சம்பூர் சூரிய மின்னுற்பத்தி நிலையத்தை நிர்மாணிக்க அமைச்சரவை அனுமதி

- யாழ்., திருகோணமலை வளாக சித்த மருத்துவ பிரிவுகளை பீடங்களாக தரமுயர்த்தல்
- மின்னுற்பத்திக்கு தேவையான நிலக்கரி கொள்வனவு
- 3 வெளிநாட்டு நிறுவனங்களுக்கு எரிபொருள் விற்பனைக்கு அனுமதி
- வீதிப் பராமரிப்பு நிதியத்தை தாபித்தல்

இவ்வார அமைச்சரவைக் கூட்டத்தில் 19 முக்கிய முடிவுகள்

இலங்கை மின்சார சபை மற்றும் இந்திய தேசிய அனல் மின்சாரக் கூட்டுத்தாபன கூட்டு வர்த்தகக் கம்பனியால் திருகோணமலை சம்பூரில் அமைந்துள்ள சூரிய மின்னுற்பத்தி நிலையத்தை நிர்மாளிக்க அமைச்ரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.

இதற்கு முன்னர் சம்பூர் நிலக்கரி மின்னுற்பத்தி நிலையத்தை நிர்மாணிப்பதற்கு திட்டமிடப்பட்டிருந்த இடத்திலேயே 135 மெகாவாற்று சூரிய மின்னுற்பத்திக் கருத்திட்டத்தை 02 படிமுறைகளாக ஒருங்கிணைந்து நடைமுறைப்படுத்துவதற்காக இந்திய தேசிய அனல் மின்சாரக் கூட்டுத்தாபன கூட்டு வர்த்தகக் கம்பனிக்கும் இலங்கை மின்சார சபைக்கும் இடையில் உடன்பாடு எட்டப்பட்டுள்ளது.

இக்கருத்திட்டத்தின் 01 ஆம் கட்டத்தின் கீழ் 42.5 மில்லியன் அமெரிக்க டொலர்கள் முதலீட்டில் 50 மெகாவாற்று சூரிய மின்னுற்பத்திக் கருத்திட்டத்தை நடைமுறைப்படுத்தவும், 23.6 மில்லியன் அமெரிக்க டொலர்கள் மதிப்பீட்டு செலவில் சம்பூரிலிருந்து கப்பல்துறை வரைக்குமான 40 கிலோமீற்றர் தூரம் 220 கிலோவாற்று மின்மாற்று வழியை நிர்மாணிப்பதற்கு எதிர்பார்க்கப்படுகின்றது. இக்கட்டத்தை 2024 தொடக்கம் 2025 வரையான இரண்டு ஆண்டுகளில் பூர்த்தி செய்வதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது.

கருத்திட்டத்தின் 02 ஆம் கட்டம் 72 அமெரிக்க மில்லியன் டொலர்கள் முதலீட்டின் கீழ் மேலதிக 85 மெகாவாற்று இயலளவுடன் கூடிய சூரிய மின்னுற்பத்தி நிலையத்தை அமைப்பதற்கும் திட்டமிடப்பட்டுள்ளது. அத்துடன், குறித்த 02 ஆம் கட்டத்தின் கீழ் உற்பத்தி செய்யப்படும் மின்சாரத்தை விநியோகிப்பதற்காக 42 மில்லியன் அமெரிக்க டொலர்கள் செலவில் கப்பல்துறையிலிருந்து புதிய ஹபரண வரைக்குமான 220 கிலோவாற்று இயலளவுடன் கூடிய 76 கிலேமீற்றர் தூரம் மின்மாற்று வழியை அமைப்பதற்கும் திட்டமிடப்பட்டுள்ளது. அதற்கமைய, குறித்த கருத்திட்டத்தை நடைமுறைப்படுத்துவதற்குத் தேவையான படிமுறைகளை மேற்கொள்வதற்காக மின்சக்தி மற்றும் வலுசக்தி அமைச்சர் சமர்ப்பித்த யோசனைக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.

2. இலங்கை யாழ்ப்பாணப் பல்கலைக்கழகம் மற்றும் கிழக்குப் பல்கலைக்கழகத்தின் திருகோணமலை வளாகத்தில் தற்போது காணப்படுகின்ற சித்த மருத்துவ பிரிவுகளை தரமுயர்த்துதல்
யாழ்ப்பாணப் பல்கலைக்கழகம் மற்றும் இலங்கை கிழக்குப் பல்கலைக்கழகத்தின் திருகோணமலை வளாகத்தில் தற்போது காணப்படுகின்ற சித்த மருத்துவ பிரிவுகளைப் பீடங்களாகத் தரமுயர்த்துதல் பற்றி 2023.02.06 அன்று இடம்பெற்ற அமைச்சரவைக் கூட்டத்தில் கலந்துரையாடப்பட்டது.

அதற்காக போதியளவு கல்வி மற்றும் ஊழியர்கள் வசதிகள் உள்ளனவா என்பதை ஆராய்ந்து பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவின் அறிக்கையைப் பெற்றுக் கொள்வதற்குத் தீர்மானிக்கப்பட்டது.

அதற்கமைய, சித்த மருத்துவ பிரிவுகளைப் பீடங்களாக மாற்றம் செய்வதற்குப் போதுமானளவு மனிதவளம் மற்றும் பௌதீக வளங்கள் காணப்படுவதாக பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழு உறுதிப்படுத்தியுள்ளது.

கல்வி அமைச்சர் சமர்ப்பித்த குறித்த விடயங்களைக் கருத்தில் கொண்டு குறித்த சித்த மருத்துப் பிரிவுகளை, பீடங்களாகத் தரமுயர்த்துவதற்குத் தேவையான நடவடிக்கைகளை மேற்கொள்வதற்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.

3. 2023/2024 காலப்பகுதிக்கான நுரைச்சோலை லக்விஜய நிலக்கரி மின்னுற்பத்தி நிலையத்திற்குத் தேவையான நிலக்கரி பெறுகை
2023/2024 காலப்பகுதிக்கு நுரைச்சோலை லக்விஜய நிலக்கரி மின்னுற்பத்தி நிலையத்திற்கு 2.25 மில்லியன் மெற்றிக்தொன் நிலக்கரி தேவையென மதிப்பீடு செய்யப்பட்டுள்ளது.

அதற்கமைய, குறித்த பெறுகை செயன்முறையை நடைமுறைப்படுத்துவதற்காக மின்சக்தி மற்றும் வலுசக்தி அமைச்சர் சமர்ப்பித்த யோசனைக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.

4. நீண்டகால ஒப்பந்தங்களின் அடிப்படையில் இலங்கையில் பெற்றோலியப் பொருட்கள் உற்பத்திகள் இறக்குமதி, களஞ்சியப்படுத்தல், விநியோகித்தல் மற்றும் விற்பனை செய்தலுக்கான கம்பனிகளைத் தெரிவு செய்தல்
நீண்டகால ஒப்பந்தங்களின் அடிப்படையில் இலங்கையில் பெற்றோலியப் பொருட்கள் உற்பத்திகள் இறக்குமதி, களஞ்சியப்படுத்தல், விநியோகித்தல் மற்றும் விற்பனை செய்தலுக்கான விருப்பக் கோரல்களுக்காக 2022.06.27 அன்று இடம்பெற்ற அமைச்சரவைக் கூட்டத்தில் அங்கீகாரம் வழங்கப்பட்டுள்ளது.

அதற்கமைய, 26 கம்பனிகள் தமது விண்ணப்பங்களைச் சமர்ப்பித்துள்ளதுடன், தொழிநுட்ப மதிப்பீட்டுக் குழு மற்றும் அமைச்சரவையால் நியமிக்கப்பட்டுள்ள விசேட குழுவின் முன்மொழிவுகளுக்கான விருப்பக் கோரல்களைச் சமர்ப்பிப்பதற்குத் தகைமை பெற்ற 13 கம்பனிகள் பரிந்துரைக்கப்பட்டுள்ளது.

அதற்கமைய, 07 கம்பனிகள் விபரங்களுடன் கூடிய முன்மொழிவுகளை சமர்ப்பித்துள்ளன. குறித்த முன்மொழிவுகள் தொடர்பாக தொழிநுட்ப மதிப்பீட்டுக் குழு, அமைச்சரவையால் நியமிக்கப்பட்டுள்ள விசேட குழு மற்றும் பெறுகை மேன்முறையீட்டு சபை போன்றவற்றால் சமர்ப்பிக்கப்பட்டுள்ள பரிந்துரைகளின் அடிப்படையில் 2022 ஆம் ஆண்டின் 33 ஆம் இலக்க பெற்நோலிய உற்பத்திகள் (விசேட ஏற்பாடுகள்) (திருத்தப்பட்ட) சட்டத்தின் ஏற்பாடுகளுக்கமைய இலங்கையில் பெற்றோலியப் பொருட்கள் உற்பத்திகள் இறக்குமதி, களஞ்சியப்படுத்தல், விநியோகித்தல் மற்றும் விற்பனை செய்வதற்காக கீழ்க்காணும் நிறுவனங்களுடன் ஒப்பந்தங்களை மேற்கொள்வதற்காக மின்சக்தி மற்றும் வலுசக்தி அமைச்சர் சமர்ப்பித்த யோசனைக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.

  • Sinopec Fuel Oil Pvt Ltd (சைனோபெக் ஃபுவல் ஒயில் லங்கா தனியார் நிறுவனம்)
  • United Petroleum Australia (அவுஸ்திரேலியா யுனைட்டெட் பெற்றோலியம் நிறுவனம்)
  • RM Parks USA (ஐக்கிய அமெரிக்க இராச்சியத்தின் ஆர்.எம்.பார்க்ஸ் நிறுவனம்)

5. வட்டியில்லா மாணவர் கடன் திட்டத்தின் கீழ் அரசு சாரா உயர்கல்வி நிறுவனங்களில் பட்டப்படிப்பை மேற்கொள்வதற்கான வசதிகளை வழங்கல்
அரச பல்கலைக்கழகங்களில் உள்வாங்குவதற்கான வெட்டுப்புள்ளிகள் போதியளவு இல்லாத மாணவர்களுக்கு, அரசு சாரா, பட்டப்படிப்பை மேற்கொள்கின்ற அங்கீகரிக்கப்பட்ட நிறுவனங்களில் பட்டப்படிப்பை தொடர்வதற்காக வட்டியில்லா கடன் வசதிகள் வழங்கும் கருத்திட்டத்தை நடைமுறைப்படுத்துவதற்காக 2017.04.04 அன்று இடம்பெற்ற அமைச்சரவைக் கூட்டத்தில் அங்கீகாரம் வழங்கப்பட்டுள்ளது.

தற்போது ஐந்து (05) மாணவர் அணிகள் இந்நிகழ்ச்சித்திட்டத்தின் கீழ் நன்மைகளைப் பெற்றுள்ளதுடன், ஆறாவது (06) அணிக்குத் தகைமை பெறுகின்ற மாணவர்கள் தற்போது அடையாளங் காணப்பட்டுள்ளனர்.

அதற்கமைய, இதுவரை கடைப்பிடிக்கப்பட்டு வந்த பொறிமுறைக்கமைய வட்டியில்லா மாணவர் கடன் திட்டத்தைத் தொடர்ந்து மேற்கொண்டு செல்வதற்கும், அதன் கீழ் ஏழாவது (07) அணியில் 5,000 மாணவர்களுக்கான வசதிகளை வழங்குவதற்கு கல்வி அமைச்சர் சமர்ப்பித்துள்ள யோசனைக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.

6. வீதிப் பராமரிப்பு நிதியத்தை தாபித்தல்
ஜனாதிபதியினால் 2023 ஆம் ஆண்டு வரவு செலவுத்திட்டத்தில் வீதிப் பராமரிப்புக்களுக்கான நிதியமொன்றை தாபிப்பதற்கான முன்மொழிவு சமர்ப்பிக்கப்பட்டுள்ளதுடன், அதற்கான ஆரம்ப நிதியாக 100 மில்லியன் ரூபாய்களை ஒதுக்கீடு செய்வதற்கும் முன்மொழியப்பட்டுள்ளது.

குறித்த நிதியத்தைத் தாபித்து பேணிச் செல்வதற்காக பொருத்தமான பொறிமுறையொன்றை தயாரிக்கின்ற பொறுப்பு போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைகள் அமைச்சுக்கு ஒப்படைக்கப்பட்டுள்ளது.

அதற்கமைய, போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைகள் அமைச்சரால் சமர்ப்பிக்கப்பட்டுள்ள முன்மொழிவைக் கருத்தில் கொண்டு, உத்தேசிக்கப்பட்டுள்ள நிதியத்தை பாராளுமன்ற சட்டத்தின் மூலம் தாபிப்பதற்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.

7. ஆசிய – பசுபிக் சுற்றாடல் அமைச்சர்கள் மற்றும் சுற்றாடல் அதிகாரிகளின் ஒன்றியத்தால் நடாத்தப்படும் கூட்டத்தொடருக்கு வசதியளித்தல்
2024 ஆம் ஆண்டு பெப்ரவரி மாதத்தில் கென்யாவின் நயிறோபி நகரில் நடாத்துவதற்குத் திட்டமிடப்பட்டுள்ள ஐக்கிய நாடுகள் சபையின் சுற்றாடல் மாநாட்டின் 6 ஆவது கூட்டத்தொடரில் பிராந்திய சுற்றாடல் நிகழ்ச்சி நிரல் தொடர்பான கருத்துக்கள் மற்றும் முன்மொழிவுகளை வழங்கவதற்காக ஆசிய – பசுபிக் சுற்றாடல் அமைச்சர்கள் மற்றும் சுற்றாடல் அதிகாரிகளின் ஒன்றியத்தால் நடாத்தப்படும் ஐந்தாவது கூட்டத்தொடர் 2023 ஆம் ஆண்டின் நான்காவது காலாண்டில் இலங்கையில் நடாத்துவதற்குத் திட்டமிடப்பட்டுள்ளது.

அதற்கமைய, குறித்த ஒன்றியத்தின் ஐந்தாவது கூட்டத்தொடருக்கான வசதியளிப்புக்களை மேற்கொள்வதற்காக சுற்றாடல் அமைச்சர் சமர்ப்பித்து யோசனைக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.

8. உலர்ந்த பாக்கு பதனிடல் கைத்தொழில் தொடர்பான நடவடிக்கை முறைகள்
உள்ளூரில் உற்பத்தி செய்யப்படுகின்ற உலர்ந்த பாக்கு ஏற்றுமதி செய்தல் மற்றும் உலர்ந்த பாக்கு இறக்குமதி செய்து பெறுமதி சேர்க்கையின் பின்னர் மீள் ஏற்றுமதி செய்தல் தொடர்பான யோசனை 2023.03.13 அன்று இடம்பெற்ற அமைச்சரவைக் கூட்டத்தில் கலந்துரையாடலுக்கு எடுத்துக் கொள்ளப்பட்டுள்ளது.

அது பற்றிய விடயங்களை ஆராய்ந்து அமைச்சரவைக்குப் பரிந்துரைகளுடன் கூடிய அறிக்கையை சமர்ப்பிப்பதற்காக ஜனாதிபதியின் சிரேஷ்ட ஆலோசகர் தலைமையிலான அதிகாரிகள் குழுவொன்று நியமிக்கப்பட்டுள்ளது.

அதற்கமைய, குறித்த குழுவால் பரிந்துரைக்கப்பட்டுள்ள உள்ளூரில் உற்பத்தி செய்யப்படும் உலர்ந்த பாக்குகளை ஏற்றுமதி செய்வதற்கான நடவடிக்கை முறைகள் மற்றும் பெறுமதி சேர்க்கையின் பின்னரான மீள் ஏற்றுமதிக்காக உலர்ந்த பாக்குகளை இறக்குமதி செய்வதற்கான நடவடிக்கை முறைகளுக்காக அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.

9. 2010 ஆம் ஆண்டின் 14 ஆம் இலக்க குடியியல் வான்செலவுகள் சட்டத்தின் 6(3)(உ) பிரிவை திருத்தம் செய்தல்
வான்வழிச் சேவைகள் துறைகளை அரச தனியார் பங்குடமைக்காக திறந்து விடுதல் மற்றும் தனியார் நிறுவனங்களால் குறித்த துறைகளில் முதலிடுதல் போன்றன ஏற்புடைய துறைகளின் துரித வளர்ச்சிக்கும் ஒட்டுமொத்தமான விமான சேவைகள் தொழிற்றுறையின் விருத்திக்கும் ஏதுவாக அமையுமெனக் கண்டறியப்பட்டுள்ளது.

அதற்கமைய, அதற்கான வாய்ப்புக்களை ஏற்படுத்தும் வகையில் வான்வழிச் சேவைகளை வழங்குவதற்காக சேவை வழங்குநர்களாக தனிநபரொருவர் அல்லது அதற்கு மேலதிகமான எண்ணிக்கையை நியமிப்பதற்கு இயலுமாகும் வகையில்  2010 ஆம் ஆண்டின் 14 ஆம் இலக்க குடியியல் வான்செலவுகள் சட்டத்தைத் திருத்தம் செய்வதற்காக சட்ட வரைஞருக்கு ஆலோசனை வழங்குவதற்காக துறைமுகங்கள், கப்பல்துறை மற்றும் விமான சேவைகள் அமைச்சர் சமர்ப்பித்த யோசனைக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.

10. தர உறுதிப்பாடு மற்றும் சான்றுப்படுத்தல் ஆணைக்குழுவை (Quality assurance and Accredit Commission) தாபிப்பதற்கான அனுமதியைப் பெறல்
உயர் கல்வி (தர உறுதிப்பாடு மற்றும் சான்றுப்படுத்தல்) சட்டமூலத்தை அரச வர்த்தமானியில் வெளியிட்டு பாராளுமன்ற அங்கீகாரத்திற்காக சமர்ப்பிப்பதற்காக 2019.04.02 அன்று இடம்பெற்ற அமைச்சரவைக் கூட்டத்தில் அங்கீகாரம் வழங்கப்பட்டிருப்பினும், குறித்த சட்டமூலத்தை அச்சந்தர்ப்பத்தில் பாராளுமன்ற அங்கீகாரத்திற்காக சமர்ப்பிதற்கு இயலாமல் போயுள்ளது.

அச்சந்தர்ப்பத்தில் குறித்த சட்டமூலத்தை குழுநிலை விவாதத்தின் போது சமர்ப்பிப்பதற்கு சட்டமா அதிபர் அவர்களால் முன்மொழியப்பட்டிருந்த ஒருசில திருத்தங்கள் மற்றும் பல்வேறு தரப்பினர்களால் வழங்கப்பட்டுள்ள அவதானிப்புக்கள் மற்றும் முன்மொழிவுகளை ஆராய்ந்த பின்னர் புதிய ஏற்பாடுகள் உட்சேர்க்கப்பட்டு சட்டவரைஞரால் தயாரிக்கப்பட்டுள்ள உயர் கல்வி (தர உறுதிப்பாடு மற்றும் சான்றுப்படுத்தல்) சட்டமூலத்தை மேலும் திருத்தம் செய்வது பொருத்தமானதெனக் கண்டறியப்பட்டுள்ளது.

அதற்கமைய, புதிய சட்டமூலத்தை தயாரிப்பதற்காக சட்டவரைஞருக்கு ஆலோசனை வழங்குவதற்காக கல்வி அமைச்சர் சமர்ப்பித்த யோசனைக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.

11. இலங்கை விவசாய நிறுவனத்தை கூட்டிணைப்பாக மாற்றுதல்
இலங்கையின் விவசாய அபிவிருத்திக்காக உணவுப் பயிர்கள், பெருந்தோட்டப் பயிர்கள், ஏற்றுமதி விவசாயப் பயிர்கள், கால்நடை உற்பத்திகள், பூங்கன்றுகள் மற்றும் அலங்காரத் தாவரங்கள், சுற்றாடல் மற்றும் வனவளப் பாதுகாப்பு மற்றும் கமநல அபிவிருத்தி போன்ற பல்வேறுபட்ட துறைகளுக்கு ஏற்புடைய வகையில் கூட்டு அணுகு முறையை நடைமுறைப்படுத்த வேண்டியுள்ளமையால், அதற்குப் பல்வேறு நிறுவனங்களின் கீழ் காணப்படும் விடயதானங்கள் தொடர்பாக உயர் நிபுணத்துவத்துவங்களுடன் கூடிய விவசாய தொழில்வாண்மையாளர்களை தொழிநுட்ப ரீதியாக ஒருங்கிணைக்கின்ற கட்டமைப்பை தாபிப்பத பொருத்தமானதெனக் கண்டறியப்பட்டுள்ளது.

அதற்கமைய, விவசாய தொழில்வாண்மையாளர் சேவைகளின் தரப்பண்பு மற்றும் ஒழுக்கநெறிகளை உறுதிப்படுத்தும் வகையில் விவசாய தொழில்வாண்மையாளர்கள் 1,000 பேருக்கும் அதிகமாக அங்கத்தவர்களைக் கொண்டுள்ள இலங்கை விவசாய நிறுவனத்தை கூட்டிணைப்பதற்கும், அதற்காக சட்டமூலத்தை தயாரிப்பதற்காக சட்டவரைஞருக்கு ஆலோசனை வழங்குவதற்காக விவசாய அமைச்சர் சமர்ப்பித்த யோசனைக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.

12. பிரதிப் பொலிஸ்மா அதிபர் பிரிவுகளை எல்லை நிர்ணயம் செய்தல்
ஜனாதிபதியினால் 09 ஆவது பாராளுமன்றத்தின் 04 ஆவது கூட்டத்தொடரை ஆரம்பித்து வைத்து சமர்ப்பிக்கப்பட்ட கொள்கைப் பிரகடனத்தில் தற்போது காணப்படுகின்ற பிரதிப் பொலிஸ்மா அதிபர் பிரிவுகளின் எல்லைகள் சமகாலத்தில் காணப்படுகின்ற மாகாண எல்லைகளுக்கமைய சமமாக அமையாதமையால் ஏற்படுகின்ற நடைமுறை ரீதியான சிரமங்கள் மற்றும் நிர்வாக ரீதியாக ஏற்படுகின்ற பிரச்சினைகளைத் தவிர்ப்பதற்காக மாகாண அடிப்படையில் பிரதிப் பொலிஸ்மா அதிபர் பிரிவுகளை எல்லை நிர்ணயம் செய்ய வேண்டிய தேவை சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

அதற்கமைய, பிரதிப் பொலிஸ்மா அதிபர் பிரிவுகளை எல்லை நிர்ணயம் செய்வதற்காக பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சின் செயலாளரின் தலைமையில் அதிகாரிகள் குழுவொன்றை நியமிப்பதற்காக ஜனாதிபதி சமர்ப்பித்த யோசனை தொடர்பாக அமைச்சரவை உடன்பாடு வழங்கியுள்ளது.

13. சர்வதேச பூச்சியக் கழிவுகள் தினத்தைக் (International Zero waste Day) கொண்டாடும் தேசிய நிகழ்ச்சித்திட்டம்
ஒவ்வொரு ஆண்டும் மார்ச் மாதம் 30 ஆம் திகதியை சர்வதேச பூச்சிய கழிவுகள் தினமாகப் பிரகடனப்படுத்துகின்ற முன்மொழிவு துருக்கிக் குடியரசின் தலைமையில் 2022.12.14 அன்று ஐக்கிய நாடுகள் சபையின் பொதுச் சபையால் வெளியிடப்பட்டது.

நிலைபெறுதகு அபிவிருத்திக்கான 2030 ஆம் ஆண்டின் நிகழ்ச்சிநிரலை முன்னெடுத்துச் செல்வதற்காக சர்வதேச பூச்சியக் கழிவுகள் தொடர்பான அடிப்படைச் செயற்பாடுகளை ஊக்குவிப்பதே இத்தினம் பிரகடனப்படுத்தப்பட்டமைக்கான நோக்கமாகும்.

அதற்கமைய, சுற்றாடல் அமைச்சர் மற்றும் ஏனைய ஏற்புடைய பங்கீடுபாட்டு நிறுவனங்களின் பங்குபற்றலுடன் 2023.03.30 ஆம் திகதி சர்வதேச பூச்சியக் கழிவுகள் தினத்தைக் கொண்டாடுவதற்கான தேசிய நிகழ்ச்சித்திட்டத்தை நடாத்துவதற்காக சுற்றாடல் அமைச்சர் அவர்கள் சமர்ப்பித்துள்ள யோசனைக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.

14. 1979 ஆம் ஆண்டின் 40 ஆம் இலக்க இலங்கை ஏற்றுமதி அபிவிருத்தி சட்டத்தின் கீழ் ஆக்கப்பட்டுள்ள ஒழுங்குவிதிகளை அங்கீகாரத்திற்காக சமர்ப்பித்தல்
1979 ஆம் ஆண்டின் 40 ஆம் இலக்க இலங்கை ஏற்றுமதி அபிவிருத்தி சட்டத்தின் 14 ஆம் பிரிவின் கீழ் ஆக்கப்பட்டுள்ள, 2023.01.01 ஆம் திகதிய 2312/76 ஆம் இலக்க அதிவிசேட வர்த்தமானி அறித்தல் மூலம் வெளியிடப்பட்டுள்ள ஒழுங்குவிதிகளை, பாராளுமன்ற அங்கீகாரத்திற்காக சமர்ப்பிப்பதற்காக முதலீட்டு ஊக்குவிப்பு அமைச்சராக ஜனாதிபதி சமர்ப்பித்த யோசனைக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.

15. 2023 ஆம் ஆண்டின் அரச வெசாக் உற்சவம் நடாத்துதல்
அதிவணக்கத்திற்குரிய மஹாநாயக்க தேரர்கள் மற்றும் ஒட்டுமொத்த இலங்கை பௌத்த சமாசங்களின் பரிந்துரைகளுக்கமைய 2023 (புனித பௌத்த வருடம் 2567) அரச வெசாக் உற்சவத்தை பொது நிருவாக உள்நாட்டலுவல்கள், மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி அமைச்சு, புத்தசாசன, சமய மற்றும் கலாச்சார விவகாரங்கள் அமைச்சு மற்றும் பௌத்த விவகாரங்கள் திணைக்களமும் இணைந்து புத்தளம் மாவட்டத்தின் சிலாபம், மாதம்பே கெபல்லாவெல ஸ்ரீ ரதனசிறி பிரிவெனா விகாரையில் நடாத்துவதற்குத் திட்டமிடப்பட்டுள்ளது.

அதற்கமைய, 2023.05.02 ஆம் திகதி தொடக்கம் 2023.05.08 ஆம் திகதி வரை வெசாக் வாரமாகப் பிரகடனப்படுத்துவதற்கும், அதற்கு இணையாக பல்வேறு சமய மற்றும் கலாச்சார நிகழ்ச்சித்திட்டங்களை நடைமுறைப்படுத்துவதற்காக புத்தசாசன, சமய மற்றும் கலாச்சார விவகாரங்கள் அமைச்சர் அவர்கள் சமர்ப்பித்த யோசனைக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.

16. மீள்புதிப்பிக்கத்தக்க வலுசக்தி துறையின் ஒத்துழைப்புக்கான புரிந்துணர்வு ஒப்பந்தம்
2030 ஆம் ஆண்டு தொடக்கம் ஒட்டுமொத்த மின்சாரத் தேவையின் 70% வீதமானவை மீள்புதிப்பிக்கத்தக்க வலுசக்தி ஆற்றல் வளங்கள் மூலம் பெற்றுக்கொள்ளல், வலுசக்தி விநியோகத்தில் சுயாதீனமடைதல், மற்றும் 2050 ஆம் ஆண்டாகும் போது காபன் வெளியீட்டை பூச்சியமாக்குதல் போன்றவற்றை அரசு கொள்கைப் பிரகடனமாக வெளியிட்டுள்ளது.

அந்நிலைமையை அடைவதை நோக்கமாகக்  கொண்டு இந்தியா மற்றும் இலங்கை தனியார் மற்றும் அரச துறையின் தொழில்முயற்சியாளர்கள் ஒருங்கிணைந்து வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்கள் உள்ளடங்கலாக, பரஸ்பர உடன்பாடுகள் எட்டப்பட்ட ஏனைய பிரதேசங்களிலும் சூரிய மின்னுற்பத்தி, கடலோர காற்றாலை மின்னுற்பத்தி, மற்றும் உயிர்த்திணிவுசார் மின்னுற்பத்தி கருத்திட்டங்கள் மற்றும் தொடர் மின்மாற்றல் உட்கட்டமைப்பு வசதிகளை ஒருங்கிணைந்து மேற்கொள்வதற்கு மற்றும்/அல்லது வசதியளித்தல் மூலம் மீள்புதிப்பிக்கத்தக்க வலுசக்தித் துறையில் ஒத்துழைப்புக்களை அதிகரிப்பதற்கும் மற்றும் வலுப்படுத்துவதற்கும் இந்தியக் குடியரசு உடன்பாடு தெரிவித்துள்ளது.

அதற்கமைய, இந்திய குடியரசு மற்றும் இலங்கை அரசுக்கும் இடையில் மீள்புதிப்பிக்கத்தக்க வலுசக்தி துறையின் ஒத்துழைப்பு பற்றிய புரிந்துணர்வு ஒப்பந்தத்தை மேற்கொள்வதற்காக மின்சக்தி மற்றும் வலுசக்தி அமைச்சர் அவர்கள் சமர்ப்பித்த யோசனைக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.

17. கொரியாவின் செமாவுல் உன்டொங் (Saemaul Undong Movement) வேலைத்திட்டத்தை இலங்கையில் நடைமுறைப்படுத்துவதற்காக புரிந்துணர்வு ஒப்பந்தத்தை மேற்கொள்ளல்
உட்கட்டமைப்பு வசதிகள், வாழ்வாதாரம், நலன்புரி மற்றும் கல்வி போன்றவற்றை மேம்படுத்தி கொரியாவிலுள்ள கிராமிய பிரதேசங்களில் காணப்படுகின்ற மரபுரீதியான கமநலப் பொருளாதாரம், கைத்தொழில்மய ஏற்றுமதியை அடிப்படையாகக் கொண்ட பொருளாதாரமாக மாற்றுவதற்காக 1970 ஆம் ஆண்டு தொடக்கம் கொரிய குடியரசால் நடைமுறைப்படுத்தப்பட்டு வருகின்ற செமாவுல் உன்டொங் வேலைத்திட்டம் மிகவும் ஏதுவாக அமைந்துள்ளது.

செமாவுல் எண்ணக்கருவை வேறு நாடுகளுக்கும் விரிவுபடுத்தும் நோக்கில் கொரிய குடியரசால் 2013 ஆம் ஆண்டில் தாபிக்கப்பட்டுள்ள செமாவுல் மன்றத்துடன் இணைந்து புரிந்துணர்வு ஒப்பந்தமொன்றை மேற்கொண்டு இலங்கையிலும் 2015 ஆம் ஆண்டு செமாவுல் வேலைத்திட்டம் சப்ரகமுவ மாகாண சபையால் ஆரம்பிக்கப்பட்டது.

குறித்த புரிந்துணர்வு ஒப்பந்தத்தின் காலப்பகுதி தற்போது முடிவடைந்துள்ளது. செமாவுல் உன்டொங் எண்ணக்கருவின் கீழ் இலங்கையில் அனைத்து மாகாணங்களையும் உள்ளடக்கியதாக கருத்திட்டங்களை நடைமுறைப்படுத்தக் கூடிய வகையில் புதிய புரிந்துணர்வு ஒப்பந்தமொன்றில் கையொப்பமிடுவதற்கு யோசனை தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதற்கமைய, பொது நிருவாக, உள்நாட்டலுவல்கள், மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி அமைச்சு, வெளிநாட்டு வளங்கள் திணைக்களம் மற்றும் செமாவுல் மன்றத்திற்கும் இடையிலான முத்தரப்பு புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் கையொப்பமிடுவதற்காக பொது நிருவாக, உள்நாட்டலுவல்கள், மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி அமைச்சராக கௌரவ பிரதமர் அவர்கள் சமர்ப்பித்த யோசனைக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.

18. வரையறுக்கப்பட்ட தேசிய வியாபார முகாமைத்துவக் கற்கைகள் நிறுவனத்தை (NSBM) உத்தரவாதத்தால் வரையறுக்கப்பட்ட கம்பனியாக மாற்றம் செய்தல்
1976 ஆம் ஆண்டின் 23 ஆம் இலக்க தேசிய வியாபார முகாமைத்துவ நிறுவனச் சட்டத்தின் ஏற்பாடுகளுக்கமைய தாபிக்கப்பட்டுள்ள தேசிய வியாபார முகாமைத்துவ நிறுவனத்திற்கு (NIBM) சொந்தமான நிர்வாகக் கம்பனியாக வரையறுக்கப்பட்ட தேசிய வியாபார முகாமைத்துவ கற்கைகள் நிறுவனம் (NSBM) தாபிக்கப்பட்டுள்ளது.

ஹோமாகம பிரதேசத்தில் நவீன முறையிலான பல்கலைக்கழகமாக தாபிக்கப்பட்டுள்ள குறித்த கற்கைகள் நிறுவனம் தற்போது பட்டப்படிப்பு மற்றும் பட்டப்பின் படிப்பை வழங்குகின்ற நிறுவனமாக நடாத்தப்பட்டு வருகின்றது. தற்போது குறித்த கற்கைகள் நிறுவனத்தில் 11,500 மாணவர்களுக்கும் அதிகமாக 05 பீடங்களில் 50 பட்டப்படிப்புக்களுக்கும் அதிக கற்கை நடவடிக்கைகளை மேற்கொள்வதற்கான வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது.

உலகளாவிய தரப்படுத்தலுக்கமைய முன்னணி வகிக்கின்ற கல்வி நிறுவனங்களின் கட்டமைப்புக்களுக்குச் சமமான கட்டமைப்புக்களைப் பின்பற்றுவதன் மூலம் NSBM நிறுவனத்தின் நடவடிக்கைகளை மேலும் பயனுள்ள வகையிலும், சர்வதேச ரீதியான தரநியமங்களுக்கமைவாக நடாத்திச் செல்வதற்கும் இயலுமெனக் கண்டறிப்பட்டுள்ளது.

அதற்கமைய, தேவையான கட்டமைப்பு ரீதியான மாற்றங்களை மேற்கொள்ளக் கூடிய வகையில் 2007 ஆம் ஆண்டின் 07 ஆம் இலக்க கம்பனிகள் சட்டத்தின் 32 ஆம் உறுப்புரையின் ஏற்பாடுகளுக்கமைய NSBM நிறுவனத்தின் அமைப்பு விதிகளை உத்தரவாதத்தால் வரையறுக்கப்பட்ட கம்பனியாக மாற்றுவதற்குத் தேவையான படிமுறைகளை மேற்கொள்வதற்காக கல்வி அமைச்சர் அவர்கள் சமர்ப்பித்துள்ள யோசனைக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கப்பட்டுள்ளது. 

19. சிகிரியாவை நிலைபெறுதகு பயண மையமாக அபிவிருத்தி செய்தல்
உலக மரபுரிமையாகவும், இலங்கையின் முக்கிய தொல்லியல் இடமாகவும், சிகிரியா உள்ளூர் மற்றும் வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகளின் கவர்ச்சிமிக்க சுற்றுலா மையமாக அமைவதுடன், அது எமது நாட்டின் சுற்றுலா மையங்களில் அதிகளவான வருமானத்தை ஈட்டுகின்ற இடமாகவும் அமைந்துள்ளது.

ஆனாலும் சுற்றுலா மையமாக அதனை முகாமைத்துவப்படுத்தும் போது மேலெழுகின்ற பிரச்சினைகளைக் கருத்தில் கொண்டு குறித்த அனைத்துத் தரப்பினர்களின் ஒத்துழைப்புக்களுடன், சிகிரியாவை நிலைபெறுதகு பயண மையமாக அபிவிருத்தி செய்வதற்காக பிரதான திட்டத்தை ((Master Plan) தயாரிப்பதற்காக சுற்றுலா மற்றும் காணி அமைச்சர் மற்றும் புத்தசாசன, கலாச்சார மற்றும் சமய அலுவல்கள் அமைச்சர் அவர்களும் இணைந்து சமர்ப்பித்த யோசனைக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.  


Add new comment

Or log in with...