்கப்படுவதாகக் பொலிஸார் கூறினர்.

அந்தப் பெண்ணின் வீட்டில் மறைத்து வைக்கப்பட்டிருந்த போதைப்பொருட்களும் துப்பாக்கிகளும் காணாமல்போனதை அடுத்து அவர் குண்டர் கும்பலால் தாக்கப்பட்டதாகத் தெரிவிக்கப்பட்டது.

அவரும் அவரின் கணவரும் முகமூடி அணிந்த இரு ஆடவர்களால் தாக்கப்பட்டதாக அந்தப் பெண் பொலிஸாரிடம் குறிப்பிட்டார். அவரின் கணவர் தப்பிவிட்டார்.

20 வயது மதிக்கத்தக்க இரு சந்தேக நபர்களைத் தேடி வருவதாகக் பொலிஸார் குறிப்பிட்டனர்.


Add new comment

Or log in with...