- முடிவு அறிக்கையை CID நீதிமன்றிற்கு சமர்ப்பிக்கும்
உயிர்த்த ஞாயிறு குண்டுத் தாக்குதலின் பின்னர் சாய்ந்தமருது பகுதியில் உள்ள பாதுகாப்பு இல்லத்தில் 2019 ஏப்ரல் 26 ஆம் திகதி இடம்பெற்ற தற்கொலைக் குண்டுத் தாக்குதலின் போது சாரா ஜெஸ்மின் என்றழைக்கப்படும் புலஸ்தினி மஹேந்திரன் உயிரிழந்துள்ளதாக மரபணு (DNA) பரிசோதனையில் தெரியவந்துள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் அலுவலகம் அறிவித்துள்ளது.
சாய்ந்தமருது சம்பவம் தொடர்பில் கொல்லப்பட்டவர்கள் பற்றிய குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தினால் மேற்கொள்ளப்படும் விசாரணைகளுக்கு அமைய, மரணமடைந்தவர்களை அடையாளம் காண்பதற்காக, நீதிமன்ற உத்தரவுக்கமைய, விசேட வைத்திய நிபுணர்கள், குற்றப் புலனாய்வுத் திணைக்கள விசாரணை அதிகாரிகள், அரசாங்க இரசாயன பகுப்பாய்வு நிபுணர்களின் பங்குபற்றுதலுடன் 3ஆவது முறையாக பெறப்பட்ட நுணுக்கமான மாதிரி தொடர்பான DNA பரிசோதனையில், மரணமடைந்த நபர்களில் சாரா ஜெஸ்மின் என அழைக்கப்படும் கட்டுவாப்பிட்டி தேவாலய குண்டுதாரியான அச்சி முஹம்மது ஹஸ்துனின் மனைவியான சாரா ஜெஸ்மின் இருப்பது, அரசாங்க பகுப்பாய்வு திணைக்களத்தினால் முன்வைக்கப்பட்ட அறிக்கையில், உறுதிப்படுத்தப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது..
சாரா எனும் புலஸ்தினி மஹேந்திரனின் தாயாரிடம் பெற்றுக்கொள்ளப்பட்ட DNA மாதிரியுடன், குற்றம் இடம்பெற்ற இடத்திலிருந்து பெறப்பட்ட என்புகள் சிலவற்றின் மாதிரியிலிருந்து பெறப்பட்ட மாதிரிகள், தாய்க்கும் மகளுக்கும் இடையில் உயிரியல் ரீதியான தொடர்பை உறுதிப்படுத்தும் முடிவ எனவும், குறித்த என்பு மாதிரிக்கு சொந்தமானவரின் உயிரியல் ரீதியான தாய், ராஜரத்தினம் கவிதா என்பதற்கான சாத்தியம் 99.9999% ஆக உறுதிப்படுத்தப்படுவதாக, குறித்த அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
குறித்த அறிக்கைக்கு அமைய 2019 ஏப்ரல் 26 ஆம் திகதி சாய்ந்தமருது பிரதேசத்தில் பாதுகாப்பான வீடொன்றில் இடம்பெற்ற தற்கொலைக் குண்டு வெடிப்பில் சாரா ஜெஸ்மின் என அழைக்கப்படும் புலஸ்தினி மஹேந்திரன் மரணமடைந்துள்ளதாக உறுதிப்படுத்தப்பட்டுள்ளதாக, பொலிஸ் ஊடகப் பேச்சாளர் அலுவலகம் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது..
அதன் அடிப்படையில், இது தொடர்பில் குற்றப்புலனாய்வு திணைக்களத்தினால் நீதிமன்றத்துக்கு அறிக்கை சமர்ப்பிக்கப்படவுள்ளதாக பொலிஸார் மேலும் தெரிவித்துள்ளனர்.
Add new comment