பாதுகாப்பு படை உதவியுடன் எரிபொருள் விநியோகம் தொடர்கிறது

- தடை ஏற்படுத்தியவர்களுக்கு கட்டாய விடுமுறை
- மு.ப. 9.00 வரை 6,600 லீ. கொண்ட 86 டீசல் பவுசர்கள்; 6,600 லீ. கொண்ட 122 பெற்றோல் பவுசர்கள் விநியோகம்

இன்று காலை 6.00 மணி முதல் கொலன்னாவ மற்றும் முத்துரராஜவெல முனையங்களில் எரிபொருள் விநியோகம் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக மின்சக்தி மற்றும் வலுசக்தி அமைச்சர் கஞ்சன விஜேசேகர தெரிவித்துள்ளார்.

தனது ட்விட்டர் கணக்கில் இது தொடர்பில் பதிவிட்டுள்ள அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.

 

 

பொலிஸார் மற்றும் இராணுவமும் இந்நடவடிக்கைக்கு தொடர்ந்தும் ஆதரவளித்து வருவதாக குறிப்பிட்டுள்ளார்.

இதேவேளை நாட்டில் போதியளவு எரிபொருள் கையிருப்புக்கள் உள்ளதாகவும், சில எரிபொருள் நிரப்பு நிலையங்கள் ஏப்ரல் மாத விலை திருத்தத்தை எதிர்பார்த்து எரிபொருள் கோரிக்கையை முன்வைக்கவில்லை எனவும் அமைச்சர் சுட்டிக்காட்டியுள்ளார்.

அத்துடன் எரிபொருள் பற்றாக்குறையை தவிர்க்க தேவையான குறைந்தபட்ச கையிருப்பை பேண, கோரிக்கைகளை முன்வைக்குமாறு எரிபொருள் நிரப்பு நிலைய உரிமையாளர்களிடம் அமைச்சர் கேட்டுக்கொண்டுள்ளார்.

இன்று காலை 6.00 மணி முதல் 9.00 மணி வரை CPSTL விநியோக முனையங்கள் மற்றும் பிராந்திய டிப்போக்களில் இருந்து 6,600 லீற்றர் கொண்ட 86 பவுசர்கள் மூலம் லங்கா ஒட்டோ டீசல் மற்றும் 6,600 லீற்றர் கொண்ட 122 பவுசர்கள் மூலம் பெற்றோல் 92 ஆகியன அனுப்பப்பட்டுள்ளதாக அமைச்சர் கஞ்சன விஜேசேகர தெரிவித்துள்ளார்.

 

 

தடங்கல் ஏற்படுத்தியோருக்கு கட்டாய விடுமுறை
இதேவேளை நேற்றையதினம் (28) எரிபொருள் விநியோக நடவடிக்கைகளைத் தடுத்து, எரிபொருள் விநியோக கடமைகளில் ஈடுபட்டிருந்த ஊழியர்களை தடுத்து நிறுத்திய தொழிற்சங்க தலைவர்கள் மற்றும் அதற்கு ஆதரவளித்த ஊழியர்களை கட்டாய விடுமுறையில் அனுப்ப இலங்கை பெற்றோலிய கூட்டுத்தாபனம் மற்றும் இலங்கை பெற்றோலிய களஞ்சிய முனைய நிர்வாகம் தீர்மானித்துள்ளது.

இது தொடர்பில் அறிக்கை ஒன்றை விடுத்துள்ள அந்நிறுவனங்களின் தலைவர் இதனை தெரிவித்துள்ளார்.

அதற்கமைய, அவர்களுக்கு உடன் அமுலுக்கு வரும் வகையில் இலங்கை பெற்றோலிய கூட்டுத்தாபன வளாகம், இலங்கை பெற்றோலிய களஞ்சிய சேவை முனைய வளாகங்கள் ஆகியன தடை செய்யப்பட்ட பகுதிகளாக அறிவிக்கப்பட்டுள்ளது.

ஏனைய அனைத்து அதிகாரிகளும் சேவைக்கு சமூகமளித்து, எரிபொருள் விநியோக நடவடிக்கைகள் உள்ளிட்ட ஏனைய சேவைகளை தொடர நடவடிக்கை எடுக்குமாறு அறிவிக்கப்பட்டுள்ளது.


Add new comment

Or log in with...