யாழ். மத்திய கல்லூரி அரையிறுதிக்கு தகுதி

பாடசாலைகளுக்கு இடையிலான 19 வயதுக்கு உட்பட்ட பிரிவு மூன்றுக்கான கிரிக்கெட் தொடரில் புத்தளம், ஆனந்த தேசிய பாடசாலை அணியை இன்னிங்ஸ் மற்றும் 29 ஓட்டங்களால் தோற்கடித்த யாழ்ப்பாணம் மத்திய கல்லூரி தொடரின் அரையிறுதிக்கு முன்னேற்றம் கண்டுள்ளது.

அம்பேபுஸ்ஸ, இராணுவ முகாம் மைதானத்தில் நேற்று (30) நிறைவடைந்த இரண்டு நாட்கள் கொண்ட காலிறுதிப் போட்டியில் நாணய சுழற்சியில் வென்று முதலில் துடுப்பெடுத்தாடிய யாழ். மத்திய கல்லூரி 193 ஓட்டங்களை பெற்றது. ஜெகதீஷ்வரன் விதுசன் அதிகபட்சமாக 38 ஓட்டங்களைப் பெற்றார்.

தொடர்ந்து தனது முதல் இன்னிங்ஸை ஆரம்பித்த ஆனந்த தேசிய பாடசாலை 93 ஓட்டங்களுக்கு சுருண்ட நிலையில் இரண்டாவது நாளான நேற்று இரண்டாவது இன்னிங்ஸுக்காக பலோ ஓன் செய்தது. எனினும் அந்த அணி இரண்டாவது இன்னிங்ஸிலும் 71 ஓட்டங்களுக்கு சகல விக்கெட்டுகளையும் பறிகொடுத்தது.

இதன்போது ரஞ்சித்குமார் நியுடன் இரண்டு இன்னிங்ஸ்களிலும் மொத்தமாக 8 விக்கெட்டுகளை பதம்பார்த்தார்.


Add new comment

Or log in with...