லெபனானில் இரு நேர வலயங்களால் குழப்பம்

லெபனானில் அரசியல் மற்றும் மத நிறுவனங்களுக்கு இடையிலான மோதலால் அந்நாட்டில் சம காலத்தில் இரு நேர வலயங்கள் செயற்படுத்தப்பட்டிருப்பது மக்களுக்கு பெரும் குழப்பத்தை ஏற்படுத்தியுள்ளது.

லெபனானில் பகலொளி சேமிப்பு நேரம், நோன்பு மாதத்திற்குப் பின்னர் ஆரம்பிக்கப்படும் என்று அந்நாட்டு இடைக்கால பிரதமர் நஜிப் மிகாதி அறிவித்துள்ளார். இது முஸ்லிம்களுக்கு தமது நோன்பை முன்கூட்டியே திறப்பதற்கு உதவும் என்று அவர் கூறியுள்ளார்.

எனினும் ஆண்டில் பகலொளி சேமிப்பு நேரம் வழக்கமாக நிகழ்ந்து வரும் கடந்த ஞாயிற்றுக்கிழமை (மார்ச் 26) தொடக்கம் ஆரம்பித்ததாக அந்நாட்டு கிறிஸ்தவ நிர்வாகம் அறிவித்துள்ளது.

இதனால் சில வர்த்தகங்கள் மற்றும் அலுவலகங்கள் அரசின் அறிவிப்பையும் மேலும் சிலது வழக்கமான போக்கிலும் தமது செயற்பாடுகளை ஆரம்பித்ததால் நாட்டில் பெரும் குழப்பம் ஏற்பட்டுள்ளது.

லெபனானின் மூன்று தொலைக்காட்சிகள் ஞாயிறு தொடக்கம் தமது நேரத்தை மாற்றியபோதும் மத்திய கிழக்கு விமான சேவைகள் அரசின் அறிவிப்பை பின்பற்றி நேரத்தை மாற்றாமல் இருக்க தீர்மானித்தன.

இந்நிலையில் கைபேசிகள், மடிக்கணினிகள் மற்றும் மின் சாதனப் பொருட்களில் இந்த நேர மாற்றம் செயற்படுத்துவது குறித்து அரசு இன்னும் தெளிவுபடுத்தாமல் உள்ளது.

ஏற்கனவே பொருளாதார நெருக்கடியில் இருக்கும் லெபனானில் அரசியல் கட்சிகள் மதப் பிரிவுகளாகவே செயற்படுகின்றன. அங்கும் 1970கள் மற்றும் 80களில் கிறிஸ்தவ மற்றும் முஸ்லிம் தரப்புகள் இடையே சிவில் யுத்தம் இடம்பெற்றமை குறிப்பிடத்தக்கது.

பகலொளி சேமிப்பு நேரம் என்பது வழக்கமான நேரத்தை கோடை மாதங்களில் முன்னோக்கி நகர்த்தும் பல நாடுகளிலும் பின்பற்றப்படும் வழக்கமாக உள்ளது. இது கோடை மாதங்களின் பகல் நேரத்தையும் வேலை, பாடசாலை நேரங்களையும் ஒருமுகப்படுத்தும் வகையில் மேற்கொள்ளப்படுகிறது.

“சேமிக்கப்பட்ட” பகலொளி மாலையில் உல்லாச நிகழ்வுகளுக்கு பயன்படுத்தப்படுகிறது. இம்முறை பின்பற்றப்படாவிட்டால், காலையில் சூரிய ஒளி தூக்கத்தில் வீணடிக்கப்படும்.


Add new comment

Or log in with...