இலங்கை அணி உலகக் கிண்ணத்திற்கு நேரடியாக முன்னேற கடைசி எதிர்பார்ப்பு

நியூசிலாந்துடன் இன்று பலப்பரீட்சை

இலங்கை ஒருநாள் உலகக் கிண்ணத்திற்கு நேரடி தகுதி பெறுவதற்கான கடைசி வாய்ப்பை எதிர்பார்த்து நியூசிலாந்துக்கு எதிரான இரண்டாவது ஒருநாள் போட்டியில் இன்று (28) களமிறங்கவுள்ளது.

கிறைஸ்சேர்ச், ஹேக்லி ஓவல் மைதானத்தில் நடைபெறும் இந்தப் போட்டியில் பெரும் நெருக்கடியுடனேயே களமிறங்குகிறது. நியூசிலாந்துக்கு எதிரான முதல் போட்டியில் 198 ஓட்டங்களால் படுதோல்வியை சந்தித்த இலங்கை அணி மூன்று போட்டிகளைக் கொண்ட ஒருநாள் தொடரை இழப்பதை தடுப்பதற்கு வெற்றி பெறுவது கட்டாயமாக உள்ளது.

அதேபோன்று முதல் போட்டியில் தோற்றதால் உலகக் கிண்ணத்திற்கு நேரடி தகுதி பெறுவதில் நிச்சயமற்ற நிலையை எதிர்கொண்டிருக்கும் இலங்கை அதற்கான கடைசி வாய்ப்பை தக்கவைத்துக்கொள்ள நியூசிலாந்துக்கு எதிரான எஞ்சிய இரு போட்டிகளிலும் வெற்றி பெறுவது கட்டாயமாகும்.

இதன்போது தென்னாபிரிக்க அணி எதிர்வரும் நெதர்லாந்துக்கு எதிரான இரண்டு ஒருநாள் போட்டியில் தோற்கும்பட்சத்தில் இலங்கை அணிக்கு இறுதிப் போட்டிக்கு நேரடியாக முன்னேற முடியும். இல்லாவிட்டால் வரும் ஜூன் மற்றும் ஜூலையில் சிம்பாப்வேயில் நடைபெறும் இறுதிப் போட்டியில் ஆட வேண்டி ஏற்படும்.

நியூசிலாந்துக்கு எதிரான முதல் ஒருநாள் போட்டியில் துடுப்பாட்ட வரிசை முழுமையாக பின்னடைவை சந்தித்த நிலையில் இன்றைய தினம் மாற்றங்கள் நிகழ வாய்ப்பு உள்ளது. குறிப்பாக மத்திய வரிசை வீரர் தனஞ்சய டி சில்வா முதல் போட்டியில் நீக்கப்பட்டதை ஒட்டி சர்ச்சைகள் எழுந்து வரும் நிலையில் அவர் இன்றைய தினம் களமிறக்கப்படுவது பற்றி எதிர்பார்ப்பு உள்ளது.

ரி20 போட்டிகளில் சிறந்த பந்துவீச்சாளராக இருந்தபோதும் வணிந்து ஹசரங்க ஒருநாள் போட்டிகளில் தொடர்ந்து சோபிக்கத் தவறி வருகிறார். இலங்கை அணியின் வெற்றிக்கு அவர் திறமையை வெளிப்படுத்துவது முக்கியமாகும்.

பெரிய பெளண்டரி எல்லையைக் கொண்ட ஹேக்லி ஓவல் மைதானம் பந்து வீச்சாளர்களுக்கு சாதகமாக இருப்பதோடு குறைந்த ஓட்டங்களே வழக்கமாக பெறப்படுகின்றன.

இன்று காலை மற்றும் நண்பகலில் மழை பெய்ய வாய்ப்பு இருப்பதாக எதிர்வுகூறப்பட்டிருக்கும் நிலையில் போட்டி ஆரம்பிப்பதில் தாமதம் ஏற்படலாம்.

எனினும் ஹேக்லி மைதனத்தில் இலங்கை அணி இதுவரை ஆடிய நான்கு போட்டிகளிலும் தோல்வியை சந்தித்திருப்பதோடு அதுவும் அதிக ஓட்ட வித்தியாசத்தில் தோல்வி அடைந்துள்ளது என்பதும் குறிப்பிடத்தக்கது.


Add new comment

Or log in with...