தொழிற்சங்க நடவடிக்கையே எரிபொருள் விநியோக தாமதத்திற்கு காரணம்

- மக்கள் அச்சம் கொள்ளத் தேவையில்லை
- போதிய எரிபொருள் கையிருப்பில்; நிரப்பு நிலையங்களில் குவிய வேண்டாம்

தொழிற்சங்கத்தினர் ஊழியர்களை கடமைக்கு வரவிடாமல் தடுத்ததன் காரணமாக எரிபொருள் விநியோகத்தில் ஏற்பட்ட தாமதம் வழமைக்கு திரும்பியுள்ளளதாக, மின்சக்தி மற்றும் வலுசக்தி அமைச்சர் கஞ்சன விஜேசேகர தெரிவித்துள்ளார்.

இதேவேளை, எரிபொருள் தட்டுப்பாடு இல்லையென பெற்றோலிய கூட்டுத்தாபனம் உறுதியளித்துள்ளதோடு, எரிபொருட்களை தடையின்றி வழங்க அரசாங்கம் உறுதியளிப்பதாகவும், பொதுமக்கள் பீதி அடைய வேண்டாம் என்பதோடு எரிபொருள் நிரப்பு நிலையங்களில் குவிய வேண்டாம் என, ஜனாதிபதி ஊடகப் பிரிவு விடுத்துள்ள அறிவித்தலில் தெரிவித்துள்ளது.

இலங்கை பெற்றோலிய கூட்டுத்தபானம் (CPC) மற்றும் இலங்கை பெற்றோலிய களஞ்சிய முனையம் (CPSTL) ஆகியவற்றின் ஊழியர்கள் ஆரம்பத்தில் கடந்த இரண்டு நாட்களாக சத்தியாக்கிரக போராட்டத்தில் ஈடுபட்டிருந்த நிலையில், திடீரென அதனை நிறைவுக்கு கொண்டு வந்து முன்னெடுக்கப்பட்ட வேலை நிறுத்த தொழிற்சங்க நடவடிக்கை காரணமாக, எரிபொருட்களின் விநியோகம் ஸ்தம்பிதமடைந்தது.

இதனைத் தொடர்ந்து, பீதியடைந்த மக்கள் எரிபொருள் நிரப்பு நிலையங்களில் குவியத் தொடங்கியதால், எரிபொருள் நிரப்பு நிலையங்களில் நீண்ட வரிசைகளை அவதானிக்கக் கூடியதாக இருந்தது.

இது தொடர்பில் தனது ட்விட்டர் கணக்கில் பதிவிட்டுள்ள மின்சக்தி மற்றும் வலுசக்தி அமைச்சர் கஞ்சன விஜேசேகர,

எரிபொருள் விநியோக தட்டுப்பாடு குறித்து பொதுமக்கள் அச்சம் கொள்ள வேண்டாம். நாட்டில் போதுமான எரிபொருள் கையிருப்பில் உள்ளது. விநியோகம் தொடரும். தொழிற்சங்க செயற்பாட்டாளர்கள் ஊழியர்களை கடமைக்கு வரவிடாமல் பலவந்தமாக தடுத்ததன் காரணமாக முன்னதாக தாமதமாகி வந்த எரிபொருள் விநியோகம், எரிபொருள் முனையங்கள் மற்றும் விநியோக பகுதிகளில் தேவையான பாதுகாப்பை பொலிசார் மற்றும் ஆயுதப்படையினர் வழங்கியதன் மூலம் இயல்பு நிலைக்கு கொண்டு வரப்பட்டுள்ளது.

 

 

முன்னதாக, தொழிற்சங்க நடவடிக்கை தொடர்பில் பதிவொன்றை இட்டிருந்த அவர்,

தொழிற்சங்க செயற்பாட்டாளர்கள் அல்லது ஊழியர்கள் எரிபொருள் விநியோகத்தை சீர்குலைத்தல் மற்றும் ஏனைய ஊழியர்களின் பணிக்கு இடையூறு விளைவிக்கும் அல்லது அத்தியாவசிய சேவை வழங்குகை செயற்பாட்டை மீறும் வகையில் நடந்து கொண்டால் அவ்வாறான ஊழியர்களுக்கு எதிராக, பணி நிறுத்தம் உள்ளிட்ட சட்டபூர்வ நடவடிக்கைகளை எடுக்கத் தேவையான ஒழுங்கு நடவடிக்கைகளை எடுக்குமாறு CPC மற்றும் CPSTL தலைவருக்கு நான் பணிப்புரை விடுத்துள்ளேன்.

 

 

எனத் தெரிவித்திருந்தார்.


Add new comment

Or log in with...