குளவிக் கொட்டுக்குள்ளான தோட்டத் தொழிலாளிகள்; ஒருவர் மரணம்

தலவாக்கலை, லிந்துலை, பெர்ஹாம் தோட்டத்தில் குளவி கொட்டுக்கு இலக்காகி தோட்டத் தொழிலாளி ஒருவர் உயிரிழந்துள்ளதாக லிந்துலை பொலிஸார் தெரிவித்தனர்.

லிந்துலை பெர்ஹாம் தோட்டத்தைச் சேர்ந்த ஜோசப் எட்வர்ட் எனும் 72 வயது நபவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.

இன்று (31) பெர்ஹாம் தோட்டத்து தேயிலை மலையில் இருந்த குளவிக் கூடு ஒன்று கலைந்ததில் அங்கு வேலை செய்து கொண்டிருந்த இரு தொழிலாளர்களை குளவிகள் கொட்டியுள்ளன.

இதனைத் தொடர்ந்து குளவி கொட்டுக்கு இலக்காகிய குறித்த இருவரும் லிந்துலை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட நிலையில், அதில் ஒருவர் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

மற்றைய தொழிலாளி மேலதிக சிகிச்சைக்காக நுவரெலியா பொது வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளார்.

உயிரிழந்தவரின் சடலம் தற்போது லிந்துலை வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ள நிலையில், மரண பரிசோதனைக்காக சடலம் நுவரெலியா பொது வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்படவுள்ளதாக, லிந்துலை வைத்தியசாலையின் தலைமை வைத்திய அதிகாரி ஏ. ஜெயராஜன் தெரிவித்துள்ளார்.

தலவாக்கலை குறூப் நிருபர்


Add new comment

Or log in with...