மருதமுனையில் நோன்பு காலத்தில் லுஹர் தொழுகைக்கு பின்னர் ரியூஷன் வகுப்புக்கள் நடத்துவதை தவிர்க்க ஏற்பாடு

மருதமுனை ஜம்இய்யதுல் உலமா சபை மற்றும் அனைத்துப் பள்ளிவாசல்கள் சம்மேளனம், தனியார் கல்வி நிலைய உரிமையாளர்கள், ரியூஷன் வகுப்புக்களை நடத்தும் ஆசிரியர்களுக்கிடையிலான கலந்துரையாடல் மருதமுனை மஸ்ஜிதுல் நூர் ஜூம்ஆ பள்ளிவாசலில் மருதமுனை ஜம்இய்யதுல் உலமா அனைத்துப் பள்ளிவாசல்கள் சம்மேளனத்தின் பிரதித் தலைவர் விரிவுரையாளர் அஸ்செய்க் எப்.எம்.ஏ.அன்ஸார் (நழீமி) தலைமையில் இப்தார் நிகழ்வுடன் நடைபெற்றது.

இந்தக் கலந்துரையாடலின் இறுதியில் மருதமுனையிலுள்ள அனைத்து தனியார் ரியூஷன் கல்வி நிலையங்களையும் நண்பகல் (12.00 மணி) லுஹர் தொழுகைக்கு முன்னர் முடித்துக் கொள்வது எனத் தீர்மானிக்கப்பட்டது.

சம்ளேத்தின் செயலாளர் எம்.எச்.முகம்மட் அல்- இஹ்சான், கல்முனை வலயக்கல்விப் பணிப்பாளர் எம்.எஸ். சஹதுல் நஜீம், நூர் பள்ளிவாசலின் தலைவர் எம்.ஐ.எம். முஹர்ரப் முன்னாள் தலைவர் எம்.எல்.எம். ஜமால்தீன் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

கல்முனை வலயக்கல்விப் பணிப்பாளர் இங்கு உரையாற்றும் போது, நமக்கு முன்பிருந்த கல்விமான்கள் அரசியல் தலைவர்கள் எத்துக்கொண்ட அயராத முயற்சியின் பலனாக நமது மாணவர் சமூகம், ஆசிரியர்களுக்கு ரமழான் விடுமுறை வழங்கப்பட்டுள்ளது. அரச அலுவலகங்களில் கடமையாற்றுபவர்களுக்கு மார்க்க கடமைகளில் ஈடுபடுவதற்கு விசேட விடுமுறை கால அட்டவணை வெளியிடப்படுகிறது. இதனை நாம் சரியாக பயன்படுத்த வேண்டும். ரியூசன் வகுப்புக்கள் ரமழான் நோன்பு நோற்பதற்கும் ஏனைய வணக்கவழிபாடுகளுக்கும் இடையூறாக அல்லது தடையாக அமைந்து விடக்கூடாது என்பதையும் ஊரின் ஒற்றுமை மற்றும் நல்லொழுக்கங்களை கருத்திற் கொண்டும் லுஹர் தொழுகைக்கு முன்னர் தனியார் வகுப்புக்களை முடித்துக் கொள்வது என்ற தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது என்று தெரிவித்தார்.

ஸஹர் வேளையில் நேரகாலத்துடன் எழும்பும் வகையில் தஹஜ்ஜுத் உடைய அதான் சகல ஜும்ஆப் பள்ளிவாசல்களிலும் மு.ப. 3.45 மணிக்கு ஒலிக்கச் செய்ய முஅத்தின்மார்களுக்கு வசதி செய்து கொடுத்தல், நோன்பின் மாண்பை பேணும் வகையில் பகற்காலங்களில் அஸர் தொழுகை வரை சகல உணவகங்கள், சிற்றுண்டி, தேநீர் கடைகளை திரையிட்டு ரமழானின் மாண்பைப் பேணுமாறும் கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளதுடன், இராக்காலங்களில் பெண்கள் மஸ்ஜித்களுக்கு இபாதத்களுக்காக வரும் போது வீதிகளில் தேவையற்ற தொந்தரவுகளில் ஈடுபடுவதைத் தவிர்த்து பெண்களின் கண்ணியத்தைக் காத்து இளைஞர்கள், மாணவர்கள் மஸ்ஜிக்களுக்கு வருகை தந்து வணக்க வழிபாடுகளில் ஈடுபடுமாறும் மருதமுனை ஜம்இய்யதுல் உலமா மற்றும் அனைத்துப் பள்ளிவாசல்கள் சம்மேளனம் மருதமுனை மக்களை கேட்டுக்கொண்டுள்ளது.

ஏ.எல்.எம். ஷினாஸ்...

(பெரியநீலாவணை விசேட நிருபர்)


Add new comment

Or log in with...